Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Thursday, 1 December 2016

வசமாக சிக்கிக் கொள்ளப்போகும் மோடி அரசு...

ந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்று போட்டுடைத்துள்ளது. நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின்படி, 500 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி. அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பணமும் வந்துவிட்டால் கறுப்பு பணம் எங்கே போனது? இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகமும், இது தொடர்பில், பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருப்பதாகவே கூறுகின்றது.

செல்லா நோட்டு விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஒருமுறை கூறிய கருத்து இங்கே கவனிக்கத்தக்கது. "செல்லா நோட்டு திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லா பணமும் திரும்ப வந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வங்கிகளுக்கு கொண்டுவர பல வழிகள் இருப்பதால், இத்திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் கூறியப்படியே இன்று நடக்கிறது.

3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள். நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான். என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ

Tuesday, 27 January 2015

மோடியின் பேஷன் களேபரம் - இத மறந்திராதிங்க


"Ridiculous" - தான் அணிந்திருந்த சூட் முழுக்க தன் பெயரை பதிந்து பவனி வந்த மோடியின் செயலை இப்படியாக வர்ணிக்கின்றது வாஷிங்டன் போஸ்ட். வால்ஸ்ட்ரீட் ஜர்னலோ மேலும் பல படிகள் உயர்ந்து மோடியின் செயலை கடுமையாக பகடி செய்கின்றது. 


மோடியின் இந்த செயல் புதிதும் அல்ல, எகிப்து சர்வாதிகாரி முபாரக் இப்படியான ஆடையை அணிந்துள்ளார். 


ஒரு பிரதமரின் இத்தகைய செயல் இந்தியர்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஒரு முக்கிய விவகாரத்தை நாம் மறந்திரக்கூடாது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அணு ஆயுத ஒப்பந்தத்தை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாம் கொண்டு வந்து களேபரம் செய்த பாஜக, இன்று ஒபாமாவின் வருகையின் போது அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்றுக்கொண்டிருக்கின்றது. மோடியின் பேஷன் செயல்களில் இந்த முக்கிய விவகாரத்தை (மற்றுமொரு U-Turn) நாம் மறந்துவிடக்கூடாது.

மோடியின் அந்த சூட் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது யாருடைய பணம்? நம் வரிப்பணமா? அல்லது யாராவது உதவி செய்தார்களா? மோடி ஆட்சியில், அவர் கூறிய 'நல்ல நேரம்' என்பது பணக்காரர்களுக்கும், அவருடைய ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் மட்டும் தான் போல.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒபாமாவை கவர மோடி/பாஜக அரசாங்கம் இதுவரை இல்லாத அளவு முயற்சிகளை செய்து கொண்டிருக்க, அவரோ சில வார்த்தைகளை உதிர்த்து (மோடியை) அதிர்ச்சியடைய செய்துவிட்டார். 

ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புவாத அசாதாரண நிலையை சுட்டிக்காட்டியது. 

இரண்டு, சமீபத்திய ஆண்டுகளாக, இந்தியாவில் ஏழைகளின் நிலை ஏற்றம் பெற்று வருவதாக கூறியது. அப்படியானால் அப்போது யார் ஆட்சி?

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ 
படங்கள்: இந்தியா டுடே மற்றும் சமூக வலைத்தளங்கள் 


Tuesday, 2 December 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?


மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.


உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை. 

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், 

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?" 

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம். ஆதாரம் இங்கே 

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: படங்கள் பெறப்பட்ட இணைய தளங்கள். 

Thursday, 10 April 2014

புதிய சர்ச்சை: நான் திருமணமானவன் - ஒப்புக்கொண்ட மோடி..


தேர்தல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு நிகழ்வாக, தான் மணமானவன் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மோடி. 

இதுநாள்வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று (பொய்) கூறி வந்த அவர், நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில், ஜஷோதாபென் தன் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001, 2002, 2007, 2012 தேர்தல்களில் இந்த கேள்வியை வெறுமனே விட்டு வந்த மோடி, தேர்தல் துறையின் நடவடிக்கையால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போது உண்மை வெளிவந்துள்ளதற்கான காரணம். 

நேற்று காலையே வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துவிட்ட நிலையில், குஜராத் தேர்தல் துறையின் தளங்களில் இன்று அதிகாலை மட்டுமே இந்த படிமங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மர்மமாக உள்ளது. இன்று, 14 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பது இது தொடர்பில் குறிப்பிடத்தக்கது. 

Feb 17-ல், தான் ஒரு பிரம்மச்சாரி என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு மோடி அளித்த பேட்டி

மோடி ஆதரவாளர்கள் முதற்கொண்டு பலரும் இதுக்குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் தருணத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?

* ஒரு மனைவிக்கான இன்ப துன்பங்களை இழந்த ஜஷோதாபென் செய்த தவறு தான் என்ன?

* ஒரு பெண்ணிற்கான மரியாதை உங்கள் அகராதியில் இதுதானா?

* தனக்கு இருப்பது இந்த வேலை மட்டுமே, மோடி குறித்து எதையேனும் கூறி தன் வேலையை இழக்க விரும்பவில்லை என்று ஜஷோதாபென் கூறினாரே அதற்கு அர்த்தம் தான் என்ன?

* தன் மனைவியை தனிமையில் வாடச்செய்வதையும் பொருட்படுத்தாமல் செயல்படும் உங்கள் கொள்கை என்ன?

* பொய் பொய் இதுதான் மோடி என்பதற்கான மறு பெயரா?


ஆதார சுட்டிகள்: 




Tuesday, 18 March 2014

மோடி - விக்கிலீக்ஸ் விவகாரம்: பூகம்பமாய் வெடிக்கின்றது...



விக்கிலீக்ஸ் பெயரை பயன்படுத்தி பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொண்ட விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கின்றது. 

"ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் மோடி என்பது அமெரிக்காவுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர்" - இப்படியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பரப்புரை செய்து வந்தனர். (அந்த படம் கீழே)


"ஊழலுக்கு இடங்கொடுக்காதவர் மோடி என்று விக்கிலீக்ஸ்சே சொல்லிவிட்டது" என்பதான பரப்புரைகளை தொடர்ந்து பாஜகவினர் கையாண்டு வந்ததால், இதுக்குறித்த விளக்கத்தை காட்டமான முறையில் ட்விட்டரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

"நரேந்திர மோடியின் பாஜக கட்சி, இம்மாதிரி போலியான விளம்பரங்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அசாஞ்சே அப்படியான எதையும் கூறவில்லை" என்பது தான் அந்த ட்வீட். (படம் கீழே)


விக்கிலீக்ஸ்சின் இந்த அதிரடி தாக்குதல் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் போலி என்று தான் முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். காங்கிரசோ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, "போலியான விளம்பரங்களை நாங்கள் என்றுமே விரும்பியதில்லை, எங்களின் பணியே பேசும்" என்று கூறி அவர்களின் சாதகனைகளாக நினைப்பவற்றை பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ்சை தேற்றிக்கொண்டுவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க, பாஜக இப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றும், விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்றும் லைன் கட்டி கூறிக்கொண்டுள்ளனர் பாஜக தலைவர்கள். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை கூறுவீர்கள் பாஜக தலைவர்களே? புலியைக் கூட மறைத்து வைக்க முடியும், புகையை முடியுமா? 

பாஜக தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி காந்தி தங்களின் பெயரை பயன்படுத்தி மோடிக்கு விளம்பரம் தேடியதை ட்விட்டரும் களவுமாக அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். 


இதுமாட்டுல்ல, தன்னைப் பற்றி ஊழலுக்கு இடங்கொடுக்காதவர்(??) என்று விக்கிலீக்ஸ் கூறியதாக செய்தி வந்த போது இதற்கென ஒரு தனிப்பதிவே மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. அதில், இதுக்குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி (பார்க்க ஆதாரம்



விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தேவையில்லை என்றால் எதற்காக தனி போஸ்ட் & விளம்பரம்? 

பித்தலாட்டங்கள் பல வகை, அதில் பாஜகவினர் செய்வது ஒரு வகை. ஆனால் என்ன, ஒவ்வொருமுறையும் அந்த முகமூடி கிழித்து தொங்கவிடப்படுகின்றது என்பது தான் அவர்களுக்கான பிரச்சனை. 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: DNA India

Wednesday, 26 February 2014

முஸ்லிம்களே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் - பாஜக தொபுக்கடீர்..


"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:

'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.

ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"

நன்றி: தி ஹிந்து. 

தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக. 

ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா? 

வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?

அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? 

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். 

உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"


Tuesday, 4 February 2014

மோடி - ஹிட்லர்: ஓர் உணர்வுப்பூர்வ ஒப்பீடு..


       டால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  


யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.

ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின் மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.


நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.

அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.

அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடி மீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’

நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவை விட்டுவிட்டு வளர்ச்சியை மட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும் கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?

இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. 

மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும்.

2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி: மருதன், தமிழ் பேப்பர்

Friday, 27 September 2013

குஜராத் வளர்ச்சியா? - தோலுரிக்கும் ரிசர்வ் வங்கி தலைவர்


(நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை. இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என் குழந்தை தமிழ் ஆழியை மீண்டும் நடக்கவைப்பதற்கான முயற்சியில் இருப்பதாலும் உடல் நலிவு காரணமாகவும் ஒதுங்கியிருந்தேன். என்ன ஆயிற்று என்று அன்போடும் அக்கறையோடும் விசாரித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.)

இந்தியாவை இருமுனைப்படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத்தொங்கவைத்துக்கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும் மிகவும் முக்கியமானதாகப்படவே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இதற்கு முன்பாக தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசுக்கு பணிபுரிந்துவந்தார். மே மாதம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தார். இந்திய மாநிலங்களின் பின்தங்கிய நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து பின்தங்கியநிலை சுட்டி (backwardness index) ஒன்றை உருவாக்குவதே ராஜன் தலைமையிலான குழுவின் இலக்கு. பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்பதால் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று அதன் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து கோரிவந்த நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தனிப்பட்ட முறையில் நிதியை அளிக்க இந்தக் குழு பரிந்துரைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சித்தேவை மற்றும் அந்த மாநில நிர்வாகத்தின் வளர்ச்சிப்பணி நிறைவேற்றத்திறன் ஆகிய இரண்டையும் ஒருசேர கணக்கில் எடு்த்துக்கொண்டே நிதியை ஒதுக்கவேண்டும் என்று சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ராஜன் குழு உருவாக்கியுள்ள பின்தங்கியநிலை சுட்டியின்படி, 

இந்தியாவின் மிகக்குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Least Developed States): ஓரியா (0.798), பிஹார்(0.765), மத்தியப் பிரதேசம் (0.759), சத்தீஸ்கர்(0.752), ஜார்கண்ட்(0.746), அருணாச்சல பிரதேசம்(0.729), அசாம்(0.707), மேகாலயா(0.693), உத்தரப் பிரதேசம்(0.693), ராஜஸ்தான்(0.626).

குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Less Developed States): மணிப்பூர் (0.571), மேற்கு வங்கம்(0.551), நாகாலாந்து(0.546), ஆந்திரப் பிரதேசம்(0.521). ஜம்மு காஷ்மீர்(0.504), மிஸோரம் (0.495), குஜராத்(0.491), சி்க்கிம் (0.430), இமாச்சல பிரதேசம்(0.404).

ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Relatively Developed States): ஹரியானா (0.395), உத்தராகண்ட் (0.383), மகாராஷ்ட்டிரா (0.352), பஞ்சாப் (0.341), தமிழ்நாடு (0.095), கேரளா (0.095), கோவா (0.045).

எந்தெந்தக் காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்தடையப்பட்டன? தேசிய தனிநபர் வருமானத்தில் ஒரு மாநிலத்தின் நடப்பு நிலையும் அதன் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளையும் கொண்டு இந்த அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுடன் மாநிலத்தின் புவி ஆதார நிலைகள், மக்கள்தொகை அடர்த்தி, சர்வதேச எல்லையை ஒட்டி அது அமைந்திருக்கிறதா, இருந்தால் எவ்வளவு நீளம் என்பதெல்லாம்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த பின்தங்கிய நிலைமைச் சுட்டியின் விவரங்களுக்குள் புதைந்திருக்கும், தற்போது விவாதிக்கப்படவேண்டிய, ஒரு முக்கிய அரசியலை நாம் இப்போது காண்போம்.

குஜராத் முன்மாதிரி என்ற பெயரில் நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள் ஒரு பெரிய மாயையை நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஆனாலும் இந்தச் சுட்டி குஜராத்தை ஒரு குறைவான வளர்ச்சிகண்ட மாநிலமாகவே காட்டுகிறது. இது காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என்றுகூறுவதற்கில்லை. ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் என சுட்டி கூறும் மகாராஷ்ட்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப் ஆகியவை மாறி மாறி காங்கிரஸிடமோ அல்லது பாஜக கூட்டணிக்கட்சியினரிடமோ இருந்தவைதான். தொடர்ந்து காங்கிரஸிடமிருக்கும் ஆந்திரப் பிரதேசமும் குஜராத் உள்ள பிரிவில்தான் இருக்கிறது.

குஜராத் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சமூகங்களின் - வைசிய சாதிகளின் - கோட்டை என்பதை நாம் அறிவோம். அதைப்போலவே மோடியின் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மிகவும் முன்னணி மாநிலமாக அது இருந்துவருகிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவுக்குள்ளேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் குஜராத்தின் இடம் பொறாமைப்படக்கூடிய ஒன்றுதான். அதில் எப்போதுமே மோடி கவனமாக இருந்துவந்திருக்கிறார். இப்படி வைசியர்களின் கோட்டையாகவும் முதலீடுகளின் காந்தமாகவும் இருக்கின்ற, இந்திய முதலாளித்துவத்தின் டார்லிங் நரேந்திரா பாயின் மாநிலம் குறைவாக வளர்ச்சிகண்ட மாநிலமாக (அதுவும் ஹரியானா, உத்தராகண்ட் ஆகியவற்றையும்விட!) இருப்பது எப்படி?

ஒரே காரணம்தான். இயற்றலும் ஈட்டலும் மட்டுமே ஒரு பொருளாதாரத்தை காத்துவிடாது. வகுத்தலும் சரியாக இருக்கவேண்டும். ஆயிரம் ஏழைகள் நடுவில் ஒரு கோடீஸ்வரன் வாழ்வதால் அந்த ஆயிரம் ஏழைகள் வளர்ந்துவிடமாட்டார்கள். குஜராத் முதலீடுகளை ஈர்த்தது, பணம்பாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அது அந்த மாநிலத்துத்தின் தனிநபர் வருமானத்தையும் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியதா? இல்லை என்றே வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (படிக்க: http://www.epw.in/system/files/pdf/2013_48/39/Have_Gujarat_and_Bihar_Outperformed_the_Rest_of_India.pdf )

ஒரு மாநிலம் பணக்காரர்களின் மாநிலமாக இருப்பதற்கும் வளர்ந்த மாநிலமாக இருப்பதற்குமான வித்தியாசத்தை அறிந்தோ அறியாமலோ மோடியின் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பணம் பாய்ந்த பிறகும் குஜராத் பின்தங்கிய நிலையைவிட்டு போதுமான அளவுக்கு வெளிவராமல் இருப்பதற்கான காரணம் அரசியல்தான். அதாவது பாஜகவின் கலாச்சார தேசியத்தின் ஒரு பிரதான பகுதியான சாதிய பொருளாதார அரசியல்தான் அதற்கு காரணம். இந்தியாவின் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பலனளித்த ஐடி துறை வளர்ச்சியைக் கண்டு, "இந்தியா ஒளிர்கிறது" என்று வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் கூச்சலிட்டதற்கும் இப்போது மோடியின் வளர்ச்சியை குஜராத்தின் வளர்ச்சியாக முன்னிறுத்தி இந்தியாவை குஜராத்தாக்குவோம் என்று இப்போது காவிப்படை கூச்சலிடுவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வாக்குகளை நோக்கி வீசப்பட்ட இந்த இரு முழக்கங்களுமே ஆதாரமற்ற பொய்க்கூச்சல் என்பதைத்தவிர வேறில்லை.

குஜராத்தை "வளர்த்ததைப் போல" இந்தியாவையும் "வளர்ப்போம்" என்று கூறுவதைக் கேட்டால், நமக்கு நடுக்கமாகத்தான் இருக்கிறது. 

மீண்டும் சுட்டியைப் பாருங்கள். ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்களில் முதல் இரு இடங்களில் கோவாவும் கேரளாவும் வருகின்றன. கோவா ஒரு குட்டி மாநிலம். சிங்கப்பூரையும் இந்தோனேஷியாவையும் ஒப்பிடமுடியாதது போல, துபாயையும் ஈரானையும் ஒப்பிடமுடியாதது போல, கோவாவை அதன் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்டிராவுடனோ பிற பெரிய மாநிலங்களினுடோ ஒப்பிடமுடியாது. அதன் தனித்துவம் கருதி கோவாவை வி்ட்டுவிடலாம். இரண்டாவது இடத்தில் உள்ள கேரளத்தின் வளர்ச்சி சுவாரஸ்யமானது. ஆனால் கேரளத்தின் வளர்ச்சிகூட அடிப்படையில் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடமுடியாத ஒன்று. ஏனென்றால் அது பிரதானமாக வெளிநாட்டு செலாவணி சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை என்ஆர்ஐகள் கேரளாவுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூரில் உற்பத்திக்கான இடமில்லை, பணம் வெளியிலிருந்து வருகிறது. முதலீடாகக்கூட அல்ல, ஈட்டப்பட்ட பணமாக. அது உள்ளூரில் சேமிப்பையும் செலவையும் அதிகரிக்கிறது. ஆனால் அடிபப்டையில் கேரளம் ஒரு பொருளாதார உற்பத்தி தலம் அல்ல. 

இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆளும் கேரளத்தில், அதன் புவியியல் மற்றும் மக்களியல் காரணிகளின் காரணமாகவும், குறிப்பாக இடதுசாரிகளின் அதீத தொழிற்சங்கவாதத்தி்ன் காரணமாகவும் தொழிற்துறை வளர்ச்சி சாத்தியமில்லாமல் போனது. ஆனால், கேரளாவிலுள்ள சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டஸீலின் எஸ். இருதய ராஜன், நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியதுபோல "உலக முதலாளியத்திடமி்ருந்துவரும் அந்நியச்செலாவணிதான் ஒட்டுமொத்த கேரள பொருளாதாரத்தையும் தாங்கிநிற்கிறது. தொழிலாளர்களின் "புலப்பெயர்ச்சி நடக்காமல் போயிருந்தால் கேரளாவில் பட்டினிச்சாவுகளே நடந்திருக்கும். கேரள முன்மாதிரி என்றால் அதை படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உலகின் எந்தப் பகுதிக்கும், ஏன் கேரளாவுக்குமேகூட இந்த முறை ஏற்றதல்ல" என்று அவர் கூறியிருந்தார். (சுட்டி: http://www.nytimes.com/2007/09/07/world/asia/07migrate.html?_r=1&pagewanted=1). என்ஆர்ஐ எகானமி, மணி ஆர்டர் எகானமி என்றெல்லாம் கூறப்படும் கேரள வளர்ச்சி மாதிரியை பொருளாதாரவாதிகள் எப்போதோ ஏறக்கட்டிவிட்டார்கள். 

ஆனால் அப்படி வந்த முதலாளித்துவப் பணத்தை சமூகத்துக்காக வகுத்தளித்தில் கேரள இடதுசாரிகளின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமுடியாது. அந்த விஷயத்தில் அவர்கள் முன்னாள் சீன அதிபர் டெங் ஷியாவ்ப்பிங்குக்கு நிகரானவர்கள்: "பூனை வெள்ளையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, எலியைப் பிடித்தால் சரி." ஆக அமெரிக்காவின் அடிப்படையாக இருக்கும் பெட்ரோலிய முதலாளித்துவத்தின்கீழ் வேகாத வெயிலில் வேலை செய்து கேரளியர் அனுப்பும் செல்வமே, நமது தோழர்களின் சாதனையாக, கேரள முன்மாதிரியாக இங்கே முன்வைக்கப்படுகிறது. உங்களில் யாருக்காவது கோபம் வந்தால், முதல் (வேளாண்மை), இரண்டாம் (தொழிலுற்பத்தி) மற்றும் மூன்றாம் (சேவை) துறைகளில் ஆகியவற்றில் கேரளாவின் உற்பத்தி என்ன, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அதன் பங்கு என்ன என யோசித்து்பபாருங்கள். உற்பத்தி சாராது, உலக நாடுகளிலிருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு ஒட்டுண்டுபோல வாழும் மாநிலமே கேரளம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதன் சமூக வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மிகச் செல்வாக்கான மாநிலமாக அது இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களை அவற்றின் "தனித்தன்மைகளைக்" கருதி விலக்கிவிட்டுப்பார்த்தால், இந்தியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட, இந்தியச் சூழ்நிலைகளுக்குட்பட்டு வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் முதலிடம் பெறுவது தமிழ்நாடுதான். பிறகு பஞ்சாப், மகாராஷ்ட்டிரா. கேரளா போலவே என்ஆர்ஐ நிதிவரத்து இரு்நதாலும், பஞ்சாப் அடிப்படையில் வேளாண்மைப் பொருளாதாரத்தால்தான் அந்த இடத்தை அடைந்தது. அதற்கு அது தந்த விலையும் அதிகம் என்பதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் அதன் வேளாண்மைப் பொருளாதாரமே உள்ளூர் அளவிலான சமூக முன்னேற்றத்தை அங்கே சாதித்தது. ஒரு பக்கம் மும்பை மறுபக்கம் விதர்ப்பா என இரு முனைகளில் தவிக்கும் மகாராஷ்ட்டிராவின் சமூக மேம்பாட்டுக்கு காரணம் வேளாண்மை, தொழி்ல்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே அங்கே முதலீடுகள் பரவியதும் அதற்கான உள்கட்டமைப்பு, சமூக முதலீடுகள் செய்யப்பட்டுவந்ததும் காரணம்.

சரி. தமிழ்நாடு எப்படி முதலிடத்தை வகிக்கிறது? மகாராஷ்ட்டிரா, குஜராத் போல பெரு வைசிய சமூகங்களின் மையமாக இல்லாத, கேரளா போல மணி ஆர்டர்களைச் சார்ந்திராத, பஞ்சாப் போல இயற்கையின் வரம் பெறாத, சுமார் நாற்பதாண்டுகாலம் எந்த அனைத்திந்திய கட்சியாலும் ஆளப்படாத, டிப்பிக்கலான இந்திய மாநிலமாக இல்லாத, இந்தி படிக்காத, பாலிவுட் படம் பார்க்காத தமிழ்நாடு எப்படி இந்த இடத்தை அடைந்தது? காரணங்கள் பலவாக இருந்தாலும் அதை மூன்றே விஷயங்களில் அடக்கலாம்:

1. மனிதவளத்தில் முதலீடு: மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் முறையே தமிழகத்தின் தனிசிறப்பு முறையாக இருந்தது. நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது அதன் மிகப்பெரிய மனித வளத்துக்காகவே. அதாவது திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய சாதனையான இடஒதுக்கீடு தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து உருவாக்கிய லட்சக்கணக்கான பட்டதாரிகளே தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் பிரதான எந்திரமாக இருக்கிறார்கள்.

2. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: சிலக் குறிப்பிட்ட இடங்களில் வளர்ச்சி பின்தங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக மாநிலம் தழுவியதாக இருந்தது. அதனால்தான் மும்பை-விதர்பா என்கிற எதிர் முரண்கள் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் படிப்பறிவு - வேலை சார்ந்த புலம்பெயர்தல் ஆகியவற்றால் நகர்மயமாதல் தவிர்க்க இயலாமல் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதலிடத்துக்கு தமிழகம் வந்தது. இது எல்லாவிதமான சமூக, பொருளாதார காரணிகளும் பரவுவதற்கு காரணமாக இருந்தது. இடப்பெயர்ச்சி என்பது ஒரு சமூக மேம்பாட்டுக்கான கருவி என்றால், இடஒதுக்கீடு அதை சாதித்துத்தந்தது. 

3. சமூக நல திட்டங்கள்: காமராசர் காலத்து மத்திய உணவில் தொடங்கி, எம்ஜிஆர் காலத்து சத்துணவில் போஷாக்கு பெற்று, பிறகு கருணாநிதி, ஜெயலலிதா இருவராலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஏகப்பட்ட சமூக நலன் மற்றும் "கைதூக்கிவிடும்" திட்டங்கள் காரணமாக, ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க, ஸ்திரமான சமூக நிலைகொண்ட மாநிலமாக தமிழகம் உருவானது. இது மக்களின் உபரியை கல்விக்காவும் தனிநபர் வளர்ச்சிக்காவும் செலவிடுவதற்கு உதவியது. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், தமிழகமெங்கும் மூன்று தலைமுறைகளாக நடந்துவடுகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற கேலிக்கூத்துகள் சில நடந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் - கொள்கை கருதியோ கொள்ளை கருதியோ - நடைமுறைப்படுத்திவந்த பல திட்டங்கள் தனிநபர் வருமானத்தின் உபரியின் அளவை அதிகரித்து அதை அபிலாஷைகளின் பக்கமாக மடைமாற்றிவிட்டது. எங்கே அடிப்படைத்தேவைகளைவிட அபிலாஷைக்கான தேவைகள் வளரத்தொடங்குகின்றனவோ அங்கே பின்தங்கிய நிலை உடைபட ஆரம்பிக்கிறது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான அஸ்திவாரம் விழுகிறது. (நாம் இப்போது இந்தக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இது ஒரு இடைமாறுதல் கட்டும்)

இந்த மூன்றுமே பல்வேறு ஓட்டை உடைசல்களைக் கொண்ட, விமர்சனத்துக்கு தப்பாத. பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்ட (சமூக அல்லது புவியியல் ரீதியில்) அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானதாகும். இடைநிலைச்சாதிகள் முன்னேறிவிட்டன, ஆனால் தலித்துகள் முன்னேறவில்லை என்று ஒரு முழக்கம் ஏற்படுகிறதென்றால், நாம் பாதித்தொலைவைக் கடந்திருக்கிறோம் என்று அர்த்தம். பாதி கடந்திருக்கிறோம், பாதி கடக்கவேண்டியுள்ளது. ஆனால் நாம் பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது.

