Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday, 23 April 2013

இஸ்லாமிய நாடாகுமா இலங்கை?


     முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளினால் பரப்பப்படும் ஒரு குறுஞ்செய்தி(SMS)க்கு சிங்கள மொழியில் வெளிவரும் “பெபராஸியா’ என்ற மாத இதழின் 2013 ஜனவரி பெப்ரவரி இதழில் சிந்தனையாளர் சேபால் அமரசிங்ஹ என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவச் சுருக்கம். 

“ '2032 ஆம் ஆண்டாகும் போது, சிங்களவர்களைவிட முஸ்லிம்கள் மிகைத்து 53% வீதமாகி விடுவர். எமது சிங்களத்தேசம் சட்டபூர்வமாக அவர்களின் கைகளுக்கு மாறிவிடுகிறது. இப்போதிருந்தே முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நிறுத்திக் கொள்வோம்.

ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் நின்றும் தவிர்த்துக் கொள்வோம். எமது காணி, பூமிகளை அவர்களுக்கு விற்பதையும் தவிர்ப்போம். எமது பெண் பிள்ளைகள் தம்பியாக்களை மணமுடிக்க அனுமதிக்கக்கூடாது. எடிசலட் போன்ற நிறுவனங்கள் பள்ளிகள் அமைப்பதற்கு பெருந்தொகைப் பணம் வழங்குகின்றன. பெஷன்பாக், நோலிமிட் போன்ற நிறுவனங்களில் ஆடை, அணிகள் வாங்க வேண்டாம். எமது நாட்டைப் பாதுகாப்போம். நீ உண்மையான சிங்களவனாயின் இதனை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்’

மேலே உள்ள கூற்று, எஸ்எம்எஸ் போன்ற குறுந்தகவலில் ஒன்று. இது 077 0747955 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு இன்று வந்தது. ஆனால், இதனை அனுப்பியவர் யார்? என்று இன்றுவரை தெரியாது. எப்படிப் போனாலும் குறுந்தகவலின் இறுதியில் கேட்கப்பட்டிருப்பது, 'நீ உண்மையான சிங்களவன் ஆயின் இதனை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளாகும்.

நான் அதற்குச் செய்தது, அந்த தகவலை ஒரு தாளில் எழுதிக் கொண்டு, தொலைபேசியிலிருந்ததை அழித்துவிட்டேன். அத்துடன், மேற்படி இலக்கத்துக்கு, நான் ஒரு தகவலை அனுப்பினேன். அதில், 'யார் இந்த கழுதை?’ என்பதே எனது குறுந்தகவல் பதிலாகும்.

நான் நினைக்கிற விதத்தில், கழுதைக்கு இருக்கிற அளவிலாவது மூளை உள்ள மனிதன் கூட மேற்படி தகவலை வெளியிட மாட்டான் என்பதே எனது கருத்தாகும். இனவாதம் என்பதை ஏற்று பின்பற்றுவதும் அதனை மிகவும் பாரிய ஒன்றாக நம்பி வந்த மனிதர்கள் வாழ்ந்த உலகம் நாகரிகமடையாத கால கட்டத்திலாகும். அதன் பிறகு, நவீன யுகத்தில் அந்த இன, தேசிய வாதம் அழகிய சொற்பிரயோகங்களால் அலங்கரிக்கப்பட்டு, முன்னுக்கு வந்தது. தினந்தோறும் காலையில் வானொலியில் தேசாபிமான கீதம் இசைக்கப்படும் நிலை ஏற்பட்டதும் அதனாலாகும்.

