Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday 11 June 2015

பிரதமர் காப்பீட்டு திட்டம் - அப்படின்னா என்ன? என்ன பயன்?


இரு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று உயிருக்கானது, மற்றொன்று விபத்திற்கானது. இதுக் குறித்த விழிப்புணர்வின் அவசியம் கருதி, இத்திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே தருகின்றேன். 

1. உயிர் காப்பீட்டு திட்டம்: 

 'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் நோக்கம், 55 வயதிற்குள்ளாக ஒருவர் இறந்து விட்டால் (எப்படியான மரணமாகவும் இருக்கலாம்), ரூபாய் இரண்டு லட்சம் அவர் நியமிக்கும் வாரிசுதாரருக்கு அளிக்கப்படும். 

இதற்காக, இந்த திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்தவரின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து, ஒவ்வொரு வருடமும், மே மாதம் இறுதி வாரத்தில், ரூ.330 தானியங்கி முறையில் (Auto Debit) எடுத்துக்கொள்ளப்படும்.  

இந்த 330 ரூபாயானது முதல் மூன்று வருடத்திற்கு மட்டுமே. பின்னர், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நான்காம் வருடத்தில் இருந்து இந்த தொகை அதிகரிக்கப்படலாம்.

யார் சேரலாம்? எப்பொழுது சேர வேண்டும்?

18 முதல் 50 வயதுடைய எவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஐம்பது வயது வரை தான் சேரலாம் என்றாலும், ஐம்பது வயதுக்குள் சேர்ந்தவர் 55 வயது வரை தொகையை கட்டி இத்திட்டத்தில் நீடித்திருக்கலாம்.

ஜூன் ஒன்றாம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி சேருவது?

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், இதற்கான பாரம் தருவார்கள். அதனை பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் போதுமானது. பாரத ஸ்டேட் வங்கி இதற்கென அளித்த பாரத்தில் பின்வரும் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. உங்கள் பெயர், வங்கி கணக்கு எண், முகவரி, உங்கள் ஆதார் எண், நீங்கள் வாரிசுதாரராக (Nominee) நியமிக்கவுள்ளவரின் பெயர், அவரின் முகவரி, அவரின் பிறந்தி தேதி/மாதம்/வருடம் (Date of birth), ஒருவேளை நீங்கள் நியமிக்கும் வாரிசுதாரர் மைனராக இருந்தால் காப்பாளரின் (Guardian) பெயர், முகவரி மற்றும் அவரின் பிறந்த தேதி விபரங்கள். 

கடைசியாக, உங்கள் கணக்கில் இருந்து ரூ.330 எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் அளிக்கும் அனுமதி (அதாவது உங்களின் கையெழுத்து). 

ஒருவர் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில், ஒரு கணக்கில் மட்டுமே சேர அனுமதி உண்டு. உங்கள் ஆதார் எண் மூலம் இது கண்டுபிடிக்கப்படும். 

எப்படி பயன்பெறுவது? 

உங்களின் 55 வயது வரை மட்டுமே இது செல்லுபடியாகும். அதாவது இந்த வருடத்திற்குள்ளாக மரணம் ஏற்பட்டால் உங்களின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும். 

உதாரணமாக, சங்கர் என்ற ஒருவர் 30 வயதில் இத்திட்டத்தில் சேருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். 25 வருடமாக அவர் பணம் செலுத்தி வருகின்றார். 60 வயதில் அவருக்கு மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட மாட்டாது. அது போக, அவர் இத்தனை வருடங்களாக செலுத்திய தொகையும் திரும்ப தரப் படாது. 

2. விபத்து காப்பீட்டு திட்டம்: 

'பிரதான மந்திரி சுரக்ஷா யோஜனா' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம், விபத்துகளில் உங்களுக்கு இழப்பு (கவனிக்க: இழப்பு ஏற்பட்டால் மட்டுமே) ஏற்பட்டால் ரூ.2 லட்சத்தை காப்பீடாக அளிப்பது. 

18-70 வயதிற்குள்ளான எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதற்காக வருடம் ரூபாய் பனிரெண்டு உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். 

எப்படி/எப்பொழுது சேருவது என்பதான தகவல்கள் மேலே உயிர் காப்பீட்டு திட்டத்திற்கு உள்ளது போன்றதே. 

எப்படி பயன்பெறுவது?

உங்களுக்கு உயிர் அல்லது உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இத்தொகையை நீங்கள் பெற முடியும். 

அதாவது, விபத்தினால்,  
  • உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சம். 
  • இரு கால்கள் அல்லது இரு கைகள் அல்லது இரு கண்கள் அல்லது ஒரு கை & ஒரு கண் அல்லது ஒரு கால் & ஒரு கண் போன்றவை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.2 லட்சம். 
  • ஒரு கால் அல்லது ஒரு கண் அல்லது ஒரு கை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.1 லட்சம். 

இதனை தாண்டிய மற்றவற்றிற்கு நீங்கள் காப்பீட்டு தொகையை கோர முடியாது. உதாரணத்திற்கு, அப்துல்லாஹ் என்ற ஒருவர் விபத்தில் சிக்கி கால் முறிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். கால் முறிவிற்கான சிகிச்சைக்கு எல்லாம் அவர் இத்தொகையை கோர முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் ஒன்று நடந்தால் மட்டுமே கோர முடியும். 

இந்த பனிரெண்டு ரூபாய் ப்ரீமியம் தொகையும் மூன்று வருடத்திற்கு பின்கு ஆய்வுக்குரியது. 

3. இரண்டு திட்டங்களிலும் சேரலாமா?

தாராளமாக சேரலாம். நான் பார்த்தவரையில், பாரத ஸ்டேட் வங்கியில் இந்த இரண்டு திட்டத்திற்கும் சேர்த்து ஒரே பாரம் தான் தருகின்றார்கள். நீங்கள் உயிர் காப்பிட்டு திட்டத்தில் சேர விரும்பினால், விபத்து காப்பீட்டு திட்டத்தையும் அதனுடன் இணைத்துக்கொள்வோம் என்று கூறுகின்றனர். 

மேலும், நீங்கள் இரண்டு திட்டங்களிலும் இணைந்திருந்தால், (55 வயதிற்குள்ளாக) விபத்து என்னும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேர்ந்தால் (இரண்டு திட்டதிற்குமான காப்பீட்டு சேர்த்து) ரூ.4 லட்சம் உங்கள் வாரிசுதாரரிடம் கொடுக்கப்படும். 

இந்த இரண்டு திட்டங்கள் தவிர்த்து பென்ஷன் தொடர்பான திட்டத்தையும் இவைகளுடன் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து சகோதரர். மு.சா.கொதமன் எழுதியுள்ள கட்டுரை உங்களுக்கு பயன்படலாம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
தகவல் சேகரிக்க உதவிய தளம்: இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம். பார்க்க இங்கே 

Monday 8 June 2015

பாண்டிச்சேரி அரசு பொது மருத்துவமனை - 'குடி'மகன்கள்


இடம்: இரத்த வங்கி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பாண்டிச்சேரி. 

"என்னமா?" - இரத்த வங்கி அதிகாரி. 

"புள்ள முடியாம கிடக்குதுங்க. ஆப்பரஷேன் பண்ணும்னு டாக்டர் சொல்றாங்க. இரத்தம் வேணுமாம். இத கொடுத்து அனுப்புனாங்க" - எந்த வகை இரத்தம், எத்தனை யூனிட் வேண்டுமென்று எழுதப்பட்டிருந்த துண்டு காகிதத்தை நீட்டுகின்றார் அந்த இளவயது பெண். 

"சரிமா.. உங்க புருஷன வர சொல்லுங்க. அவர டெஸ்ட் பண்ணி கொடுக்க செய்யலாம்"

"அவரு 'தண்ணி' சாப்பிடுரவருங்க"

"அப்ப சொந்தகாரங்களையாவது வர சொல்லுங்க"

"இல்லங்க அவங்களும் அப்படித்தான்" 

"என்னமா இப்படி சொல்றீங்க. போய் யாரைவது கூட்டிட்டு வாங்க" 

"எனக்கு வேற யாரையும் தெரியாதுங்க. என் புள்ளைய காப்பாத்துங்க" - அழத் தொடங்குகின்றார். 

இது பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை என்றில்லை, நகரத்தின் மற்றுமொரு பிரதான மருத்துவமையமான ஜிப்மரிலும் இக்காட்சிகளை தொடர்ச்சியாக காண முடியும். 

இதனை விடுங்கள். பின்வரும் சம்பவத்தை நீங்கள் எப்படி ஜீரணிப்பீர்கள்? 

அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். அரிதான நெகடிவ் வகை இரத்தம் தேவை. பக்கத்திலேயே அந்த வகை இரத்தம் கொண்ட உறவினர் இருக்கின்றார். ஆனால், மதுவருந்தி சில மணி நேரங்கள் தான் ஆகியுள்ளதால் அவர் இரத்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர். எப்படி ஜீரணிப்பீர்கள் இச்சம்பவத்தை?? 

வேறதையும் விடுங்கள். தன் சொந்த பிள்ளைக்கு, பெற்றோருக்கு, சகோதர சகோதரிக்கு கூட பயன்படவில்லை என்றால் உயிர் இருந்தும் அந்த உடல் சவம் தானே? 

இரத்தம் தேவை என்று வரும் தகவலை பார்வர்ட் செய்யும் போது, தான் அந்த பகுதியில் இருந்தும், மதுவருந்தியதால் தன்னால் கொடுக்க முடியவில்லையே என்று மனசாட்சி அழுத்துமே, அதற்கு என்ன பதில் இருக்கும்? இரத்தம் எடுக்கும் போது ஏற்படும் அந்த சின்னஞ்சிறு வலியை நாம் அனுபவிக்கவில்லை என்று மனதை ஆறுதல் தான் படுத்திக்கொள்ள முடியுமா!!!

குடி குடியை கெடுக்கும். குடி குடியை அழிக்கும்..