அதாவது மோடியின் குஜராத் "ஈட்டலுக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறது. கேரளா எங்கேயோ சம்பாதித்தை இங்கே "வகுத்துக்கொடுக்கிறது". ஆனால் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய எல்லாத்துறைகளுக்கும் முக்கியம்தரும் மாநிலங்களாக தமிழகமும் மகாராஷ்ட்டிரமும் பஞ்சாபும் இருக்கின்றன. இதில் இந்தியா மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகள்கூட கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் தமிழகத்தில் உண்டு. (அதைப்போல தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களும் நிறைய). கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் தனித்தன்மைகள் குறித்துபல நிபுணர்கள் (சமீபத்தில் அமர்த்தியாசென் உள்பட) கூறிவந்த கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும் பார்த்துவருகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கண்டது, ஒரு சாதனையேதான். (ஆனால் அது வேறுகட்டத்துக்கு மாறவேண்டிய காலமும் எப்போதோ வந்துவிட்டது. அதை மாற்று்மபணியில்தான் தமிழகம் இப்போது பின்தங்கியிருக்கிறது).

நேரு பாணி கலப்புப் பொருளாதாரம் அதிகாரவர்க்க நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை எதிர்ப்பார்த்தது. அது வேலைக்கு ஆகவில்லை. அதிகாரிகளின் பிள்ளைகள் ஐஐடியில் படித்து அமெரிக்க பொருளாதாரத்தை வளர்க்கச்சென்றுவிட்டார்கள். இந்துத்துவ அல்லது பிற்போக்கு பொருளாதாரவாதிகள் சாதிய பொருளாதாரத்தை கட்டிக்காப்பாற்றி இந்தியாவை சப்-சஹாரா ஆப்பிரிக்காவுக்கு கீழே கொண்டுசெல்வதில் எப்போதுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் காவி மற்றும் சிவப்பு பழமைவாதிகளின் பொருளாதாரக்கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள, நீங்கள் தந்தைப் பெரியாரின் கிராமச் சீர்திருத்தம் என்கிற சின்னஞ்சிறு நூலை படிக்கவேண்டும். 

சில நவீன இந்துத்துவவாதிகள் பில்லியன் டாலர் முதலீடுகளும் பளபளா சாலைகளும் வந்துவி்ட்டால் நாடு முன்னேறிவிடும் என்கிறார்கள். 

சமூகக் காரணிகளில் முதலீடு செய்தால் பில்லியன் டாலர் முதலீடுகளையும் ஈர்க்கலாம் சாப்ட்வேர் பார்க்ககளையும் கட்டலாம், அதே சமயம் விதர்பா, தெலுங்கானாக்களையும் தவிர்க்கலாம் என்பதற்கு தமிழகமே சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வளவோ குறைகள், குற்றங்கள், ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, இதுவே உண்மை. இன்னும் மாறவேண்டிய திசை, போகவேண்டிய தொலைவு, ஆகவேண்டிய காரியங்கள் என நிறைய இருந்தாலும், இதுவே உண்மை. எனவே இந்திய வரைபடத்தை தலைகீழாக மாற்றிவைத்துப்பாருங்கள், யார் மேலே இருக்கிறார்கள் என்பது தெரியும். 

இந்த அழகில் ஒப்பீட்டளவில் வளர்ந்த ஒரு மாநிலத்திடம் பின்தங்கிய ஒரு மாநிலத்தின்" சாதனையை" கொண்டுவந்து வைத்துக்கொண்டு அரற்றிக்கொண்டிருக்கும் மோடி ஆதரவாளர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அபாயத்தை பார்க்கையில் அந்த சிரிப்பு அடங்கி, சினம் எழுகிறது.