யுத்தகளத்தில் இறந்தது சிங்களவராயின்
மார்பிலே துப்பாக்கிச் சூடு துளைத்திருக்கும்
எதிரிகளோடு நெஞ்சுக்கு நேர் நின்று
போராடியே இறந்திருக்கிறார்.
புற முதுகு காட்டி ஓடி
பின்புறம் இல்லை சூடு

இந்த பாடல் கருத்து மூலம் கூறவருவது, சிங்களவர்கள் மாத்திரம்தான் புறமுதுகு காட்டி ஓடுவதில்லை என்றும், ஏனையவர்கள் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் என்றுமே உணர்த்தப்படுகிறது. இந்த இன, மதவாதக் கூற்றுக்கள் எதற்கு? தான் சார்ந்த இனம் மாத்திரம் தான் உலகில் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். அத்துடன் தான் சார்ந்த இனமே உலகில் மேலான இனம் என்பதும் இவர்களது நினைப்பாகும். ஹிட்லரிடம் காணப்பட்டதும் இந்த வியாதிதான். இதுவும் ஒரு மனநோயாகும். மிகவும் இலகுவான முறையில் உலகில் இத்தகைய நம்பிக்கை நிலைப்பெற்றுக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். தன்னைச் சுற்றியுள்ள ஏனைய இனம், மதத்தைச் சேர்ந்தவர்கள் எம்மைப் போன்ற மனிதர்களே. நாம் எப்படி அவர்களை விட உயர்ந்து வேறுபட முடியும்?, அவ்வாறு ஆகமுடியாது. நாம் கலாசாரரீதியாக வேறுபட முடியும்.

இந்த உலகம் பல்வேறு வகையான நிறங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கும் ஓரினம் மற்றோர் இனத்தைவிட உயர்ந்தோ தாழ்ந்தோ வேறுபடுவதில்லை. இதற்கு மாற்றமாக உயர்வு தாழ்வு கருதப்படுமானால் அது ஒரு மனநேயாகும். பௌதீக வளர்ச்சி கண்டுள்ள இந்த உலகில் இது குறித்து பலரும் நன்கறிவர். இது சீனோபோமியா என்று சொல்லப்படுகிறது. அதாவது தனது இன, மதத்தைத் தவிர ஏனையவை குறித்து பயம், வெறுப்புடன் நோக்கும் தன்மையாகும். இதனை “அந்நிய பீதி’ என்று தமிழில் அழைக்கலாம். இந்த நிலைப்பாடும் ஒரு மனநோயாகும்.

இதன் வெளிப்பாடே எமது இனம், எமது பூமி, எமது அது, எமது இது…, என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே பைத்தியக் கூத்தாடுகிறார்கள். இவையெல்லாம் மேற்படி மனநோயின் வெளிப்பாடு என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

போலந்து நாட்டில் பிறந்த பிரித்தானிய நாட்டவரான ஹென்ரிடபெல் (Henri Tatel) 1919-1982 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இத்தகையோர் மதிப்பீடு செய்த சமூக அடையாளக் கோட்பாடு (Social Identity Theory) ஊடாக இந்நிலைப்பாட்டை மிகவும் சிறந்த முறையில் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

சமூக விஞ்ஞானக் கல்வி, சமூக உளவியல் விஞ்ஞானம் போன்ற கல்வித்துறைகளில் இவைக் குறித்து நன்கு விபரிக்கப்பட்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக எமது எத்தகைய உயர் கல்வி நிறுவனங்களிலும் மேற்படி பாடம் போதிக்கப்படுவதில்லை. இதனால், இதனை எம்மால் கண்டுகொள்ளவோ, படித்துணரவோ முடியாதிருக்கின்றது.

அதனால்தான், பொதுபலசேனா போன்ற அடிப்படைவாதிகள் மனநோயால் புரியும் செயற்பாடுகளின் உள்ளே இருக்கும் சமூக விஞ்ஞானம் அல்லது உளவியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் காணப்படும் விடயங்கள் குறித்து இந்நாட்டின் சாதாரண மக்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த குறுந்தகவல் விடயம் குறித்து அலசுவோம். 2032-இல் முஸ்லிம்களின் சனத்தொகை 53% வீதம் ஆகிறதாம். இனி அதற்கு நாம் என்ன செய்வது? அவர்கள் பிள்ளை பெறுவதை எங்களால் தடுக்க முடியாது.

