Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 24 June 2013

உத்தரகண்ட் - மோடி - பிணங்களின் மீதும் அரசியல்


மிகப்பெரிய இயற்கை பேரிடரை இந்த தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சடலங்கள் மீது தங்கள் சந்தர்ப்பவாதத்தை நுழைக்கும் சிலரை கண்டால் 'என்ன ஜென்மமோ' என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

தேசிய சக்திகளின் அனைத்து பிரிவுகளும் உயிர் காக்கும் பணியில் இறக்கப்பட்டு, கடுமையான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டிருக்கின்றனர். மீட்கும் பணியில் தங்கள் உயிரையும் சில வீரர்கள் இழந்துள்ளனர். இதுவரை சுமார் 17,000 மக்கள் மீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. 

ஆனால், இந்த சூழ்நிலையையும் சிலர் விடுவதாக இல்லை. உத்தரகண்டில் இருந்து சுமார் 15,000 மக்களை குஜராத் முதல்வர் மோடி மீட்டதாக செய்திகளை பரப்பிவிட்டனர். உண்மை என்ன என்பதை ஆராயாமல் இதனையும் சில ஊடகங்கள் வெளியிட்டன.  

ஒவ்வொரு மாநிலமும் உத்தரகண்ட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்க தங்களால் ஆன உதவிகளை செய்துவரும் நிலையில் இதற்கும் அரசியல் சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குஜராத்தை விட பல மாநிலங்களும் அதிகமாகவே நிதி உதவிகளை உத்தரகண்டிற்கு வழங்கியுள்ளன. ஆனால் யார் அதிகமாக செய்தது என்று பேச வேண்டிய தருணமோ அல்லது அதனை வைத்து குளிர்காய வேண்டிய சூழ்நிலையோ இதுவல்ல. 

ஆயிரமாயிரம் மக்களை மோடி காப்பாற்றியதாக வெளிவரும் தகவலை "புரளி" என்று வர்ணித்துள்ள மத்திய அரசு, அசாதரணமான இந்த சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளது. 

மிக காட்டமான அறிக்கை ஒன்றை இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, இவ்வாறான கருத்துக்களை விமர்சிக்க தனக்கு வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது 

"உத்தரகண்ட் மாநிலத்தில், தேசிய சக்திகளின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்து சனிக்கிழமை 10 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தன. சனிக்கிழமை வரை 17 ஆயிரம் பேரை அரசு வெற்றிகரமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இப்போது சிலர் ஒரு கதாநாயகனாக மாற விரும்பி, பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இருந்து தனியாளாக 15 ஆயிரம் பேரை மீட்டதாகக் கூறிக் கொண்டால் அது சந்தர்ப்பவாதச் செயலாகும். மேலும், ஒரு துயரச் சம்பவத்தையும் அரசியலாக்கும் முயற்சிதான் இது. இத்தகு அரசியலின் பின்னணியில் இருக்கும் மனப்போக்கு குறித்து நாடு சிந்திக்க வேண்டும்"

ஆம். நிச்சயம் சிந்திக்கப்பட வேண்டும். உத்தரகண்டில் சடலங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும், அவற்றின் மீது அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகின்றதா? 

அதளபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் கட்சிக்கு முட்டுக்கொடுக்க விரும்புபவர்கள் வேறு எதையாவது கொண்டு தங்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திக்கொள்ளட்டும், பிணங்களின் மீது அரசியல் நடத்தியல்ல...

சுட்டிகள்: தினமணி, IBNLIVE
கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத்