Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday 7 November 2013

முஸாபர் நகர்: தந்தையை கொன்று குல்லாவை வீசி சென்ற மகன்..


டந்த அக்டோபர் இரண்டாம் தேதி, உத்திர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சந்திர பால் சிங் சுட்டு கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட இடத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் கிடந்தது. முஸாபர்நகர் வகுப்பு கலவரம் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளதால் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று எண்ணியது காவல்துறை. 

கொல்லப்பட்ட சந்திரபால் சிங்கின் மனைவியும், மகன் ஜோகேந்திராவும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். 

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சத்திர பால் சிங்கை கொன்றது வேறு யாருமல்ல, அவருடைய மகன் ஜோகேந்திராவே என்று தெரியவந்துள்ளது. கலவர இழப்பீட்டு தொகையான பத்து லட்சத்தை பெறுவதற்காக தன் தந்தையை தானே கொன்றது அம்பலமாகியுள்ளது. முஸ்லிம்கள் கொன்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த குல்லாவை அங்கு விட்டு சென்றதும் தெரியவத்துள்ளது. ஆதாரம் <<இங்கே>>

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ண வைக்கும் இந்த சம்பவம் ஒரு புறம் இருக்க, உண்மையை கண்டுபிடித்து தெளிவை உண்டாக்கிய காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு சிலரின் சுய லாபத்திற்கு மட்டுமே இந்த கலவரங்கள் என்பதை உணர்ந்து இவற்றில் இருந்து விடுபட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். 

தமிழ்நாட்டிலும், முஸ்லிம்கள் மீது பழியை போட தன் வீட்டின் மீதே குண்டு போட்டுக்கொண்ட பாஜக நிர்வாகி கைதானது நினைவிருக்கலாம். பதவி/பணம் வெறி பிடித்த சிலர் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எப்படியும் இறங்குவர் என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம். இதனை உணர்ந்துக் கொண்டு தூண்டுதலுக்கு பலியாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

Friday 27 September 2013

குஜராத் வளர்ச்சியா? - தோலுரிக்கும் ரிசர்வ் வங்கி தலைவர்


(நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை. இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என் குழந்தை தமிழ் ஆழியை மீண்டும் நடக்கவைப்பதற்கான முயற்சியில் இருப்பதாலும் உடல் நலிவு காரணமாகவும் ஒதுங்கியிருந்தேன். என்ன ஆயிற்று என்று அன்போடும் அக்கறையோடும் விசாரித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.)

இந்தியாவை இருமுனைப்படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத்தொங்கவைத்துக்கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும் மிகவும் முக்கியமானதாகப்படவே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இதற்கு முன்பாக தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசுக்கு பணிபுரிந்துவந்தார். மே மாதம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தார். இந்திய மாநிலங்களின் பின்தங்கிய நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து பின்தங்கியநிலை சுட்டி (backwardness index) ஒன்றை உருவாக்குவதே ராஜன் தலைமையிலான குழுவின் இலக்கு. பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்பதால் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று அதன் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து கோரிவந்த நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தனிப்பட்ட முறையில் நிதியை அளிக்க இந்தக் குழு பரிந்துரைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சித்தேவை மற்றும் அந்த மாநில நிர்வாகத்தின் வளர்ச்சிப்பணி நிறைவேற்றத்திறன் ஆகிய இரண்டையும் ஒருசேர கணக்கில் எடு்த்துக்கொண்டே நிதியை ஒதுக்கவேண்டும் என்று சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ராஜன் குழு உருவாக்கியுள்ள பின்தங்கியநிலை சுட்டியின்படி, 

இந்தியாவின் மிகக்குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Least Developed States): ஓரியா (0.798), பிஹார்(0.765), மத்தியப் பிரதேசம் (0.759), சத்தீஸ்கர்(0.752), ஜார்கண்ட்(0.746), அருணாச்சல பிரதேசம்(0.729), அசாம்(0.707), மேகாலயா(0.693), உத்தரப் பிரதேசம்(0.693), ராஜஸ்தான்(0.626).

குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Less Developed States): மணிப்பூர் (0.571), மேற்கு வங்கம்(0.551), நாகாலாந்து(0.546), ஆந்திரப் பிரதேசம்(0.521). ஜம்மு காஷ்மீர்(0.504), மிஸோரம் (0.495), குஜராத்(0.491), சி்க்கிம் (0.430), இமாச்சல பிரதேசம்(0.404).

ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Relatively Developed States): ஹரியானா (0.395), உத்தராகண்ட் (0.383), மகாராஷ்ட்டிரா (0.352), பஞ்சாப் (0.341), தமிழ்நாடு (0.095), கேரளா (0.095), கோவா (0.045).

எந்தெந்தக் காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்தடையப்பட்டன? தேசிய தனிநபர் வருமானத்தில் ஒரு மாநிலத்தின் நடப்பு நிலையும் அதன் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளையும் கொண்டு இந்த அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுடன் மாநிலத்தின் புவி ஆதார நிலைகள், மக்கள்தொகை அடர்த்தி, சர்வதேச எல்லையை ஒட்டி அது அமைந்திருக்கிறதா, இருந்தால் எவ்வளவு நீளம் என்பதெல்லாம்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த பின்தங்கிய நிலைமைச் சுட்டியின் விவரங்களுக்குள் புதைந்திருக்கும், தற்போது விவாதிக்கப்படவேண்டிய, ஒரு முக்கிய அரசியலை நாம் இப்போது காண்போம்.

குஜராத் முன்மாதிரி என்ற பெயரில் நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள் ஒரு பெரிய மாயையை நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஆனாலும் இந்தச் சுட்டி குஜராத்தை ஒரு குறைவான வளர்ச்சிகண்ட மாநிலமாகவே காட்டுகிறது. இது காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என்றுகூறுவதற்கில்லை. ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் என சுட்டி கூறும் மகாராஷ்ட்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப் ஆகியவை மாறி மாறி காங்கிரஸிடமோ அல்லது பாஜக கூட்டணிக்கட்சியினரிடமோ இருந்தவைதான். தொடர்ந்து காங்கிரஸிடமிருக்கும் ஆந்திரப் பிரதேசமும் குஜராத் உள்ள பிரிவில்தான் இருக்கிறது.

குஜராத் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சமூகங்களின் - வைசிய சாதிகளின் - கோட்டை என்பதை நாம் அறிவோம். அதைப்போலவே மோடியின் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மிகவும் முன்னணி மாநிலமாக அது இருந்துவருகிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவுக்குள்ளேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் குஜராத்தின் இடம் பொறாமைப்படக்கூடிய ஒன்றுதான். அதில் எப்போதுமே மோடி கவனமாக இருந்துவந்திருக்கிறார். இப்படி வைசியர்களின் கோட்டையாகவும் முதலீடுகளின் காந்தமாகவும் இருக்கின்ற, இந்திய முதலாளித்துவத்தின் டார்லிங் நரேந்திரா பாயின் மாநிலம் குறைவாக வளர்ச்சிகண்ட மாநிலமாக (அதுவும் ஹரியானா, உத்தராகண்ட் ஆகியவற்றையும்விட!) இருப்பது எப்படி?

ஒரே காரணம்தான். இயற்றலும் ஈட்டலும் மட்டுமே ஒரு பொருளாதாரத்தை காத்துவிடாது. வகுத்தலும் சரியாக இருக்கவேண்டும். ஆயிரம் ஏழைகள் நடுவில் ஒரு கோடீஸ்வரன் வாழ்வதால் அந்த ஆயிரம் ஏழைகள் வளர்ந்துவிடமாட்டார்கள். குஜராத் முதலீடுகளை ஈர்த்தது, பணம்பாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அது அந்த மாநிலத்துத்தின் தனிநபர் வருமானத்தையும் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியதா? இல்லை என்றே வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (படிக்க: http://www.epw.in/system/files/pdf/2013_48/39/Have_Gujarat_and_Bihar_Outperformed_the_Rest_of_India.pdf )

ஒரு மாநிலம் பணக்காரர்களின் மாநிலமாக இருப்பதற்கும் வளர்ந்த மாநிலமாக இருப்பதற்குமான வித்தியாசத்தை அறிந்தோ அறியாமலோ மோடியின் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பணம் பாய்ந்த பிறகும் குஜராத் பின்தங்கிய நிலையைவிட்டு போதுமான அளவுக்கு வெளிவராமல் இருப்பதற்கான காரணம் அரசியல்தான். அதாவது பாஜகவின் கலாச்சார தேசியத்தின் ஒரு பிரதான பகுதியான சாதிய பொருளாதார அரசியல்தான் அதற்கு காரணம். இந்தியாவின் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பலனளித்த ஐடி துறை வளர்ச்சியைக் கண்டு, "இந்தியா ஒளிர்கிறது" என்று வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் கூச்சலிட்டதற்கும் இப்போது மோடியின் வளர்ச்சியை குஜராத்தின் வளர்ச்சியாக முன்னிறுத்தி இந்தியாவை குஜராத்தாக்குவோம் என்று இப்போது காவிப்படை கூச்சலிடுவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வாக்குகளை நோக்கி வீசப்பட்ட இந்த இரு முழக்கங்களுமே ஆதாரமற்ற பொய்க்கூச்சல் என்பதைத்தவிர வேறில்லை.

குஜராத்தை "வளர்த்ததைப் போல" இந்தியாவையும் "வளர்ப்போம்" என்று கூறுவதைக் கேட்டால், நமக்கு நடுக்கமாகத்தான் இருக்கிறது. 

மீண்டும் சுட்டியைப் பாருங்கள். ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்களில் முதல் இரு இடங்களில் கோவாவும் கேரளாவும் வருகின்றன. கோவா ஒரு குட்டி மாநிலம். சிங்கப்பூரையும் இந்தோனேஷியாவையும் ஒப்பிடமுடியாதது போல, துபாயையும் ஈரானையும் ஒப்பிடமுடியாதது போல, கோவாவை அதன் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்டிராவுடனோ பிற பெரிய மாநிலங்களினுடோ ஒப்பிடமுடியாது. அதன் தனித்துவம் கருதி கோவாவை வி்ட்டுவிடலாம். இரண்டாவது இடத்தில் உள்ள கேரளத்தின் வளர்ச்சி சுவாரஸ்யமானது. ஆனால் கேரளத்தின் வளர்ச்சிகூட அடிப்படையில் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடமுடியாத ஒன்று. ஏனென்றால் அது பிரதானமாக வெளிநாட்டு செலாவணி சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை என்ஆர்ஐகள் கேரளாவுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூரில் உற்பத்திக்கான இடமில்லை, பணம் வெளியிலிருந்து வருகிறது. முதலீடாகக்கூட அல்ல, ஈட்டப்பட்ட பணமாக. அது உள்ளூரில் சேமிப்பையும் செலவையும் அதிகரிக்கிறது. ஆனால் அடிபப்டையில் கேரளம் ஒரு பொருளாதார உற்பத்தி தலம் அல்ல. 

இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆளும் கேரளத்தில், அதன் புவியியல் மற்றும் மக்களியல் காரணிகளின் காரணமாகவும், குறிப்பாக இடதுசாரிகளின் அதீத தொழிற்சங்கவாதத்தி்ன் காரணமாகவும் தொழிற்துறை வளர்ச்சி சாத்தியமில்லாமல் போனது. ஆனால், கேரளாவிலுள்ள சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டஸீலின் எஸ். இருதய ராஜன், நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியதுபோல "உலக முதலாளியத்திடமி்ருந்துவரும் அந்நியச்செலாவணிதான் ஒட்டுமொத்த கேரள பொருளாதாரத்தையும் தாங்கிநிற்கிறது. தொழிலாளர்களின் "புலப்பெயர்ச்சி நடக்காமல் போயிருந்தால் கேரளாவில் பட்டினிச்சாவுகளே நடந்திருக்கும். கேரள முன்மாதிரி என்றால் அதை படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உலகின் எந்தப் பகுதிக்கும், ஏன் கேரளாவுக்குமேகூட இந்த முறை ஏற்றதல்ல" என்று அவர் கூறியிருந்தார். (சுட்டி: http://www.nytimes.com/2007/09/07/world/asia/07migrate.html?_r=1&pagewanted=1). என்ஆர்ஐ எகானமி, மணி ஆர்டர் எகானமி என்றெல்லாம் கூறப்படும் கேரள வளர்ச்சி மாதிரியை பொருளாதாரவாதிகள் எப்போதோ ஏறக்கட்டிவிட்டார்கள். 

ஆனால் அப்படி வந்த முதலாளித்துவப் பணத்தை சமூகத்துக்காக வகுத்தளித்தில் கேரள இடதுசாரிகளின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமுடியாது. அந்த விஷயத்தில் அவர்கள் முன்னாள் சீன அதிபர் டெங் ஷியாவ்ப்பிங்குக்கு நிகரானவர்கள்: "பூனை வெள்ளையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, எலியைப் பிடித்தால் சரி." ஆக அமெரிக்காவின் அடிப்படையாக இருக்கும் பெட்ரோலிய முதலாளித்துவத்தின்கீழ் வேகாத வெயிலில் வேலை செய்து கேரளியர் அனுப்பும் செல்வமே, நமது தோழர்களின் சாதனையாக, கேரள முன்மாதிரியாக இங்கே முன்வைக்கப்படுகிறது. உங்களில் யாருக்காவது கோபம் வந்தால், முதல் (வேளாண்மை), இரண்டாம் (தொழிலுற்பத்தி) மற்றும் மூன்றாம் (சேவை) துறைகளில் ஆகியவற்றில் கேரளாவின் உற்பத்தி என்ன, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அதன் பங்கு என்ன என யோசித்து்பபாருங்கள். உற்பத்தி சாராது, உலக நாடுகளிலிருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு ஒட்டுண்டுபோல வாழும் மாநிலமே கேரளம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதன் சமூக வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மிகச் செல்வாக்கான மாநிலமாக அது இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களை அவற்றின் "தனித்தன்மைகளைக்" கருதி விலக்கிவிட்டுப்பார்த்தால், இந்தியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட, இந்தியச் சூழ்நிலைகளுக்குட்பட்டு வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் முதலிடம் பெறுவது தமிழ்நாடுதான். பிறகு பஞ்சாப், மகாராஷ்ட்டிரா. கேரளா போலவே என்ஆர்ஐ நிதிவரத்து இரு்நதாலும், பஞ்சாப் அடிப்படையில் வேளாண்மைப் பொருளாதாரத்தால்தான் அந்த இடத்தை அடைந்தது. அதற்கு அது தந்த விலையும் அதிகம் என்பதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் அதன் வேளாண்மைப் பொருளாதாரமே உள்ளூர் அளவிலான சமூக முன்னேற்றத்தை அங்கே சாதித்தது. ஒரு பக்கம் மும்பை மறுபக்கம் விதர்ப்பா என இரு முனைகளில் தவிக்கும் மகாராஷ்ட்டிராவின் சமூக மேம்பாட்டுக்கு காரணம் வேளாண்மை, தொழி்ல்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே அங்கே முதலீடுகள் பரவியதும் அதற்கான உள்கட்டமைப்பு, சமூக முதலீடுகள் செய்யப்பட்டுவந்ததும் காரணம்.

சரி. தமிழ்நாடு எப்படி முதலிடத்தை வகிக்கிறது? மகாராஷ்ட்டிரா, குஜராத் போல பெரு வைசிய சமூகங்களின் மையமாக இல்லாத, கேரளா போல மணி ஆர்டர்களைச் சார்ந்திராத, பஞ்சாப் போல இயற்கையின் வரம் பெறாத, சுமார் நாற்பதாண்டுகாலம் எந்த அனைத்திந்திய கட்சியாலும் ஆளப்படாத, டிப்பிக்கலான இந்திய மாநிலமாக இல்லாத, இந்தி படிக்காத, பாலிவுட் படம் பார்க்காத தமிழ்நாடு எப்படி இந்த இடத்தை அடைந்தது? காரணங்கள் பலவாக இருந்தாலும் அதை மூன்றே விஷயங்களில் அடக்கலாம்:

1. மனிதவளத்தில் முதலீடு: மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் முறையே தமிழகத்தின் தனிசிறப்பு முறையாக இருந்தது. நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது அதன் மிகப்பெரிய மனித வளத்துக்காகவே. அதாவது திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய சாதனையான இடஒதுக்கீடு தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து உருவாக்கிய லட்சக்கணக்கான பட்டதாரிகளே தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் பிரதான எந்திரமாக இருக்கிறார்கள்.

2. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: சிலக் குறிப்பிட்ட இடங்களில் வளர்ச்சி பின்தங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக மாநிலம் தழுவியதாக இருந்தது. அதனால்தான் மும்பை-விதர்பா என்கிற எதிர் முரண்கள் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் படிப்பறிவு - வேலை சார்ந்த புலம்பெயர்தல் ஆகியவற்றால் நகர்மயமாதல் தவிர்க்க இயலாமல் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதலிடத்துக்கு தமிழகம் வந்தது. இது எல்லாவிதமான சமூக, பொருளாதார காரணிகளும் பரவுவதற்கு காரணமாக இருந்தது. இடப்பெயர்ச்சி என்பது ஒரு சமூக மேம்பாட்டுக்கான கருவி என்றால், இடஒதுக்கீடு அதை சாதித்துத்தந்தது. 

3. சமூக நல திட்டங்கள்: காமராசர் காலத்து மத்திய உணவில் தொடங்கி, எம்ஜிஆர் காலத்து சத்துணவில் போஷாக்கு பெற்று, பிறகு கருணாநிதி, ஜெயலலிதா இருவராலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஏகப்பட்ட சமூக நலன் மற்றும் "கைதூக்கிவிடும்" திட்டங்கள் காரணமாக, ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க, ஸ்திரமான சமூக நிலைகொண்ட மாநிலமாக தமிழகம் உருவானது. இது மக்களின் உபரியை கல்விக்காவும் தனிநபர் வளர்ச்சிக்காவும் செலவிடுவதற்கு உதவியது. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், தமிழகமெங்கும் மூன்று தலைமுறைகளாக நடந்துவடுகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற கேலிக்கூத்துகள் சில நடந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் - கொள்கை கருதியோ கொள்ளை கருதியோ - நடைமுறைப்படுத்திவந்த பல திட்டங்கள் தனிநபர் வருமானத்தின் உபரியின் அளவை அதிகரித்து அதை அபிலாஷைகளின் பக்கமாக மடைமாற்றிவிட்டது. எங்கே அடிப்படைத்தேவைகளைவிட அபிலாஷைக்கான தேவைகள் வளரத்தொடங்குகின்றனவோ அங்கே பின்தங்கிய நிலை உடைபட ஆரம்பிக்கிறது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான அஸ்திவாரம் விழுகிறது. (நாம் இப்போது இந்தக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இது ஒரு இடைமாறுதல் கட்டும்)

இந்த மூன்றுமே பல்வேறு ஓட்டை உடைசல்களைக் கொண்ட, விமர்சனத்துக்கு தப்பாத. பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்ட (சமூக அல்லது புவியியல் ரீதியில்) அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானதாகும். இடைநிலைச்சாதிகள் முன்னேறிவிட்டன, ஆனால் தலித்துகள் முன்னேறவில்லை என்று ஒரு முழக்கம் ஏற்படுகிறதென்றால், நாம் பாதித்தொலைவைக் கடந்திருக்கிறோம் என்று அர்த்தம். பாதி கடந்திருக்கிறோம், பாதி கடக்கவேண்டியுள்ளது. ஆனால் நாம் பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது.

அதாவது மோடியின் குஜராத் "ஈட்டலுக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறது. கேரளா எங்கேயோ சம்பாதித்தை இங்கே "வகுத்துக்கொடுக்கிறது". ஆனால் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய எல்லாத்துறைகளுக்கும் முக்கியம்தரும் மாநிலங்களாக தமிழகமும் மகாராஷ்ட்டிரமும் பஞ்சாபும் இருக்கின்றன. இதில் இந்தியா மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகள்கூட கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் தமிழகத்தில் உண்டு. (அதைப்போல தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களும் நிறைய). கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் தனித்தன்மைகள் குறித்துபல நிபுணர்கள் (சமீபத்தில் அமர்த்தியாசென் உள்பட) கூறிவந்த கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும் பார்த்துவருகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கண்டது, ஒரு சாதனையேதான். (ஆனால் அது வேறுகட்டத்துக்கு மாறவேண்டிய காலமும் எப்போதோ வந்துவிட்டது. அதை மாற்று்மபணியில்தான் தமிழகம் இப்போது பின்தங்கியிருக்கிறது).

நேரு பாணி கலப்புப் பொருளாதாரம் அதிகாரவர்க்க நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை எதிர்ப்பார்த்தது. அது வேலைக்கு ஆகவில்லை. அதிகாரிகளின் பிள்ளைகள் ஐஐடியில் படித்து அமெரிக்க பொருளாதாரத்தை வளர்க்கச்சென்றுவிட்டார்கள். இந்துத்துவ அல்லது பிற்போக்கு பொருளாதாரவாதிகள் சாதிய பொருளாதாரத்தை கட்டிக்காப்பாற்றி இந்தியாவை சப்-சஹாரா ஆப்பிரிக்காவுக்கு கீழே கொண்டுசெல்வதில் எப்போதுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் காவி மற்றும் சிவப்பு பழமைவாதிகளின் பொருளாதாரக்கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள, நீங்கள் தந்தைப் பெரியாரின் கிராமச் சீர்திருத்தம் என்கிற சின்னஞ்சிறு நூலை படிக்கவேண்டும். 

சில நவீன இந்துத்துவவாதிகள் பில்லியன் டாலர் முதலீடுகளும் பளபளா சாலைகளும் வந்துவி்ட்டால் நாடு முன்னேறிவிடும் என்கிறார்கள். 

சமூகக் காரணிகளில் முதலீடு செய்தால் பில்லியன் டாலர் முதலீடுகளையும் ஈர்க்கலாம் சாப்ட்வேர் பார்க்ககளையும் கட்டலாம், அதே சமயம் விதர்பா, தெலுங்கானாக்களையும் தவிர்க்கலாம் என்பதற்கு தமிழகமே சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வளவோ குறைகள், குற்றங்கள், ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, இதுவே உண்மை. இன்னும் மாறவேண்டிய திசை, போகவேண்டிய தொலைவு, ஆகவேண்டிய காரியங்கள் என நிறைய இருந்தாலும், இதுவே உண்மை. எனவே இந்திய வரைபடத்தை தலைகீழாக மாற்றிவைத்துப்பாருங்கள், யார் மேலே இருக்கிறார்கள் என்பது தெரியும். 

இந்த அழகில் ஒப்பீட்டளவில் வளர்ந்த ஒரு மாநிலத்திடம் பின்தங்கிய ஒரு மாநிலத்தின்" சாதனையை" கொண்டுவந்து வைத்துக்கொண்டு அரற்றிக்கொண்டிருக்கும் மோடி ஆதரவாளர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அபாயத்தை பார்க்கையில் அந்த சிரிப்பு அடங்கி, சினம் எழுகிறது.

கடைசியில் ஒரு நிஜக்கதை: என் பள்ளிப்பருவத்தில் ஓர் ஆசிரியையிடம் நான் ட்யூஷன் போய்க்கொண்டிருந்தேன். அவர், பானுமதி டீச்சர், இன்றைய எனது வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களில் ஒருவர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், நெசவாளர் குடும்பம் ஒன்றைச்சேர்ந்த பையன் ஒருவன் ஆறாம் வகுப்பு டியூஷனுக்கு புதிதாகச் சேர்ந்திருந்தான். சில மாதங்கள் கழித்து, ஒருநாள், அந்த பையனின் அப்பா வேகவேகமாக ட்யூஷன் நடக்குமிடத்துக்கு வந்து, பானுமதி டீச்சரைப் பார்த்து சத்தம்போட ஆரம்பித்தார். ட்யூஷன் சேருவதற்கு முன்பு நல்ல மதிப்பெண் வாங்கிவந்த பையன், இப்போது குறைவாக வாங்குகிறான் என்று கத்தினார். அதிர்ந்து போன டீச்சர் அவரிடம் தீவிரமாக விசாரிக்க, அவர் தன் மகனின் புராகிரஸ் ரிப்போர்ட்டை எடுத்துக்காண்பித்தார். "முன்னாடி 45, 45 வாங்கிட்டு இருந்தான், இப்போ 15,16 வாங்கிறான்" என்று சுட்டிக்காட்டிப்பேச, ரிப்போர்ட்டைப் பார்த்த பானுமதி டீச்சருக்கு மயக்கம்வராத குறை. அந்த தகப்பனார் காட்டியது மாணவனின் ரேங்க் மதிப்பை!

Wednesday 18 September 2013

முசாஃபர் நகர் கலவரத்துக்கு மூல காரணம்... ஈவ் டீசிங் அல்ல..!


வ் டீசிங் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்கிறார் அதில் சம்பந்தப்பட்ட பெண் ரீது. ஈவ் டீசிங் செய்ததாக பிறரால் சொல்லப்படும் அந்த பையன் ஷாநவாஸ்கானை தான் பார்த்ததோ அல்லது பேசியதோ இல்லை என்கிறார். மேலும், சர்ச்சைக்குள்ளான பகுதிக்கு தான் சென்றதில்லை என்கின்றார் அந்த சகோதரி. 'விஷயம் கேள்விப்பட்டு நாங்கள் போய் பார்க்கும் போது அந்த முஸ்லிம் குடும்ப ஆண்கள் எல்லாம் சேர்ந்து சச்சின் & கவ்ரவ் இருவரையும் வீதியில் மிகவும் மோசமான நிலையில் கொன்று போட்டு இருந்தனர்' என்கின்றனர் சச்சின்/கவ்ரவ் வீட்டு பெண்கள்.

அப்புறம், தன் பையன் ஈவ் டீசிங் செய்பவனில்லை என்றும் அப்படி சொல்வதெல்லாமே பொய் என்றும் திடமாக மறுக்கிறார் ஷாநவாஸ்கானின் தந்தை. மேலும், சச்சின்/கவ்ரவ் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரின் பைக்கும் மோதிக்கொண்டதில் தகராறு ஆகி, பின்னர் அவர்கள் வீடு சென்று, எட்டு பேருடன் 3 பைக்கில் சச்சினும் கவ்ரவும் திரும்பி வந்து ஷாநவாஸின் வீட்டுக்கருகில் வைத்து கத்தி மற்றும் சில ஆயுதம் கொண்டு கண்டபடி அவனை தாக்கி கழுத்து மார்பு வயிறு என உடம்பில் பல இடத்தில் வெட்டி வீதியிலேயே கொன்று விட்டனர் என்கிறார் தந்தை.

போலிஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்த போது, இரு தரப்பு கொலை பற்றிய இரு FIR களிலும் ஈவ் டீசிங் பற்றி ஒன்றுமே எழுதப்படவில்லையாம்..! ஏன்..? இரு தரப்பும் என்ன சொன்னார்களோ அதைத்தான் FIR இல் எழுதினோம் என்று சொல்லும் போலிஸ் ஈவ் டீசிங் பற்றி புகார் இல்லை என்கிறது. இவ்வளவுக்கும்... ஜாட் சாதியினரும் முஸ்லிம்களும் இதுவரை சண்டை போட்டுக்கொண்ட வரலாறே இதற்கு முன்னர் இல்லையாம்..!

--- கலவர ஸ்பாட்டில் இருந்து NDTV ரிப்போர்ட்..! ஆதார சுட்டி இங்கே 


அடுத்த சமூகத்தினர் மீது வெறுப்பை கொண்டு வர தன் வீட்டிற்கே குண்டு வைத்துக்கொள்ளுதல், யாத்திரை என்ற பேரில் குழப்பம் ஏற்படுத்த முயலுதல், இல்லாத காரணத்திற்காக கலவரத்தை தூண்டுதல், கலவரத்தை பெரிதுபடுத்த போலி வீடியோவை பரப்புதல் போன்ற சம்பவங்களுக்கும் தேர்தல் நெருங்குவதிற்கும் நிச்சயம் தொடர்புண்டு. 

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்றினாரே அந்த ஜாட் இன சகோதரர், அவருடைய செயலில் உள்ளது இவை அனைத்திற்குமான பதில். தங்களின் எண்ணங்கள் நிறைவேறாதா என்று பல்வேறு வகைகளில் குட்டிக்கரணம் அடிக்கும் சங்பரிவாரங்களின் சூழ்ச்சி பலிக்க போவதில்லை, பாடம் மட்டுமே புகட்டப்பட போகின்றனர். 


Saturday 31 August 2013

தன் வீட்டிற்கே பெட்ரோல் குண்டு - இது பாஜகவினர் ஸ்டைல்


முதலில் நேற்று தினமணி வெளியிட்ட செய்தியை பார்ப்போம் 

"திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகியின் வீடு மீது புதன்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3ஆவது தெருவில் வசித்து வருபவர் பி. பிரவீண்குமார் (27). வேன் ஓட்டுநரான இவர், திண்டுக்கல் 10ஆவது வார்டு பாஜக கிளைக் கழகத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் பிரவீண்குமார் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை பிரவீண்குமார் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். பெட்ரோல் பாட்டில்கள் வெடித்ததில் வீட்டுக்கு அருகே சென்ற கேபிள் வயரில் தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமார் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். அகில உலக இஸ்லாமிய முன்னெற்ற கழகத்தை சேர்ந்த முபாரக் அபிபுலலா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர் அந்த பகுதியை சேர்ந் த பலரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்" 

இந்த செய்தியில் கடைசி பத்தியை இப்போது தினமணி தளத்தில் இருந்து காக்கா தூக்கிக்கொண்டு போய்விட்டது. சரி இது என்ன புதுசா, விடுவோம். இன்றைய தினமணி செய்தியை பார்ப்போம். 

"தனது வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக நிர்வாகி, நண்பர் கைது

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கமலக்கண்ணன் பிரவீன்குமார் 

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்."

முதலில் காவல்துறைக்கு நன்றிகள். குற்றவாளிகள் எதிர்ப்பார்த்தப்படியே விளம்பரமும் கிடைத்துவிட்டது, போலிஸ் பாதுகாப்பும் கிடைத்துவிட்டது :-) சில நாட்களுக்கு முன்னர் தான் அனுமன் சேனா என்ற அமைப்பினர் இது போன்ற வழக்கில் சிக்கினர். ஆனால் தன் வீட்டிற்கே குண்டு வைக்கும் அளவிற்கு செல்லவில்லை என்பது சற்றே ஆறுதல். 



இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். 

இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் டி.எஸ்.பி., சுருளிராஜா கூறிய போது "பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, காவல்துறைக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம். பாரதிபுரத்தில் நடந்த சம்பவமும் நாடகம் போலவே தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

ஆமாம் சார், பாரதிபுரம் மட்டுமல்ல, 'அவர் வரும் வழியில் குண்டு, இவர் வரும் வழியில் குண்டு, பாலத்திற்கு அடியில் குண்டு" போன்ற பல வழக்குகளின் தன்மையை இந்த கோணத்திலும் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும், பல அப்பாவிகளும் காப்பாற்றப்படுவார்கள். 

கட்டபஞ்சாயத்து, நிலத்தகராறு, பெண் தொடர்பு, மது போதையில் தகராறு போன்ற சங்கபரிவார பிரமுகர்களின் செய்கையில் இப்போது கடத்தல், தங்கள் குடும்பத்திற்கே பங்கம் விளைவிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். 

காங்கிரசின் குழப்படியான ஆட்சியால் தங்களுக்கு ஒட்டு விழும் என்று மனப்பால் குடித்தால், பிஜேபி அதனை இத்தோடு மறந்துவிடுவது நலம். முன்பும் கூட காங்கிரஸ் அபாரமான ஆட்சியை கொடுத்ததில்லை. சரியான மாற்று இல்லாததாலேயே அவர்கள் தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர். அந்த மாற்று தாங்கள் தான் என்று பிஜேபி நினைத்தால் மறுபடியும் மக்கள் பாடம் புகட்ட தயாராகவே உள்ளனர். 

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் அ 
நன்றி: இந்நேரம் மற்றும் தினமணி

Monday 24 June 2013

உத்தரகண்ட் - மோடி - பிணங்களின் மீதும் அரசியல்


மிகப்பெரிய இயற்கை பேரிடரை இந்த தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சடலங்கள் மீது தங்கள் சந்தர்ப்பவாதத்தை நுழைக்கும் சிலரை கண்டால் 'என்ன ஜென்மமோ' என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

தேசிய சக்திகளின் அனைத்து பிரிவுகளும் உயிர் காக்கும் பணியில் இறக்கப்பட்டு, கடுமையான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டிருக்கின்றனர். மீட்கும் பணியில் தங்கள் உயிரையும் சில வீரர்கள் இழந்துள்ளனர். இதுவரை சுமார் 17,000 மக்கள் மீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. 

ஆனால், இந்த சூழ்நிலையையும் சிலர் விடுவதாக இல்லை. உத்தரகண்டில் இருந்து சுமார் 15,000 மக்களை குஜராத் முதல்வர் மோடி மீட்டதாக செய்திகளை பரப்பிவிட்டனர். உண்மை என்ன என்பதை ஆராயாமல் இதனையும் சில ஊடகங்கள் வெளியிட்டன.  

ஒவ்வொரு மாநிலமும் உத்தரகண்ட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்க தங்களால் ஆன உதவிகளை செய்துவரும் நிலையில் இதற்கும் அரசியல் சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குஜராத்தை விட பல மாநிலங்களும் அதிகமாகவே நிதி உதவிகளை உத்தரகண்டிற்கு வழங்கியுள்ளன. ஆனால் யார் அதிகமாக செய்தது என்று பேச வேண்டிய தருணமோ அல்லது அதனை வைத்து குளிர்காய வேண்டிய சூழ்நிலையோ இதுவல்ல. 

ஆயிரமாயிரம் மக்களை மோடி காப்பாற்றியதாக வெளிவரும் தகவலை "புரளி" என்று வர்ணித்துள்ள மத்திய அரசு, அசாதரணமான இந்த சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளது. 

மிக காட்டமான அறிக்கை ஒன்றை இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, இவ்வாறான கருத்துக்களை விமர்சிக்க தனக்கு வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது 

"உத்தரகண்ட் மாநிலத்தில், தேசிய சக்திகளின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்து சனிக்கிழமை 10 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தன. சனிக்கிழமை வரை 17 ஆயிரம் பேரை அரசு வெற்றிகரமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இப்போது சிலர் ஒரு கதாநாயகனாக மாற விரும்பி, பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இருந்து தனியாளாக 15 ஆயிரம் பேரை மீட்டதாகக் கூறிக் கொண்டால் அது சந்தர்ப்பவாதச் செயலாகும். மேலும், ஒரு துயரச் சம்பவத்தையும் அரசியலாக்கும் முயற்சிதான் இது. இத்தகு அரசியலின் பின்னணியில் இருக்கும் மனப்போக்கு குறித்து நாடு சிந்திக்க வேண்டும்"

ஆம். நிச்சயம் சிந்திக்கப்பட வேண்டும். உத்தரகண்டில் சடலங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும், அவற்றின் மீது அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகின்றதா? 

அதளபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் கட்சிக்கு முட்டுக்கொடுக்க விரும்புபவர்கள் வேறு எதையாவது கொண்டு தங்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திக்கொள்ளட்டும், பிணங்களின் மீது அரசியல் நடத்தியல்ல...

சுட்டிகள்: தினமணி, IBNLIVE
கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத்

Tuesday 28 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனரா? 'விடுதலை' தள புரட்டுக்கு பதிலடி..


ந்தியாவில் நாத்திகர்கள் அதிகரித்து விட்டதாகவும், இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாக கூறி சமூக தளங்களில் அங்கலாய்க்கின்றனர் நாத்திகர்கள். ஆனால் இதற்கு நேர்மாறான தகவலை தான் அந்த ஆய்வு தருகின்றது என்பதை நாத்திகர்கள் உணர்ந்தால் என்ன செய்ய போகின்றார்கள்? ஈயடிச்சான் காப்பியாக மற்றவர் கூறுவதை பரப்புவதற்கு பதிலாக தெளிவாக ஆராயலாமே? உண்மை என்ன என்பதை விளக்குகின்றது இந்த கட்டுரை..

இன்று விடுதலை தளத்தில் வந்த ஒரு பதிவும், உண்மையை ஆராயாமல் அதனை அப்படியே பிரதியெடுத்து போட்ட தமிழ் ஓவியா தளத்தின் பதிவும் அதிர்ச்சியளித்தன.  

விடுதலை தளம் சொல்ல வருவது இதுதான். பிரபல ஆய்வு நிறுவனமான Gallup, ஆத்திகம் நாத்திகம் குறித்த கருத்துக்கணிப்பை பல்வேறு நாடுகளில் சென்ற ஆண்டு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றதாம். இதன் அடிப்படையில் பின்வருமாறு தலையங்கம் வெளியிடுகின்றது விடுதலை தளம்..

"இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது"

இது உண்மையா என்பதை அறிய Gallup ஆய்வின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை முதலில் பார்த்து விடுங்கள். இங்கே 

உண்மை என்னவென்றால் இந்தியாவில் இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையெல்லாம் குறையவில்லை, மாறாக நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. மேற்சொன்ன ஆவணத்தின் 12-ஆம் பக்கம் இந்த உண்மையை உரக்க சொல்கின்றது. கீழே பாருங்கள்.

படத்தை சுட்டி பெரிதாக காணுங்கள்

மிகத் தெளிவாக, இந்த ஆவணம், 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாத்திகர்களின் தற்போதைய இந்திய எண்ணிக்கை 1% குறைந்துள்ளதாக பறைசாற்றுகின்றது. 

பின்னர் எப்படி விடுதலை தளம் துணிந்து இந்த பொய்யை/புரட்டை கட்டுரையாக வெளியிட்டது? ஆங்கிலத்தை தவறாக புரிந்துக்கொண்டது காரணமாக இருக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு விளக்கலாம். 

நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம். 

  • மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் (ஆங்கிலத்தில் இவர்களை Religious people என்பார்கள்). 
  • ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் Not Religious people என்பார்கள்). 
  • நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் (இவர்களை Atheist என்பார்கள்). 

மேலே சொன்ன மூன்றின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மக்களிடம் ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை தான். 

1) Are you religious?
2) Are you not religious?
3) Are you a convinced Atheist?

இதன் அடிப்படையில் 81% இந்திய மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், 13% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை எனவும் (கவனிக்கவும், இவர்கள் தங்கள் மதத்தை துறந்தவர்களோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ இல்லை). 3% மக்கள் தங்களை நாத்திகர்கள் எனவும் கூறியுள்ளனர். Not religious என்பதை தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்டுவிட்டது விடுதலை பத்திரிக்கை/தளம். 

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடும் 'விடுதலை', யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? மிக எளிமையாக புரியும் இந்த லாஜிக்கை எப்படி கோட்டைவிட்டது விடுதலை தளம்? 

விடுதலை தளத்திலும், தமிழ் ஓவியா தளத்திலும் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி நான் இட்ட கருத்தை பின்வருமாறு முடித்திருந்தேன் 

//உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்கும் அணுகுமுறையாகும். நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். 
நன்றி,  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ //

திருத்தங்களை மேற்கொண்டு வருத்தம் வெளியிடுமா விடுதலை தளம்? பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தால் இந்திய பகுத்தறிவாளர்கள் போக வேண்டிய தூரம் அதிகரித்திருக்கின்றது என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது..