முஸ்லிம்களில் பெரும்பாலானோர் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் அவர்கள் கூடுதலான பிள்ளைகள் பெறுகிறார்கள். சில சமயங்களில் ஓர் ஆண் மூன்று, நான்கு பெண்களை மணமுடித்து, பிள்ளை பெற்றெடுக்கிறார்கள். அது அந்த இன, மதத்தவர்களது நிலைப்பாடு, அதற்கு எம்மால் என்ன செய்ய முடியும்? அவர்களைப் போல் பிள்ளைகள் பெற்றெடுக்க எம்மால் முடியும். யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால் சிங்களவர்கள் இதனை விரும்புவதில்லை. ஒன்று, இரண்டோடு நிறுத்திக் கொண்டு சொகுசாக வாழவே விரும்புகிறார்கள். இப்படியே இரண்டு, மூன்று பரம்பரைகள் கழிந்த பின் திரும்பிப் பார்க்கையிலேயே அந்த பொதுபலசேனா போன்ற பைத்தியக்கார கூட்டத்திற்கு இது தெரிபடுகிறது.

சோமஹாமுதுருவும் இதற்கு முன்னர் இதனை முன்வைத்தார். ஆனால், அவர் சொன்னது முஸ்லிம்களைப் போல பிள்ளைகள் பெறும்படிதான். அதனைச் சாதிக்க எமது சமூகப் பின்னணி சரியாக இல்லை என்பதற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவது நல்லதல்ல. இதற்கு, சிங்களவர்கள் ஒரு வருடத்திற்கு குடிக்கும் மதுபானத்துக்கு செலவு செய்யும் பணத்தைக் கூட்டிப் பார்த்தால் அதனைப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை. அது அந்த மக்களின் தவறல்ல. எனவே, சிங்களவர்களும் முஸ்லிம்களைப் போன்று மதுவருந்தாது முன்னேறப் பார்க்க வேண்டும். எந்த சிங்கள பௌத்தன் இதனைச் செய்ய முன்வருவான்? அடுத்து இலங்கையில் முன்னணி ரேஸ் புக்கி வைத்திருப்போரின் சுமத்திபாலைகள் பௌத்த மகா சம்மேளனத்தின் தலைமைப் பதவி வகித்திருப்பது குறித்து பொதுபலசேனாவுக்கு பிரச்சினையில்லையா?

அடுத்தபடியாக முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் என்று தடை விதிக்கிறார்கள். வியாபாரிகளை ஏன் இன, மத ரீதியாக நோக்க வேண்டும்? வாடிக்கையாளர் விரும்பும் பொருள் நல்ல தரத்தில், நியாய விலையில் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன, மதம் அல்ல. குறித்த வர்த்தகரும் நல்ல பண்பு அன்புடன் பழகுகிறாரா? என்பதே முக்கியம். அந்த அடிப்படையிலும் முஸ்லிம்கள்தான் சிறந்து விளங்குகின்றார்கள். எனவே அவர்களின் கடைகளையே நாடுவது இயல்பு. இப்பழக்க வழக்கங்களை சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்தால் என்ன?

அதையடுத்து, காணி பூமிகளை முஸ்லிம்களுக்கு விற்க வேண்டாம் என்பதாகும். சிங்களவர்கள் காணி விற்கும் நிலை ஏற்படுவது, குடும்பத் தலைவர் நன்றாகக் குடிப்பழக்கமுள்ளவர். அல்லது உழைக்கும் பணத்தை குதிரைப் பந்தயம், சூதாட்டங்களில் தாரை வார்த்து விடுவது. அல்லது தனது உழைப்பை மீறி பிற பெண்மணிகளுடன் தொடர்பு கொள்வது. இதனைத்தவிர குடும்பத்தில் பிள்ளைகள் ஒருவரோ, இருவரோ போதைத்தூளுக்கு அடிமையாதல், இவ்வாறு காலம் தள்ளும் போது பணமின்றி வீடு, காணிகளை அடகு அல்லது விற்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த காணி பூமிகளை வாங்குவதற்கு முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். இவர்கள் மேலே கண்ட அத்தனை தீய பழக்கங்களிலும் ஈடுபடமாட்டார்கள். அதனால் அவர்களிடம் பணம் இருக்கிறது. சட்ட ரீதியாக வாங்குகிறார்கள்.

அத்துடன், சிங்கள பௌத்தர்கள் அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறி சிங்களம் பேசக்கூடத் தெரியாத பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாய உலகில் சிறைப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் இந்நாட்டு நிலம் படிப்படியாக கைமாறுவது முஸ்லிம்கள் செய்யும் குற்றமா?

இதனை அடுத்து எமது பெண் பிள்ளைகளை தம்பியாக்களுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. எனக்கும் மூன்று மகன்மார்கள் இருக்கிறார்கள். அவர்கள் மணம் முடிப்பது தம்பியா? சிங்களமா? தமிழா?, ஆங்கிலமா? என்று தீர்மானிப்பது பிள்ளைகள் அன்றி நானல்லன். தற்போது நிகழ்வது 2013 அன்றி 1913 அல்ல. இத்தகைய திருமணங்களைத் தடுப்பதற்கு அவர்களது பாலியல் உறுப்புக்களை வீட்டுப் பெட்டகம், அலுமாரிகளில் பூட்டி வைக்கவா சொல்கிறார்கள்? எருமை மாட்டுக் கதைதான் விடுகிறார்கள். பகுத்தறிவுக்குப் புறம்பான கோரிக்கைகளைத்தான் விடுக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் துணிக்கடைகளில் நோலிமிட், பெஷன்பாக் ஆகிய இரு நிறுவனங்களும் மக்களால் கவரப்பட்ட முன்னணி நிறுவனங்களாகும். இவற்றில் கொள்வனவு செய்வோர் மதம் பார்த்து வாங்குவதில்லை. நியாய விலைகளுக்கு பொருட்கள் விற்பதன் மூலமே இந்நிறுவனங்கள் மக்கள் ஆதரவைப் பெற்று முன்னுக்கு வந்திருக்கின்றன. அதற்காக பொறாமைப்பட்டு, கீழ்த்தரமான குறுந் தகவல்கள் அனுப்பியோ கடைகளை உடைத்து நாசப்படுத்தியோ அராஜகம் புரிவது நியாயமாகாது.

அவர்கள் முன்னேற்றமடைந்ததற்கான இரகசியங்களைக் கண்டறிந்து அவற்றை நாமும் பின்பற்றுவதன் மூலமே அவர்களது நிலையை அடையலாம். பொருளாதாரத்தில் வியாபாரம் என்பது ஏகாதிபத்திய முறை அல்ல. போட்டியுடன் கூடிய ஒன்று.

எனவே, இந்த பொதுபலசேனா எனும் கோத்திர அணிக்கு நாம் சொல்வது, உலகத்தின் முன் முறைகேடான குற்றச் செயல்களில் இறங்க முயற்சிப்பதை விடுத்து தமது குழு என்று சொல்லும் சிங்கள பௌத்தர்களுக்கு, அவர்களது குறை நிறைகளைச் சீர்செய்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்க வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

அவ்வாறு செய்யத் தவறினால் இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கும் “மச்சான் சாது’ களுக்கும் வித்தியாசமே இருக்காது. இந்த பேராசைபிடித்த இனவாதத்துக்குப் பதிலாக எமது நாட்டு மக்களுக்கு நல்ல வழி காட்டிகளாக அமையலாம்.

புத்த என்பது புத்தி என்பதாகும். தலை இல்லாத முண்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. எனவே, புத்த தர்மத்துக்கு மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தலையற்ற முண்டத்திற்கு ஒப்பானவர்களாவார்கள். எனவே, புத்த தர்ம கோட்பாடுகளை உரிய அடிப்படையில் முன்வைத்து நாட்டை அமைதியாக வழிநடத்த வழி செய்யும் படி இந்த ஈனியா பொதுபலசேனாவின் மச்சான் சாதுகளிடம் கருணையுடன் கேட்டுக் கொள்கிறேன்"

(சிங்களத்தில்: சேபால் அமரசிங்க) 
(தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்)

நன்றி: Rasminmisc