Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday, 24 March 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன?


ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே சுட்டவும். 

"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"

மேற்கண்ட தலைப்பில் நேற்று ஒரு பதிவை காண நேர்ந்தது. முஸ்லிம் நாடுகள் சில, ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான(?) தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்ததால் இப்படியான தலைப்பு. இந்த தீர்மானத்தை எதிர்த்ததால் மனிதாபிமான முகமூடி கிழிவதாக கணக்கிட்டால் சீனா, ரஷ்யா, கியூபா, காங்கோ, தாய்லாந்து, ஈக்குவடார் போன்ற  நாடுகளின் மனிதாபிமான முகமூடியும் கிழிந்ததாக அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் அந்த தீர்மானத்தை எதிர்த்ததில் இந்நாடுகளும் அடங்கும். ஆனால் இந்த நாடுகளின் மனிதாபிமானத்தை மேற்கண்ட கட்டுரை என்ன காரணத்தினாலோ கண்டுக்கொள்ளவில்லை. 

சரி விசயத்திற்கு வருவோம். மேற்கண்ட கட்டுரையானது, தீர்மானம் குறித்த உண்மை நிலைகளை சரிவர அலசி ஆராயாமல் ஒரு சமூகம் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.   

முதலில் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் உண்மை நிலை என்ன?  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து களைய வேண்டுமென்று படு சூப்பரான(?) ஐடியாவை சொல்லும் அந்த தீர்மானம் புரியவேண்டுமென்றால் சில தகவல்களை நாம் அலச வேண்டும். 

இலங்கையில் போர் முடிந்த பிறகு, போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்தது ராஜபக்சே அரசு. அதற்கு பெயர் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு". இந்த குழுவானது தன் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு முன்பாக சமர்பித்தது. அதில், 

 • இலங்கை ராணுவம் வேண்டுமென்றே மக்களை தாக்கவில்லை என்றும், 
 • புலிகள் மனித உரிமை மீறல்களை செய்ததாகவும், 
 • மக்களுக்கு சிங்கள ராணுவம் அதிகபட்ச பாதுகாப்பை தந்ததாகவும், 
 • புலிகளோ மனித உயிர்களை மதிக்கவே இல்லை என்றும்,
 • சிங்கள ராணுவம் விபத்துரீதியாக(?) மக்களை கொன்றதாகவும் (சிங்கள அரசோ அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லியிருந்தது), 
 • சிங்கள ராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவை மேலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும்,
 • பிரச்சனைகளுக்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சாடியும்,

என்று இப்படியாக பல்வேறு கருத்துக்களை சொன்ன அந்த குழு, இலங்கையில் அமைதி திரும்ப வழிமுறைகளை , பரிந்துரைகளை சொல்லி தன் அறிக்கையை முடித்தது. இந்த அறிக்கையின் முழு சாரம்சத்தை இங்கே படிக்கலாம்.

இந்த அறிக்கை சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இலங்கை அரசின் கண்துடைப்பு இது என அவை குற்றஞ்சாட்டின.

ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருக்கே, அது என்ன சொல்கின்றது தெரியுமா?

 • இலங்கை அரசு அமைத்த குழு, மனித உரிமை மீறல்களை சரியாக கையாளவில்லை, இது வருத்தம் அளிப்பதாகவும், 
 • இலங்கை அரசாங்கம் இது குறித்த  தீவிர சுதந்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், 
 • இலங்கை அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும், 
 • அந்த குழுவின் பரிந்துரைகளை இது வரை என்ன செயல்படுத்தி இருக்கின்றோம், இனி என்ன செய்யப்போகின்றோம் என்ற விபரங்களை இலங்கை அரசு சமர்பிக்க கோரியும், 
 • இது குறித்த செயல்பாடுகளில், ஐ.நா உடன் இணைந்து செயல்படுமாறும், 
 • இலங்கை அரசின் குழு தொடாத சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க கோரியும், 

- என்று இப்படியாக இருந்ததே அந்த தீர்மானம். 

தீர்மானத்தின் நோக்கமாக ஐ.நா மனித உரிமை கழகம் கூறுவது, இலங்கையில் மறுசீரமைப்பு விரைவாக நடக்கவும் நாட்டில் அமைதி திரும்பவுமே என்பதாகும். இலங்கை மக்கள் அனைவருக்குமான தீர்மானம் என்றே ஐ.நா கூறுகின்றது.

ஆக, கொலைக்காரன் என்று குற்றஞ்சாட்டப்பட்டவனின் கையிலேயே விவகாரங்களை கொடுத்து அவனை தண்டித்துக்கொள்ளும் பொறுப்பை அவனிடமே கொடுத்திருக்கின்றது அமெரிக்கா. இது தான் அமெரிக்கா சொல்லும் நியாயம். 

இந்த தீர்மானத்தால் இலங்கை அரசுக்கு, தன்னால் அமைக்க பெற்ற குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படலாம் என்பது மட்டுமே உண்மை.

தீர்மானத்தை ஆதரித்த உருகுவே, சபையில் கூறிய கருத்துக்களை கவனித்தால் சில விசயங்கள் தெளிவாகும். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டிய உருகுவே, இம்மாதிரியான தீர்மானங்கள் மறுசீரமைப்பு பணியை சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இலங்கை விரைவாக நிறைவேற்ற உதவும் என்று கூறி தீர்மானத்திற்கு தன் ஆதரவை தெரிவித்தது.

எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தன. ஒன்று, இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட கூடாது (இம்மாதிரி தலையிடுவது ஐ.நா விதிகளுக்கு மாறானது என்று வாதாடியது சீனா).  அடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த குழு, அறிக்கை சமர்பித்து மூன்று மாதங்களே ஆகிறதென்றும், அந்த பரிந்துரைகளை செயல்படுத்த இன்னும் கால அவகாசம் இலங்கைக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு நிலை. 

கியூபா கவனிக்கப்பட வேண்டிய ஒரு தகவலை கூறியது. 1983-2009 இடையேயான காலக்கட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலின் 40% ஆயுத விற்பனை வருமானம் இலங்கையிலிருந்தே வந்தது என்பது தான் அது. தற்போது இந்த தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனையை தாராளமயமாக்கி உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைகள் அரசியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

மறுசீரமைப்பு  நடந்து வரும் நிலையில், இப்படியாக அழுத்தம் கொடுப்பது தங்களுக்கு பின்னடைவையே தரும் என்று கூறியது இலங்கை அரசு. 

ஆக, மனித உரிமை கழக தீர்மானத்தின் சாராம்சம் இதுதான். ஆதரவு நாடுகள், இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று சொல்லி ஆதரவளித்தன. எதிர்ப்பு நாடுகள், இன்னும் இலங்கைக்கு கால அவகாசம் தரவேண்டுமென்று சொல்லி எதிர்த்தன.

இப்படியான ஒரு தீர்மானத்தில் எங்கே மதவாதம்(?) வந்தது? 

அதுமட்டுமல்லாமல், ஐ.நா மனித உரிமை கழகத்தில் உறுப்பினராக உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் வெவ்வேறான நிலைகளையே இந்த தீர்மானத்தில் கையாண்டன. 

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த முஸ்லிம் நாடுகள் இரண்டு. எதிர்த்த முஸ்லிம் நாடுகள் ஏழு. ஓட்டெடுப்பில் இருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் நாடுகள் ஆறு (இரண்டு தரப்பிற்கும் ஆதரவு இல்லாத நிலை). 

விரிவான பார்வையோடு நோக்கப்பட வேண்டிய இந்த விசயத்தை குறுகிய பார்வையோடு அணுகுவது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. மேலே கண்டது போன்ற தரம் குறைந்த பதிவுகள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் கீழ்த்தரமான செயலே அன்றி வேறொன்றும் இல்லை. 

சமூக நல்லிணக்கத்தை காப்போம், அழகான சமுதாயம் உருவாக வழிவகுப்போம்....Wednesday, 7 March 2012

குழந்தைகளுக்கு உதடு பிளவா? - இலவச சிகிச்சை


பிறக்கும் குழந்தைகளிடம் உதடும் மூக்கும் சேர்ந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை cleft lip and cleft palate problem என்பார்கள். 


உதட்டில் இப்படியான பிளவுடன் ஆண்டுதோறும், இந்தியாவில், சுமார் 35,000 குழந்தைகள் வரை பிறப்பதாக சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியறிக்கை தெரிவிக்கின்றது. 

குழந்தைகள் வளர வளர உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

தற்போது இதற்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை. SMILE TRAIN என்ற அமைப்புடன் இணைந்து இதனை மேற்கொள்கின்றது. குழந்தையுடன் ஓரிரு ஆட்கள் தங்கலாம். மருத்துவ செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் எதுவும் கிடையாது. 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தன் தந்தைக்கு சிகிச்சை பார்த்து வரும் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்கள் இதனை கூறி மற்றவர்களுக்கு தெரிவிக்க சொன்னார். நாங்களும் இதுக்குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புக்கொண்டு மேலே கூறியவற்றை விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டோம். 

நீங்கள் அறிந்தவர்களின் குழந்தைகள் இப்படியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடர்புக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருமுறை நன்றாக விசாரித்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கு இதுக்குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை களைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய:

Meenakshi Mission Hospital & Research Centre
Lake Area, melur Road,
Madurai, Tamil Nadu,
India - 625 107.
Phone: 0452-4263000

மற்றும் SMILE TRAIN அமைப்பு குறித்து பார்க்க: http://www.smiletrain.org