கடைசியில் ஒரு நிஜக்கதை: என் பள்ளிப்பருவத்தில் ஓர் ஆசிரியையிடம் நான் ட்யூஷன் போய்க்கொண்டிருந்தேன். அவர், பானுமதி டீச்சர், இன்றைய எனது வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களில் ஒருவர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், நெசவாளர் குடும்பம் ஒன்றைச்சேர்ந்த பையன் ஒருவன் ஆறாம் வகுப்பு டியூஷனுக்கு புதிதாகச் சேர்ந்திருந்தான். சில மாதங்கள் கழித்து, ஒருநாள், அந்த பையனின் அப்பா வேகவேகமாக ட்யூஷன் நடக்குமிடத்துக்கு வந்து, பானுமதி டீச்சரைப் பார்த்து சத்தம்போட ஆரம்பித்தார். ட்யூஷன் சேருவதற்கு முன்பு நல்ல மதிப்பெண் வாங்கிவந்த பையன், இப்போது குறைவாக வாங்குகிறான் என்று கத்தினார். அதிர்ந்து போன டீச்சர் அவரிடம் தீவிரமாக விசாரிக்க, அவர் தன் மகனின் புராகிரஸ் ரிப்போர்ட்டை எடுத்துக்காண்பித்தார். "முன்னாடி 45, 45 வாங்கிட்டு இருந்தான், இப்போ 15,16 வாங்கிறான்" என்று சுட்டிக்காட்டிப்பேச, ரிப்போர்ட்டைப் பார்த்த பானுமதி டீச்சருக்கு மயக்கம்வராத குறை. அந்த தகப்பனார் காட்டியது மாணவனின் ரேங்க் மதிப்பை!

Monday, 24 June 2013

உத்தரகண்ட் - மோடி - பிணங்களின் மீதும் அரசியல்


மிகப்பெரிய இயற்கை பேரிடரை இந்த தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சடலங்கள் மீது தங்கள் சந்தர்ப்பவாதத்தை நுழைக்கும் சிலரை கண்டால் 'என்ன ஜென்மமோ' என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

தேசிய சக்திகளின் அனைத்து பிரிவுகளும் உயிர் காக்கும் பணியில் இறக்கப்பட்டு, கடுமையான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டிருக்கின்றனர். மீட்கும் பணியில் தங்கள் உயிரையும் சில வீரர்கள் இழந்துள்ளனர். இதுவரை சுமார் 17,000 மக்கள் மீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. 

ஆனால், இந்த சூழ்நிலையையும் சிலர் விடுவதாக இல்லை. உத்தரகண்டில் இருந்து சுமார் 15,000 மக்களை குஜராத் முதல்வர் மோடி மீட்டதாக செய்திகளை பரப்பிவிட்டனர். உண்மை என்ன என்பதை ஆராயாமல் இதனையும் சில ஊடகங்கள் வெளியிட்டன.  

ஒவ்வொரு மாநிலமும் உத்தரகண்ட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்க தங்களால் ஆன உதவிகளை செய்துவரும் நிலையில் இதற்கும் அரசியல் சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குஜராத்தை விட பல மாநிலங்களும் அதிகமாகவே நிதி உதவிகளை உத்தரகண்டிற்கு வழங்கியுள்ளன. ஆனால் யார் அதிகமாக செய்தது என்று பேச வேண்டிய தருணமோ அல்லது அதனை வைத்து குளிர்காய வேண்டிய சூழ்நிலையோ இதுவல்ல. 

ஆயிரமாயிரம் மக்களை மோடி காப்பாற்றியதாக வெளிவரும் தகவலை "புரளி" என்று வர்ணித்துள்ள மத்திய அரசு, அசாதரணமான இந்த சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளது. 

மிக காட்டமான அறிக்கை ஒன்றை இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, இவ்வாறான கருத்துக்களை விமர்சிக்க தனக்கு வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது 

"உத்தரகண்ட் மாநிலத்தில், தேசிய சக்திகளின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்து சனிக்கிழமை 10 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தன. சனிக்கிழமை வரை 17 ஆயிரம் பேரை அரசு வெற்றிகரமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இப்போது சிலர் ஒரு கதாநாயகனாக மாற விரும்பி, பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இருந்து தனியாளாக 15 ஆயிரம் பேரை மீட்டதாகக் கூறிக் கொண்டால் அது சந்தர்ப்பவாதச் செயலாகும். மேலும், ஒரு துயரச் சம்பவத்தையும் அரசியலாக்கும் முயற்சிதான் இது. இத்தகு அரசியலின் பின்னணியில் இருக்கும் மனப்போக்கு குறித்து நாடு சிந்திக்க வேண்டும்"

ஆம். நிச்சயம் சிந்திக்கப்பட வேண்டும். உத்தரகண்டில் சடலங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும், அவற்றின் மீது அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகின்றதா? 

அதளபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் கட்சிக்கு முட்டுக்கொடுக்க விரும்புபவர்கள் வேறு எதையாவது கொண்டு தங்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திக்கொள்ளட்டும், பிணங்களின் மீது அரசியல் நடத்தியல்ல...

சுட்டிகள்: தினமணி, IBNLIVE
கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத்