Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 29 December 2014

அமீர்கானின் பிகே - சொல்லும் செய்தியும், சர்ச்சைகளும்...


வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே (அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, 'கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை' என்கின்றனர் எல்லோரும். 

ஒரு கடைக்கு செல்கிறார். 

'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' 

கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே. 

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். 

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 

'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்' - இது நாயகி

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் சிறுவனொருவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார். 

அங்குதான் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை, அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது, தவறாக கதாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை பிகே வெளிப்படுத்தி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?' என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது, தாலிபானிய மனப்போக்கு கொண்டவர்களை பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. 

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைக்க இடையில் இந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' - சரியான கேள்வி தான். 

இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், மக்கள் பார்க்க கூடாதென்றும் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துவது கவலைக்குரியது. இன்று நாட்டின் சில இடங்களில் திரையரங்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. சமயங்களில் சொல்லப்படாத பழக்கங்களை விட்டொழிப்பது தான் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதற்கு எந்த மதமும்/மார்க்கமும் விதிவிலக்கல்ல. 

Wednesday 24 December 2014

ஜார்கண்ட் & ஜம்மு காஷ்மீர் - சறுக்கிய பாஜக


று மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சுமார் 10% வாக்குகளை ஜார்கண்டில் இம்முறை பாஜக இழந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 70 தொகுதிகளில் (வாக்கு சதவித ஒப்பீடு) வென்ற பாஜகவிற்கு இம்முறை தனித்து ஆட்சியமைக்கும் அளவு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 

அது போல, நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீரில் 8% வாக்குகளை பாஜக இழந்துள்ளது. மேலும் காஷ்மீரில் போட்டியிட்ட 34 பாஜக வேட்பாளர்களில் 33 பேர் டெபாசிட் இழந்தனர். ஒருவர் கூட பாஜக சார்பாக காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்க படவில்லை. 

சறுக்கல்களுக்கு எல்லாம் கிரீடமாக mission 44  என்று அதிகப்படியான பிரச்சாரங்களை மேற்கொண்ட மோடிக்கு அவ்இலக்கின் பக்கத்தில் வரும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. வெள்ள நிவாரணம், இராணுவ வீரர்கள் சந்திப்பு, தேர்தல் பிரச்சாரம் என்று எதுவும் மோடிக்கு பயனளிக்கவில்லை. 

இந்த இரு மாநிலங்களில், சுமார் 30 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மோடி கலந்துக்கொண்டுள்ளார். நவம்பர் மாதம் அவர் தன் அலுவலகத்தில் (பிரதமர் அலுவலகம்) இருந்தது 1.5 நாட்கள் மட்டும் தான் என்றால் தேர்தல் பிரச்சார வீரியத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம். அப்படியும் இவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 

பாஜக பெரும் வெற்றியை பெறும் என்ற தேர்தல் கணிப்புகளும் பொய்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சில, ஜார்கண்ட்டில் 60 இடங்கள் வரை பாஜக பெறும் என்று கூறியதை இங்கு நினைவு கூறுவது ஏற்புடையதாக அமையும்.  
ஏனோ, இந்த முடிவுகளால், பாஜக மட்டுமல்ல சில ஊடகங்களும் துவண்டு தான் போயிள்ளன.  

ஆதாரம்: தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளம்: http://eciresults.nic.in/

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday 10 December 2014

உத்திரபிரதேச மத மாற்ற விவகாரம் - அம்பலமாகும் உண்மைகள்.


உத்திர பிரதேசத்தில், ஆக்ரா நகரின் புறநகர் பகுதியில், சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சங்பரிவாரங்களால் மாற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை தேசிய ஊடகங்கள் இன்று அம்பலப்படுத்தியுள்ளன. 


மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த 60 குடும்பங்களும் பங்களாதேஷ் அல்லது மேற்கு வங்கத்தில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடியேறியவர்கள். மதம் மாறியதாக சங்பரிவாரங்களால் கூறப்படும் இவர்களில் பெரும்பாலானோர் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள். 

கடந்த 17 வருடங்களாக இப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகள் என்று எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தியே சங்பரிவாரங்களால் அந்நிகழ்ச்சிக்கு தாங்கள் சிக்கவைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

முனிரா என்பவர் கூறும் போது, இந்த வைபவத்தில் கலந்துக்கொண்டால் நிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சங்பரிவாரங்களால் தாங்கள் ஆசைக்காட்டப்பட்டதாகவும் (இதனை பஜ்ரங்தல்லின் விழா ஏற்பாடடாளர் சவுஹான் உறுதிப்படுத்தியுள்ளார்), மேலும், "தீயை கொண்டு நிகழ்த்தப்படும் அந்நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து செல்லப்பட்டு, உட்கார வைக்கப்பட்டோம். அச்சத்தில் இருந்த நாங்கள் ஹிந்து கடவுள்களை வழிபட கூறப்பட்டோம். அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் மறுபடியும் குர்ஆனை தான் ஒதுகின்றோம். என் குடும்ப உறுப்பினர்கள் இன்று தொழுகையையும் நிறைவேற்றினார்கள்" என்று கூறுகின்றார்.

"இது மதமாற்ற நிகழ்வு என்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் முஸ்லிம்கள், இனியும் அப்படியே தொடர்வோம்" என்கின்றார் அவர்களில் ஒருவரான நூர் முஹம்மத். இதே போன்ற தகவலையே தெரிவிக்கின்றார் மற்றொருவரான இஸ்மாயில்,"நாங்கள் இஸ்லாமியர்கள். ஹிந்து மதத்திற்கு நாங்கள் மாறவே இல்லை". 

கடுமையான சூழ்நிலையில் வாழும் தங்களை நாற்பது-ஐம்பது பேர் சூழ்ந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு மிரட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வினவுகின்றனர் இம்மக்கள். 

தாங்கள் மதம் மாறவில்லை என்று இவர்கள் அறிவித்திருப்பது சங்பரிவாரங்களை கொதிப்படைய செய்துள்ளது. வெளி உலகின் அழுத்தத்தாலேயே இவர்கள் மறுபடியும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு திரும்பி விட்டதாக அவர்கள் புகார் செய்கின்றனர். 

அவரவர் விரும்பும் சமயத்தை பின்பற்ற/மாற அனைவரும் உரிமையுண்டு. ஆனால் கட்டாயப்படுத்தி/ஆசைக் காட்டி மதமாற்றுகின்றார்கள் என்று கிருத்துவ மிஷனரிகள் மீது குறை கூறும் சங்பரிவாரங்கள் அதே செயலை தாங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று கூற வேண்டும்.

அதே சமயம், இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. பகுஜன் சமாஜ் முன்மொழிந்த இப்பிரச்சனையை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தனர். இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மாநில விவகாரம் என்பதால் இதில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மோடி பதவியேற்றதில் இருந்து இன/மொழி/மதரீதியான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தி ஹிந்துவில் இதுக்குறித்த செய்திக்கு பின்னூட்டமிட்டவர்கள் கூறியுள்ளனர். அது தான் நிதர்சனமான உண்மையும் கூட...

நன்றி: 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday 2 December 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?


மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.


உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை. 

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், 

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?" 

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம். ஆதாரம் இங்கே 

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: படங்கள் பெறப்பட்ட இணைய தளங்கள்.