Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday 25 August 2012

பதிவர் சந்திப்பு ரூல்ஸ் - HATS OFF


நாளை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்புக்கான இறுதி அழைப்பிதழ் இன்று பல தளங்களில் வெளியாகியுள்ளது. பதிவர் சந்திப்பிற்கான இடத்திற்கு எப்படி வருவது என்பதில் ஆரம்பித்து முழுமையான தகவல்கள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சகோதரர் மதுமதியின் பதிவை இங்கே காணலாம்.

பதிவர்கள் பேண வேண்டிய ரூல்ஸ் ரொம்பவே கவனத்தை கவருவதாக உள்ளது. புகைபிடித்தல், மது, பெண்களை அவர்கள் அனுமதியின்றி படம் பிடிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சபை நாகரிகத்தை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுமதி அவர்களின் பதிவில் இருந்து, 

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

இதில் மூன்றாவது பாய்ன்ட் சான்சே இல்லை. செம டாப். இந்த வரையறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (அனுமதி மறுக்கப்படும்/அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்).

எங்கு ஒழுக்கதிற்கான விதை தூவப்படுகின்றதோ அப்போதே அதன் வெற்றியும் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த வகையில் இந்த சந்திப்பு ஒரு மிகச்சிறந்த துவக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

Hats Off organisers.....Hats off....

இந்த பதிவர் சந்திப்பில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சிறந்த முறையில் பின்பற்றப்பட்டு, தமிழ் பதிவுலகம் மற்ற மொழிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட மனமார்ந்த பிரார்த்தனைகள்.

விழா ஒருங்கிணைப்பாளர்களே, ஆக்கப்பூர்வமான விசயங்கள் கலந்த உங்கள் உழைப்பு அருமையானது. நீங்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் இந்த விழா அசத்தலாக இருக்கபோகின்றது (இன்ஷா அல்லாஹ்) பாருங்கள்.....அதற்கு எங்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....

நன்றி: ஆஷிக் அஹமத்

Tuesday 21 August 2012

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?


பதிவர் சந்திப்புகள் என்றாலே இப்போதெல்லாம் ஒருவித அலர்ஜிதான். அதனாலேயே இவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டியதாகி விடுகின்றது. பதிவுலகில் சும்மாவே "தண்ணியடிப்பது" குறித்து ரொம்ப எதார்த்தமாக(?) பேசிக்கொள்வார்கள். பதிவர் சந்திப்பிலோ இதுக்குறித்து சொல்லவே வேண்டாம். பதிவர் சந்திப்பு என்பதே நண்பர்களை கூட்டி டாஸ்மாக் பிசினஸ்சை ஏத்தி வைக்கதானோ என்று எண்ணத்தோன்றுகின்றது. 

சிலர் செய்யும் சலம்பல்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் குப்பையில் வீசக்கூடியவை என்பதற்கு பதிவர் சந்திப்புகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு பதிவர் சந்திப்பை எடுத்துக்கொள்வோம். இது குறித்து ஒரு சகோதர பதிவர் ஒருவர் மிக வருத்தத்துடன் பல செய்திகளை குறிப்பிட்டார். "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க பாருங்க, அப்படியே டென்ஷனா வரும். ஏன்டா வந்தோம்னு இருக்கும். இவங்க கூடி பேசிகிட்டு இருந்தா அதுல குறிப்பிட்ட அளவு தண்ணி அடிக்குறது பத்தி தான் பேச்சு இருக்கும். ஒரு மூத்த பதிவர் கிட்ட பேசனும்னு போனேன். அப்புறம் பேசலாம்னு சொன்னார். மதிய சாப்பாட்டின் போது அந்த மூத்த பதிவர் என்னை கூப்பிடுரார்னு சொன்னாங்க. போய் பார்த்தா புல் டக்குல அவுரு. 'தம்பி சொல்லுங்க. என்னா பேசணும். எதாருந்தாலும் பன்னிருவோம்' அப்படின்னு பேச ஆரம்பிச்சு என்னென்வோ உலருராறு. இவர் கூட போதைல இன்னும் சில பதிவர்கள். நோந்திட்டேன். என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா தண்ணி அடிச்சிட்டு பதிவர் சந்திப்பு வர்ரதெல்லாம் ஏத்துக்கவே முடில. ஈரோடு சங்கவி போன்ற நல்ல ஆட்கள் ஒருங்கிணைத்த சந்திப்புன்னு தான் போனேன். அதுக்காக இதையெல்லாம் சகிச்சிக்க வேண்டியதா இருக்கு"

இந்த சகோதரரை போலவே சில சகோதரிகளும் பதிவர் சந்திப்புகளில் நடக்கும் "தண்ணி" கூத்துக்கள் குறித்து நொந்துக்கொள்கின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளில் பெண்கள் அதிகளவில் கலந்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவே இந்த தண்ணி மேட்டர் தெரிகின்றது.

இப்ப சென்னைல ஒரு சந்திப்பு நடக்க போகுது. அதுக்கான ஒரு ஹின்ட் இப்பவே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இரு பதிவர்கள் இடையே நடந்த உரையாடல் கீழே. ஈரோடு சந்திப்பு குறித்து அந்த சகோதரர் கூறியது இந்த கமெண்ட்களை பார்த்ததும் கண்முன்னே வந்து நிற்கின்றது. 



பதிவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் முதல் சாமான்யன் வரை வாழ்க்கையில் தொலைந்து போனதற்கு குடி ஒரு நிச்சய காரணமாக இருக்கும். அதனை ஆதரிக்கவோ அல்லது எடுத்துக்காட்டாக நடந்து காட்டும் யாரும் மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கின்றனர்.

எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும். அதற்கு இந்த சென்னை பதிவர் சந்திப்பு துணை நிற்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.

இது போன்ற கீழ்த்தரமான முன்னுதாரணங்களில் இருந்து பதிவுலகம் மீண்டு ஆரோக்கியமான வழியில் செல்ல சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க முடியும்.

குறிப்பு: இந்த பதிவில் தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது வருத்தம் அளிக்கின்றது. குடி குறித்த பதிவுலகின் எதார்த்தமான நிலையை எடுத்துரைக்கவும், பதிவின் மையத்தை ஒட்டியும் இருந்ததால் ஒரு உதாரணம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த ஒரு தனி மனிதரையும் சாடுவது பதிவின் நோக்கமல்ல. தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். 

சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த சர்ச்சைக்குரிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஆஷிக் அஹமத் மற்றும் பதிவுலக சகோதர சகோதரிகள்