நன்றி...

Saturday 18 May 2013

மோடி பலூனை ஊதுவது யார்?


லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட விதிமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.

நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011இல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012இல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.

குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?

நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும் . . . முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா!


Sunday 12 May 2013

சபாஷ்...கலக்கும் காரைக்கால் எம்எல்ஏ


புதுச்சேரி மாநில முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திமுக சட்டமன்ற தலைவரும், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவருமாகிய A.M.H.நாஜிம் குறித்து தினமலரில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த செய்தி கவனத்தை ஈர்த்தது. முதலில் அந்த செய்தியை பார்த்துவிடுவோம். 

---     
காரைக்கால் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் நாஜிம். கடந்த 25 ஆண்டுகளாக, தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக வலம் வருகிறார். காரைக்கால் மாவட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதுடன், தொகுதி மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை தீர்த்து வைப்பதிலும், அதிக அக்கறை எடுத்துக்கொளும் நாஜிம், அட்டவணை போட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

A.M.H நாஜிம் (முதலில் உட்கார்ந்திருப்பவர்)

வாரத்தில் ஒவ்வொரு நாட்களையும், ஒவ்வொரு பகுதிக்கு ஒதுக்கி உள்ளார். சனிக்கிழமை நிரவி, வெள்ளிக்கிழமை மேல ஓடுதுரை, திங்கள்கிழமை மதகடி என ஒவ்வொரு கிழமையிலும் ஒரு பகுதிக்கு சென்று, அங்கு முகாம் அமைத்து, புகார் மனுக்களை பெற்று, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வேலைப்பளு மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய நிலையில், புகார் தெரிவிப்பதற்காக, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காத்திருக்க, பொதுமக்கள் பலர் விரும்புவதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, காரைக்கால் தெற்கு தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிப்பதற்காக, பிரத்யேகமான வெப்சைட் ஒன்றை நாஜிம் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. www.complainbox.in என்ற இணையதளத்தில், தெற்கு தொகுதி மக்கள் தங்களது குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

இணையதளம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஐந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது, குப்பைகள் அகற்றபடாமல் குவிந்து கிடக்கிறது, கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு என, பலவகையான புகார்கள் இணையதளம் மூலம் வருகின்றன.

புகார் பெறப்பட்ட உடன், அந்த பகுதிக்கு சென்று, ஊழியர்கள் பார்வையிட்டு, விபரங்களை சேகரித்து வருவார்கள். இதையடுத்து,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாஜிம் எம்.எல்.ஏ., பேசி, நடவடிக்கை எடுப்பார். ஒவ்வொரு புகாரும், நிவர்த்தி செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து நாஜிம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பொதுமக்கள் எளிய முறையில் புகார்களை, தங்களது எம்.எல்.ஏ.,வுக்கு தெரிவிக்கும் வகையில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஊழியர்களையும் நியமிதுள்ளேன். பலதரப்பட்டுள்ள புகார்கள் வருகின்றன. நிவர்த்தி செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது' என்றார்.
---

நாஜிம் அவர்களின் தளத்தை பார்வையிட்ட போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டோம். தொகுதி மக்களின் குறைகளுக்கு எம்எல்ஏ நேரடியாகவே பதில் அளிக்கின்றார். அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படும் இந்நாளில் இப்படியான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது. 

நன்றி: 8-5-2013 தேதியிட்ட புதுச்சேரி பகுதி தினமலர் செய்தி.
செய்தி தொகுப்பு:  ஜீனத் ஆஷிக் 

Thursday 9 May 2013

எதியூரப்பாவால் பிஜேபிக்கு தோல்வியா? - உண்மை அதுவல்ல


ர்நாடக தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே பிஜேபிக்கு கடும் பின்னடைவை தந்திருக்கின்றன. அதே நேரம், இந்த தோல்விக்கு எதியூரப்பாவே காரணம் என்று பிஜேபி தலைவர்கள் கூறுவதை காண முடிகின்றது. ஆனால் இது உண்மையா? நிச்சயமாக இல்லை. வெகுசில தொகுதிகளை தவிர்த்து, ஏனைய தொகுதிகளில் எதியூரப்பா கட்சி மற்றும் பிஜேபி ஆகிய இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் கூட முதலிடம் பெற்ற கட்சியை முந்தவில்லை. 

ஆதாரம்: தொகுதிவாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல்துறை . அதில் மேற்சொன்ன உண்மையை காணலாம் http://eciresults.ap.nic.in/ConstituencywiseS1034.htm. (இந்த சுட்டிக்கு சென்று ஒவ்வொரு தொகுதியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒருவர் காணலாம்) 


இன்னும் சொல்ல போனால் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று பிஜேபி அசிங்கப்பட்டுள்ளது. எதியூரப்பா கட்சி இல்லாமலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெற்றிருக்கும். எதியூரப்பா கட்சியாலேயே தாங்கள் தோற்றோம் என்ற பிஜேபியின் பிரச்சாரம் உண்மையை மறைக்கும்  கேவலமான வாய் சவடாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஊழல், நிலஆக்கிரமிப்பு, ஆபாசம், பெங்களூருவின் சுகாதாரமற்ற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிஜேபியை கர்நாடக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டனர் என்பதே உண்மை...

Tuesday 23 April 2013

இஸ்லாமிய நாடாகுமா இலங்கை?


     முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளினால் பரப்பப்படும் ஒரு குறுஞ்செய்தி(SMS)க்கு சிங்கள மொழியில் வெளிவரும் “பெபராஸியா’ என்ற மாத இதழின் 2013 ஜனவரி பெப்ரவரி இதழில் சிந்தனையாளர் சேபால் அமரசிங்ஹ என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவச் சுருக்கம். 

“ '2032 ஆம் ஆண்டாகும் போது, சிங்களவர்களைவிட முஸ்லிம்கள் மிகைத்து 53% வீதமாகி விடுவர். எமது சிங்களத்தேசம் சட்டபூர்வமாக அவர்களின் கைகளுக்கு மாறிவிடுகிறது. இப்போதிருந்தே முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நிறுத்திக் கொள்வோம்.

ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் நின்றும் தவிர்த்துக் கொள்வோம். எமது காணி, பூமிகளை அவர்களுக்கு விற்பதையும் தவிர்ப்போம். எமது பெண் பிள்ளைகள் தம்பியாக்களை மணமுடிக்க அனுமதிக்கக்கூடாது. எடிசலட் போன்ற நிறுவனங்கள் பள்ளிகள் அமைப்பதற்கு பெருந்தொகைப் பணம் வழங்குகின்றன. பெஷன்பாக், நோலிமிட் போன்ற நிறுவனங்களில் ஆடை, அணிகள் வாங்க வேண்டாம். எமது நாட்டைப் பாதுகாப்போம். நீ உண்மையான சிங்களவனாயின் இதனை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்’

மேலே உள்ள கூற்று, எஸ்எம்எஸ் போன்ற குறுந்தகவலில் ஒன்று. இது 077 0747955 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு இன்று வந்தது. ஆனால், இதனை அனுப்பியவர் யார்? என்று இன்றுவரை தெரியாது. எப்படிப் போனாலும் குறுந்தகவலின் இறுதியில் கேட்கப்பட்டிருப்பது, 'நீ உண்மையான சிங்களவன் ஆயின் இதனை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளாகும்.

நான் அதற்குச் செய்தது, அந்த தகவலை ஒரு தாளில் எழுதிக் கொண்டு, தொலைபேசியிலிருந்ததை அழித்துவிட்டேன். அத்துடன், மேற்படி இலக்கத்துக்கு, நான் ஒரு தகவலை அனுப்பினேன். அதில், 'யார் இந்த கழுதை?’ என்பதே எனது குறுந்தகவல் பதிலாகும்.

நான் நினைக்கிற விதத்தில், கழுதைக்கு இருக்கிற அளவிலாவது மூளை உள்ள மனிதன் கூட மேற்படி தகவலை வெளியிட மாட்டான் என்பதே எனது கருத்தாகும். இனவாதம் என்பதை ஏற்று பின்பற்றுவதும் அதனை மிகவும் பாரிய ஒன்றாக நம்பி வந்த மனிதர்கள் வாழ்ந்த உலகம் நாகரிகமடையாத கால கட்டத்திலாகும். அதன் பிறகு, நவீன யுகத்தில் அந்த இன, தேசிய வாதம் அழகிய சொற்பிரயோகங்களால் அலங்கரிக்கப்பட்டு, முன்னுக்கு வந்தது. தினந்தோறும் காலையில் வானொலியில் தேசாபிமான கீதம் இசைக்கப்படும் நிலை ஏற்பட்டதும் அதனாலாகும்.

யுத்தகளத்தில் இறந்தது சிங்களவராயின்
மார்பிலே துப்பாக்கிச் சூடு துளைத்திருக்கும்
எதிரிகளோடு நெஞ்சுக்கு நேர் நின்று
போராடியே இறந்திருக்கிறார்.
புற முதுகு காட்டி ஓடி
பின்புறம் இல்லை சூடு

இந்த பாடல் கருத்து மூலம் கூறவருவது, சிங்களவர்கள் மாத்திரம்தான் புறமுதுகு காட்டி ஓடுவதில்லை என்றும், ஏனையவர்கள் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் என்றுமே உணர்த்தப்படுகிறது. இந்த இன, மதவாதக் கூற்றுக்கள் எதற்கு? தான் சார்ந்த இனம் மாத்திரம் தான் உலகில் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். அத்துடன் தான் சார்ந்த இனமே உலகில் மேலான இனம் என்பதும் இவர்களது நினைப்பாகும். ஹிட்லரிடம் காணப்பட்டதும் இந்த வியாதிதான். இதுவும் ஒரு மனநோயாகும். மிகவும் இலகுவான முறையில் உலகில் இத்தகைய நம்பிக்கை நிலைப்பெற்றுக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். தன்னைச் சுற்றியுள்ள ஏனைய இனம், மதத்தைச் சேர்ந்தவர்கள் எம்மைப் போன்ற மனிதர்களே. நாம் எப்படி அவர்களை விட உயர்ந்து வேறுபட முடியும்?, அவ்வாறு ஆகமுடியாது. நாம் கலாசாரரீதியாக வேறுபட முடியும்.

இந்த உலகம் பல்வேறு வகையான நிறங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கும் ஓரினம் மற்றோர் இனத்தைவிட உயர்ந்தோ தாழ்ந்தோ வேறுபடுவதில்லை. இதற்கு மாற்றமாக உயர்வு தாழ்வு கருதப்படுமானால் அது ஒரு மனநேயாகும். பௌதீக வளர்ச்சி கண்டுள்ள இந்த உலகில் இது குறித்து பலரும் நன்கறிவர். இது சீனோபோமியா என்று சொல்லப்படுகிறது. அதாவது தனது இன, மதத்தைத் தவிர ஏனையவை குறித்து பயம், வெறுப்புடன் நோக்கும் தன்மையாகும். இதனை “அந்நிய பீதி’ என்று தமிழில் அழைக்கலாம். இந்த நிலைப்பாடும் ஒரு மனநோயாகும்.

இதன் வெளிப்பாடே எமது இனம், எமது பூமி, எமது அது, எமது இது…, என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே பைத்தியக் கூத்தாடுகிறார்கள். இவையெல்லாம் மேற்படி மனநோயின் வெளிப்பாடு என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

போலந்து நாட்டில் பிறந்த பிரித்தானிய நாட்டவரான ஹென்ரிடபெல் (Henri Tatel) 1919-1982 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இத்தகையோர் மதிப்பீடு செய்த சமூக அடையாளக் கோட்பாடு (Social Identity Theory) ஊடாக இந்நிலைப்பாட்டை மிகவும் சிறந்த முறையில் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

சமூக விஞ்ஞானக் கல்வி, சமூக உளவியல் விஞ்ஞானம் போன்ற கல்வித்துறைகளில் இவைக் குறித்து நன்கு விபரிக்கப்பட்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக எமது எத்தகைய உயர் கல்வி நிறுவனங்களிலும் மேற்படி பாடம் போதிக்கப்படுவதில்லை. இதனால், இதனை எம்மால் கண்டுகொள்ளவோ, படித்துணரவோ முடியாதிருக்கின்றது.

அதனால்தான், பொதுபலசேனா போன்ற அடிப்படைவாதிகள் மனநோயால் புரியும் செயற்பாடுகளின் உள்ளே இருக்கும் சமூக விஞ்ஞானம் அல்லது உளவியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் காணப்படும் விடயங்கள் குறித்து இந்நாட்டின் சாதாரண மக்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த குறுந்தகவல் விடயம் குறித்து அலசுவோம். 2032-இல் முஸ்லிம்களின் சனத்தொகை 53% வீதம் ஆகிறதாம். இனி அதற்கு நாம் என்ன செய்வது? அவர்கள் பிள்ளை பெறுவதை எங்களால் தடுக்க முடியாது.

முஸ்லிம்களில் பெரும்பாலானோர் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் அவர்கள் கூடுதலான பிள்ளைகள் பெறுகிறார்கள். சில சமயங்களில் ஓர் ஆண் மூன்று, நான்கு பெண்களை மணமுடித்து, பிள்ளை பெற்றெடுக்கிறார்கள். அது அந்த இன, மதத்தவர்களது நிலைப்பாடு, அதற்கு எம்மால் என்ன செய்ய முடியும்? அவர்களைப் போல் பிள்ளைகள் பெற்றெடுக்க எம்மால் முடியும். யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால் சிங்களவர்கள் இதனை விரும்புவதில்லை. ஒன்று, இரண்டோடு நிறுத்திக் கொண்டு சொகுசாக வாழவே விரும்புகிறார்கள். இப்படியே இரண்டு, மூன்று பரம்பரைகள் கழிந்த பின் திரும்பிப் பார்க்கையிலேயே அந்த பொதுபலசேனா போன்ற பைத்தியக்கார கூட்டத்திற்கு இது தெரிபடுகிறது.

சோமஹாமுதுருவும் இதற்கு முன்னர் இதனை முன்வைத்தார். ஆனால், அவர் சொன்னது முஸ்லிம்களைப் போல பிள்ளைகள் பெறும்படிதான். அதனைச் சாதிக்க எமது சமூகப் பின்னணி சரியாக இல்லை என்பதற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவது நல்லதல்ல. இதற்கு, சிங்களவர்கள் ஒரு வருடத்திற்கு குடிக்கும் மதுபானத்துக்கு செலவு செய்யும் பணத்தைக் கூட்டிப் பார்த்தால் அதனைப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை. அது அந்த மக்களின் தவறல்ல. எனவே, சிங்களவர்களும் முஸ்லிம்களைப் போன்று மதுவருந்தாது முன்னேறப் பார்க்க வேண்டும். எந்த சிங்கள பௌத்தன் இதனைச் செய்ய முன்வருவான்? அடுத்து இலங்கையில் முன்னணி ரேஸ் புக்கி வைத்திருப்போரின் சுமத்திபாலைகள் பௌத்த மகா சம்மேளனத்தின் தலைமைப் பதவி வகித்திருப்பது குறித்து பொதுபலசேனாவுக்கு பிரச்சினையில்லையா?

அடுத்தபடியாக முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் என்று தடை விதிக்கிறார்கள். வியாபாரிகளை ஏன் இன, மத ரீதியாக நோக்க வேண்டும்? வாடிக்கையாளர் விரும்பும் பொருள் நல்ல தரத்தில், நியாய விலையில் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன, மதம் அல்ல. குறித்த வர்த்தகரும் நல்ல பண்பு அன்புடன் பழகுகிறாரா? என்பதே முக்கியம். அந்த அடிப்படையிலும் முஸ்லிம்கள்தான் சிறந்து விளங்குகின்றார்கள். எனவே அவர்களின் கடைகளையே நாடுவது இயல்பு. இப்பழக்க வழக்கங்களை சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்தால் என்ன?

அதையடுத்து, காணி பூமிகளை முஸ்லிம்களுக்கு விற்க வேண்டாம் என்பதாகும். சிங்களவர்கள் காணி விற்கும் நிலை ஏற்படுவது, குடும்பத் தலைவர் நன்றாகக் குடிப்பழக்கமுள்ளவர். அல்லது உழைக்கும் பணத்தை குதிரைப் பந்தயம், சூதாட்டங்களில் தாரை வார்த்து விடுவது. அல்லது தனது உழைப்பை மீறி பிற பெண்மணிகளுடன் தொடர்பு கொள்வது. இதனைத்தவிர குடும்பத்தில் பிள்ளைகள் ஒருவரோ, இருவரோ போதைத்தூளுக்கு அடிமையாதல், இவ்வாறு காலம் தள்ளும் போது பணமின்றி வீடு, காணிகளை அடகு அல்லது விற்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த காணி பூமிகளை வாங்குவதற்கு முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். இவர்கள் மேலே கண்ட அத்தனை தீய பழக்கங்களிலும் ஈடுபடமாட்டார்கள். அதனால் அவர்களிடம் பணம் இருக்கிறது. சட்ட ரீதியாக வாங்குகிறார்கள்.

அத்துடன், சிங்கள பௌத்தர்கள் அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறி சிங்களம் பேசக்கூடத் தெரியாத பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாய உலகில் சிறைப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் இந்நாட்டு நிலம் படிப்படியாக கைமாறுவது முஸ்லிம்கள் செய்யும் குற்றமா?

இதனை அடுத்து எமது பெண் பிள்ளைகளை தம்பியாக்களுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. எனக்கும் மூன்று மகன்மார்கள் இருக்கிறார்கள். அவர்கள் மணம் முடிப்பது தம்பியா? சிங்களமா? தமிழா?, ஆங்கிலமா? என்று தீர்மானிப்பது பிள்ளைகள் அன்றி நானல்லன். தற்போது நிகழ்வது 2013 அன்றி 1913 அல்ல. இத்தகைய திருமணங்களைத் தடுப்பதற்கு அவர்களது பாலியல் உறுப்புக்களை வீட்டுப் பெட்டகம், அலுமாரிகளில் பூட்டி வைக்கவா சொல்கிறார்கள்? எருமை மாட்டுக் கதைதான் விடுகிறார்கள். பகுத்தறிவுக்குப் புறம்பான கோரிக்கைகளைத்தான் விடுக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் துணிக்கடைகளில் நோலிமிட், பெஷன்பாக் ஆகிய இரு நிறுவனங்களும் மக்களால் கவரப்பட்ட முன்னணி நிறுவனங்களாகும். இவற்றில் கொள்வனவு செய்வோர் மதம் பார்த்து வாங்குவதில்லை. நியாய விலைகளுக்கு பொருட்கள் விற்பதன் மூலமே இந்நிறுவனங்கள் மக்கள் ஆதரவைப் பெற்று முன்னுக்கு வந்திருக்கின்றன. அதற்காக பொறாமைப்பட்டு, கீழ்த்தரமான குறுந் தகவல்கள் அனுப்பியோ கடைகளை உடைத்து நாசப்படுத்தியோ அராஜகம் புரிவது நியாயமாகாது.

அவர்கள் முன்னேற்றமடைந்ததற்கான இரகசியங்களைக் கண்டறிந்து அவற்றை நாமும் பின்பற்றுவதன் மூலமே அவர்களது நிலையை அடையலாம். பொருளாதாரத்தில் வியாபாரம் என்பது ஏகாதிபத்திய முறை அல்ல. போட்டியுடன் கூடிய ஒன்று.

எனவே, இந்த பொதுபலசேனா எனும் கோத்திர அணிக்கு நாம் சொல்வது, உலகத்தின் முன் முறைகேடான குற்றச் செயல்களில் இறங்க முயற்சிப்பதை விடுத்து தமது குழு என்று சொல்லும் சிங்கள பௌத்தர்களுக்கு, அவர்களது குறை நிறைகளைச் சீர்செய்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்க வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

அவ்வாறு செய்யத் தவறினால் இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கும் “மச்சான் சாது’ களுக்கும் வித்தியாசமே இருக்காது. இந்த பேராசைபிடித்த இனவாதத்துக்குப் பதிலாக எமது நாட்டு மக்களுக்கு நல்ல வழி காட்டிகளாக அமையலாம்.

புத்த என்பது புத்தி என்பதாகும். தலை இல்லாத முண்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. எனவே, புத்த தர்மத்துக்கு மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தலையற்ற முண்டத்திற்கு ஒப்பானவர்களாவார்கள். எனவே, புத்த தர்ம கோட்பாடுகளை உரிய அடிப்படையில் முன்வைத்து நாட்டை அமைதியாக வழிநடத்த வழி செய்யும் படி இந்த ஈனியா பொதுபலசேனாவின் மச்சான் சாதுகளிடம் கருணையுடன் கேட்டுக் கொள்கிறேன்"

(சிங்களத்தில்: சேபால் அமரசிங்க) 
(தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்)

நன்றி: Rasminmisc

Sunday 10 March 2013

"நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"



இறைவனின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

விவாதத்திற்கு பிறகு - லாரன்ஸ் க்ராஸ் மற்றும் 
ஹம்ஸா ஆண்ட்ரியஸ் 

மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an atheist, I know very good scientists who aren't atheists - அறிவியல் நீங்கள் நாத்திகராக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது நாத்திகத்திற்கான வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களே. பார்க்க http://www.ethirkkural.com/2010/09/blog-post_28.html

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 



Sunday 10 February 2013

சவூதி போதகர்-மகள் விவகாரம்: புளுகுமூட்டை ஊடகங்கள்...



சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை (rape) செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. 

அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை. 

லுமாவின் தாய் 'தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக' வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண <<இங்கே>>

என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை. 

உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் 

நன்றி: gulf news, முஹம்மது ஆஷிக்

Sunday 27 January 2013

விஸ்வரூபம் - தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்



குறிப்பு : இது உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் தங்கசாமி அவர்களின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு, அப்படியே இங்கு பதியப்படுகிறது.


இது ரொம்ப நீண்ட பதிவு அதனால் பொறுமையாக படிக்கவும்..

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை (திரையரங்கில்!) பார்த்து முடித்து சில மணிநேரம் தான் ஆகிறது.. சூடு ஆறும் முன்பே எனது ஆய்வு இங்கே.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

பெரிய சினிமா ரசிகன் இல்லை என்றாலும் இவ்வளவு பிரச்னையை கிளப்பிய இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கவே சென்றேன்.. (இதே காரணத்திற்காகத்தான் இத்தனை சர்ச்சைகளை கமலும் கிளப்பினார் என்று கருதுகிறேன்.. இது கமலின் முதல் மற்றும் ஒரே வெற்றி!!)

முதலில் படத்தின் நல்ல விடயங்கள் சில.. ஆரம்ப காட்சிகளில் பெண்மை ததும்ப வரும் கமலின் அருமையான நடிப்பிற்கு நானும் என்னை மறந்து கூட்டத்துடன் கைதட்டி மகிழ்ந்தேன்.. முதல் பாடலில் கமலின் நடனம் கூட்டத்தை ஈர்க்கவே செய்தது.. கமலின் சுயரூபம் விளங்கியதும் அப்பாவி மனைவியின் அதிர்ச்சிகள் நிறைய சிரிப்பொலிகளை ஒரு பக்கம் எழுப்பினாலும் உள்ளாடை(Bra) பற்றிய காமெடி எல்லாம் சுமாரான ரசனை..

சண்டை முடிந்து வரும் கமல் முடியை சுத்தமாக வெட்டி கிராப் வைத்துக்கொண்டு இறங்கி வரும்போது மனைவி பிரமிக்கிறாள்.. தியேட்டரில் யாரும் பெருசா react பண்ணுன மாதிரி தெரியல. மற்றபடி பெரிதாய் ரசிக்கும்படியோ பிரமிக்கும்படியோ படத்தில் எதுவும் இல்லை..

இதில் ஹாலிவுட்டுக்கு இணையாக படம் எடுத்துவிட்டதாக கமல் நம்புவது அவர் மேல் பரிதாபத்தையே உண்டாக்குகிறது..

வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. ஹிந்தி மட்டும் இந்தியாவின் மொழியல்ல என்று கூச்சல் போடுகிறோம். (இத்தனைக்கும் நிறைய மக்கள் பேசுகிறார்கள்/புரிந்துகொள்கிறார்கள்) ஆனால் கடுகளவு சிறுபாண்மையான பிராமணர் மட்டும் தான் தமிழ்நாட்டில் வாழ்பவர் என்கிற பாணியில் தான் கமல் படங்கள் எப்போதும் இருக்கும். அது ஊர் அறிந்த ரகசியம் தானே.. அதை விட்டு விடலாம்.

தமிழகத்தின் ஒரு அறுதி சிறுபான்மையான பிராமணர்களை தவிர வேற யாரை கொண்டும் படம் எடுக்க தெரியாத கமல் என்னத்த உலக நாயகன்? தசாவதாரத்தில் தலித் என்று சொல்லிக்கொண்டு பார்க்க சகிக்காத ஒரு வேடம் பூண்டு வந்த கமலால் சராசரி தமிழனை அழகாகவோ, கேமரா முன்னாள் நிற்க தகுதி உள்ளவனாகவோ பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் தன் பிராமண பிரிவுக்குள்ளாவது ஒரு பரந்த சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதுக்குள்ளேயும் அய்யங்காருக்கு அவர்களுக்கு படம் முழுக்க பெருமாள் பஜனை தான்.

முதலில் இது ஹாலிவுட் தர படமா என்ற கேள்வியே தேவையற்றது.. தமிழன் கலை படைப்புகளில் என்றைக்கும் பின் தங்கியவன் இல்லை.. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.. மேலும் ஹாலிவுட் படங்களின் உன்னதம், வெற்றி அவர்கள் பறக்கவிடும் விமானங்களிலும், வெடிக்கவிடும் கட்டிடங்களிலும் இல்லை.. கதை சொல்லும் நேர்த்தியில் உள்ளது..

உலக சினிமாவின் தலைசிறந்த படங்களாக பல தலைமுறைகளை தாண்டியும் நின்று நிலைக்கும் Shawshank Redemption, Godfather, Pulp Fiction, Fight club, 12 Angry Men, Psycho, The Pianist போன்ற படங்கள் கோடிகளை வாரி இறைத்து எடுக்கப்பட்டவை அல்ல.. அன்றியும் Inception, Dark Knight, Matrix போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதையின் சுவாரசியமே..

தமிழ் சினிமாவை உலகம் வியக்கும்படி செய்வது விஸ்வரூபம் போன்ற படங்கள் அல்ல. அந்த நாள், வீடு, மௌன ராகம், முந்தானை முடிச்சு, சிகப்பு ரோஜாக்கள், அழகி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தான்.. பிரம்மாண்டம் என்றாலும் சந்திரலேகாவின் உச்சகட்ட நடனக்காட்சியும், அவ்வையார் படத்தில் யானைகள் கோட்டையை இடிக்கும் காட்சியும் பெரிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் போனாலும் இன்றைக்கும் ரசிக்க வைப்பது அதில் வாரி இறைத்த காசு அல்ல.. அதற்கான தேவையை உண்டாக்கும் திரைக்கதை தான்.

இந்த படத்தை பார்க்கையில் பழையகால Manual vending Machine ஒன்றில் என் அறிவுஜீவி நண்பன் காபித்தூள், பால், சர்க்கரை ஆகிய பொத்தான்களை வேக வேகமாக அழுத்திவிட்டு குவளை(Cup) பொத்தானை அழுத்த மறந்தது தான் நினைவுக்கு வருகிறது..

சரி அப்படியும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளிலாவது சிறந்து விளங்குகிறதா என்றால் இல்லை. சராசரி தமிழ்ப்படங்களை விட நிறைய உலங்கு ஊர்திகளை (Helicopters) பறக்க விட்டுள்ளார்.. அவ்வளவே.. தமிழ் மொழியிலே மட்டுமே வெளியிடப்படும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமலின் படம் கொஞ்சம் high-tech ஆகத்தான் தோன்றும். விஜய், அஜீத் படங்களை விட சாதுர்யமாகதான் இருக்கும். ஆனால் Saving Private Ryan, Troy போன்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுக்கொல்வது ரொம்ப அதிகம்.

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..

ஆங்கிலப்படங்கள் பார்க்காத நம்மூர் மக்களை ஏமாற்றுவதில் கமலஹாசனுக்கு ஒரு கள்ளப்பெருமை இருக்கலாம், அதில் ஹாலிவுட் படங்களையும் ரசிப்பவர்கள் பாராட்ட எதுவும் இல்லை..

மற்றபடி மொத்தப் படமும் freezerல் வைத்து பல நூற்றாண்டுகளாக அறைக்கப்படும் அதே ஊசிப்போன மாவு தான். பின்னணி இசையிலும் பல இடங்கள் Dark Knight உட்பட எனக்கு பிடித்த பல படங்களில் இருந்து சுட்டவையே.. (தழுவல் என்று வேண்டுமானால் நாசூக்காக சொல்லாம்.)

ஆனால் பாடல்கள் காப்பி அடித்தது போல இல்லை.. தனித்தன்மையுடனே இருக்கின்றன அனைத்து பாடல்களும்.

இத்தகைய அமெரிக்க ராணுவ வீர சாகச மொக்கை படங்களை அந்த கதையுடன் நேரடி தொடர்பு உள்ள அமெரிக்கர்கள் கூட இப்போதெல்லாம் அவ்வளவாக ரசிப்பதில்லை.. அதையே தமிழ்மொழியில் எடுத்து கமல் பெருமைப்படுவது நகைப்புக்குரியது.

மேலைநாடுகள் பழசு (Outdated technologies) என்று தூக்கி எரியும் போர் தலவாடங்களை வாங்கி குவித்து அதை வருடம் இரண்டு முறை ஊர்வலம் விட்டு பெருமைப்படும் இந்திய ராணுவம் போல..

விஸ்வரூபம் ஒரு புஸ்வானம் என்பது ஒரு பக்கம் இருக்க. இந்த படத்திற்கு வந்த தடையும் அதன் தாக்கமும் பற்றி யோசிக்கிறேன்.

ஒரு பெண்ணின் தலையை அறுத்து கொல்லும் தீவிரவாதிகளை மௌனமாக ஏற்றுக்கொண்டுவிட்டு, இப்போது ஒரு சினிமாவுக்காக கொதித்தெழுந்து வீரவசனம் பேசும் எந்த இஸ்லாமிய அமைப்பின் கோரிக்கையையும் நாம் பெரிதுபடுத்தக்கூடாது. இத்தகைய அமைப்புகள் தாங்களே இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்று காட்டவே முயற்சி செய்கின்றன அன்றியும் அதில் நேர்மை இல்லை.

ஆனால் இவர்கள் படத்தை எதிர்ப்பதால் உடனே நாம் மாறாக ஆதரிக்கலாகாது. இந்த படத்தை எதிர்ப்பதற்கு நமக்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு. கமல்ஹாசன் என்ற கலைஞனுக்கு வக்காலத்து வாங்கிய பலரும் (நான் உட்பட) இது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே பார்த்தனர் வேறு எதுவும் காரணம் இல்லை. ஆனால் இந்த படம் கலை வடிவமும் அல்ல, கமல் நேர்மையான கலைஞனும் அல்ல. இதை படம் பார்த்த பின்பு அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

நல்ல கலைஞனுக்கும் அவனது படைப்புக்கும் மூன்று முக்கியமான குணங்கள் உண்டு. ஒன்று தன் கலை வடிவத்தில் உண்மையை மட்டுமே பரப்பே வேண்டும் என்ற பிடிவாதமான நேர்மை.. இரண்டாவது தன் கலை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக அக்கறை.. இன்னொன்று அந்த கலையை புதுமையாக மெருகூட்டும் ஆர்வம். Creative Instinct என்றும் சொல்லலாம். இதில் எதுவுமே கமலுக்கு இல்லை.

மூன்றாவது விடயத்தை முதலில் பார்ப்போம்.. முழுக்க முழுக்க பல படங்களில் இருந்து சுட்ட காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை.. இது எதேச்சையாக நடந்தது அல்ல.. Creativity is all about hiding your sources என்று Einstein சொன்ன தத்துவத்தையே இங்கு கமல் மெய்ப்பித்திருக்கிறார். பிறமொழி படங்களை பார்க்காத பெரும்பான்மை தமிழ் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கலாம்.. பிறமொழி படங்கள் குறிப்பாக ஆங்கில படங்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் மட்டுமே மிஞ்சும். எனவே இது creativity என்ற பட்டியலில் எக்காலத்திலும் சேராது.

கூச்சமே படாமல் காப்பியடித்து Xerox machine என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் தேவா ஏனோ நினைவுக்கு வருகிறார். இதுமாதிரி படங்களில் கோடிகளை போட்டு கோடிகளை அள்ள துடிக்கும் கமலின் செயல் ஒரு வியாபாரியின் சிந்தனையே அன்றி ஒரு நல்ல கலைஞனின் சிந்தனை அல்ல.

உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி உட்பட பல நல்ல திரைப்படங்கள் சிக்கலில் தவிக்கும் போது இமயமலை சாமியார்களுக்கு பேன் பார்க்க போய்விடும் ரசினிகாந்து இந்த படத்துக்கு வக்காலத்து வாங்குவது சக வியாபாரி என்ற பாசமே அன்றி இவர்கள் யாரும் கருத்து சுதந்திர போராளிகள் இல்லை.

அடுத்து இரண்டாவது விடயம். சமூக அக்கறை. தீமை பயக்கும் மெய்யை விட, நன்மை பயக்கும் பொய்யே நல்லது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தீமையை மட்டுமே விளைக்கும் நிரூபிக்கப்படாத உண்மைகளை பரப்புவது எதற்காக?

தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.

மூன்று விடயங்களில்.. முதல் விடயமே நம்மை மிகவும் கவலை கொள்ள செய்யும். அது நேர்மையின்மை. கதை சொல்பவர்கள் கொஞ்சமேனும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு திரித்து சுய-நியாயம் ஏற்று கூறுவது இயல்புதான். ஆனால் அது அளவை மிஞ்சும்போது ஆபத்தாகி அந்த கலையின் ஜீவனையே கொன்றுவிடும்.

இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.

அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை (அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.

அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.

வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும், ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.

இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான். ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம். ஆனால் அவரின் ஆஸ்கார் கனவை எண்ணி சிறு வயது முதல் பெருமைபட்ட எனக்கு இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.

ஆஸ்கார் கனவு என்பது ஆகச்சிறிய செயல்திட்டம். ஆனால் வேறொரு விஷயம் உதைக்கிறது. திரைக்கு முன்னரே DTH ல் வெளியிடுவதால் ஒன்று லாபம் அதிகம் வரலாம். அல்லது தொலைகாட்சியில் பார்த்துவிட்டதால் திரையரங்கு வசூல் குறைந்து போகலாம். குறையும் என்பதே பரவலான நம்பிக்கை என்கிற ரீதியில் ஏற்றுக்கொண்டால், கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.

ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம். இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது. இதில் கமலுக்கு என்னதான் லாபம்?

ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார். இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது? தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது? மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான். ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”

மற்றபடி தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத, நேர்மை இல்லாத, ரசனை இல்லாத, Creativity இல்லாத படம் என்றாலும் வெளிவரும் முன்னரே தடை செய்வது நல்ல முன்னுதாரணமாக இருக்காது. பல நல்ல படைப்பாளிகளின் குரல்வளை நெரிக்கப்பட இதுவே ஒரு தொடக்கப் புள்ளியாகிவிடும். There seems to be no genuine artistic experimentations or social motivations behind this movie.

ஆனாலும் நல்ல படமா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு பொது மக்களுக்கே விடப்பட வேண்டும். அதனால் இந்த படம் வெளியாக வேண்டும். தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். ஒருவேளை இது வெளிவந்து சீந்துவார் இல்லாமல் போனால் அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும். உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும். இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும் அதுவே உருவாக்கியவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் வெளிவந்த உடனே இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா முடிவு கட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்து ஆட வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த படம் அத்தகைய ஒரு துயர வரலாற்றுக்கான அச்சாரமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கமல் என்கிற கலைஞனின் மீது நடந்ததாக கூறப்படும் ஒடுக்குமுறை பற்றிய எனது கருத்து இதுதான். கடுமையாக உழைத்தே தன்னை நிலைநிறுத்திக்கொண்ட போதும் கமலுக்கு அறிமுகம்தொட்டே மிக பலம் வாய்ந்த சினிமா பின்புலம் இருந்து உதவியது. அதனால் பல தோல்விகளுக்கு பிறகும் அவரால் தொடர முடிந்தது. இன்று பல கோடிகளை போட்டு பிரம்மாண்ட “உலக சினிமா” பண்ணும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. என்னை பொருத்தவரை இதில் பெருமை என்று பெரிதாய் எதுவும் இல்லை.

கோடி ரூபாய்க்கு வாங்கிய BMW காரில் போகிறவனை ஒரு நல்ல Driver சுமாரான இண்டிகா கொடுத்தாலும் தட்டி எரிஞ்சிட்டு போயிடுவான். விஸ்வரூபத்தை இந்த கோணத்தில் தான் "நான் யுத்தம்" செய் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.

என்ன செய்ய வாய்ப்புகள் கிடைக்காமலேயே பல திறமைசாளிகளின் வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது. கமல் போன்றவர்களுக்கு காலமும் சூழ்நிலையும் பல நூறு வாய்ப்புகளை வழங்குகிறது.

80 கோடி அல்ல 8 கோடியிலேயே உலக சினிமா எடுக்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர் அவர்களை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்.

...முற்றும்...

அவரின் பேஸ்புக் முகவரி ... 

http://www.facebook.com/photo.php?fbid=4359933596810&set=a.1679865436781.2085416.1241881682&type=1&theater

Wednesday 23 January 2013

News Flash: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை



சட்டம் ஒழுங்கை கணக்கில் கொண்டு அடுத்த பதினைந்து நாட்களுக்கு விஸ்வரூபம் படம் திரையிடப்பட தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே தடையை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அறிவிப்பு.

விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை கண்டு கடும் எதிர்ப்பை தெரிவித்த முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, படத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது.

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக களம் இறங்க, சமூக வலைத்தளங்கள் பரபரத்தன. முதல் கட்டமாக நேற்று கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் சென்சார் போர்ட் நடவடிக்கைகள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது நடந்துக்கொண்டிருந்த வேலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக இன்று அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இன்று தலைமைச் செயலரை சந்தித்து இஸ்லாமிய கூட்டமைப்பு முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்தது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இன்று குதிக்க இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. கமலின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நீங்கள் மேலே காணும் செய்தி வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

மிகவும் சமயோஜிதமாக இந்த விசயத்தை முஸ்லிம் அமைப்புகள் கையாண்டிருக்கின்றன.துப்பாக்கி படம் கொடுத்த ஷாக்கில் சுதாரித்த முஸ்லிம் அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்ட பிறகே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வெற்றி கண்டிருக்கின்றன. எதிர்கால வியூகங்களுக்கு விஸ்வரூபம் விவகாரம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

இந்த படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தவுடன், படத்திற்கு முஸ்லிம்கள் விளம்பரம் அளிக்கின்றனர் என்று கூறிவந்தவர்களின் பார்வையும் இந்த தடை மூலம் மாறும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

கீழ்த்தரமான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம்.


மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