Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 1 December 2016

வசமாக சிக்கிக் கொள்ளப்போகும் மோடி அரசு...

ந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்று போட்டுடைத்துள்ளது. நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின்படி, 500 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி. அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பணமும் வந்துவிட்டால் கறுப்பு பணம் எங்கே போனது? இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகமும், இது தொடர்பில், பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருப்பதாகவே கூறுகின்றது.

செல்லா நோட்டு விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஒருமுறை கூறிய கருத்து இங்கே கவனிக்கத்தக்கது. "செல்லா நோட்டு திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லா பணமும் திரும்ப வந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வங்கிகளுக்கு கொண்டுவர பல வழிகள் இருப்பதால், இத்திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் கூறியப்படியே இன்று நடக்கிறது.

3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள். நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான். என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ

Tuesday, 8 September 2015

சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள அரபு நாடுகளின் பட்டியல்...


டந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

அகதி முகாம்களில் ஒன்று 

துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல மசூதிகள்/பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  

இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான். எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 


130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காஸா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. 

அல்ஜீரியா, சுமார் 55,000 அகதிகளுக்கு புகலிடம் தந்துள்ளது. "எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம். உணவு, மருந்து, வாழ்விடம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளோம். எங்களது பள்ளிகளில் சிரிய குழந்தைகள் படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம்" என்று அல்ஜீரிய செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


தங்களின் அகதிகள் கொள்கை காரணமாக, ஐக்கிய அமீரகம், சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன.  இதுவரை, சிரிய மக்களுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உதவி புரிந்துள்ள கத்தாரும் இதில் அடக்கம். இந்த நாடுகள், அறிவுக்கு அப்பாற்பட்ட தங்களின் வெளியுறவு கொள்கைகளை தளர்த்தி இம்மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். 

இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கூறிய காரணத்தை கூறி மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும், அந்த விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜெர்மனி (சுமார் 20,000). ஐரோப்பிய யூனியன் நாடுகளில், இதுவரை, 85% அகதிகளுக்கு அடைக்கலம் தந்த நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. 'இம்மாதிரியான சமயங்களில் உதவில்லை என்றால் ஒரு தோல்வியடைந்த சமூகமாகவே நாம் எதிர்காலத்தில் கருதப்படுவோம்' என்ற ஜெர்மனி அதிபரின் கருத்து கவனிக்கத்தக்கது. 

சிரிய விவகாரம் மிக நுட்பமாக அணுகப்பட வேண்டியது. இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல இது. ஐரோப்பிய நாடுகள் இதுநாள்வரை நிராகரித்து வந்த நிலையில், இலட்சகணக்கான சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தது யார் என்பதை சிந்திக்க வேண்டும். தூண்டிவிடும் அரசியலோ அல்லது இனவெறியோ பிரச்சையை அதிகப்படுத்துமே தவிர தீர்வளிக்காது. மனிதம் போற்றுவோம், மனிதர்களை காப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

மேலே காணும் தகவல்களுக்கான ஆதாரங்கள்: 
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இது தொடர்பில் நடத்திய ஆய்வு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் Syrian Refugees இணையதளம். 


Wednesday, 26 August 2015

எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்??


கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம். 


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் மூலம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்தவர்கள், இன்று, தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்கள். 

1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கட்தொகையில் பதினைந்து சதவிதம் பட்டேல் சாதியினர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக வலுவானவர்களாக கருதப்படும் பட்டேல் பிரிவினர், 1970-கள் வரை காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்கள் எண்ணங்களுக்கு காங்கிரஸ் செவி சாய்க்க மறுத்ததால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இன்று வரை அது தொடர்கின்றது. 

இதற்கான பிரதிபலன்களை நாம் கண்கூடாக பார்க்க முடியும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல் பிரிவை சார்ந்தவர்களே. 

ஆக, செல்வ செழிப்பான வாழ்வை அனுபவித்து வருவதாக கருதப்படும் இவர்கள், இட ஒதுக்கீடு கேட்பதற்கான மர்மம் என்ன? 

வெளியே ஊதி பெருக்கப்படும் 'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற திட்டங்கள் எடுபடாததே இதற்கு காரணம். உதாரணத்திற்கு, இவர்கள் கோலோச்சி உள்ள தொழில்களில் ஒன்றான வைர வியாபாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சுமார் 150 நிறுவனங்கள் வரை சமீபத்தில் மூடுவிழா கண்டுள்ளன. ஆக, தங்களின் எதிர்கால சந்ததிகள், கல்வி மற்றும் அரசு பணிகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனை முன்னோக்கியே லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்ளும் சமீப கால போராட்டங்கள், அதன் வெளிப்பாடாக கலவரங்கள். 

இவர்களை வழிநடத்துவது ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் என்பது நம்புவதற்கு கடினமானதாக இருக்கின்றது. இவரை கைது செய்த போது தான் கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 


இவர்கள் கேட்பது 27 சதவித இடஒதுக்கீடு. எந்தவொரு மாநிலத்திலும், இட ஒதுக்கீடு என்பது ஐம்பது சதவிதத்தை தாண்டி இருக்க கூடாது என்பது உச்சமன்ற தீர்ப்பு. குஜராத்தை பொருத்தமட்டில், இந்த உச்சவரம்பை ஏற்கனவே எட்டி விட்டது. ஆக, பட்டேல்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சாத்தியமாக வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏற்கனவே இருக்கும் ஏனைய சமூகத்தினருக்கான சதவிதத்தை குறைத்து அல்லது பிடுங்கி தான் இவர்களுக்கு தர முடியும். அப்படி நடந்தால் குஜராத் ஸ்தம்பிக்கும் அளவு தங்களின் எதிர்ப்பு இருக்கும் என்று OBC பிரிவில் இருக்கும் சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவிட்டனர். 


இந்த பிரச்சனையானது மற்ற சமூகத்தினரை தூண்டும் அளவு சென்றது/செல்வது தான் பரிதாபமானது. சில தினங்களுக்கு முன்பு, பட்டேல் சமூகம் நடத்திய ஒரு பேரணியில் தலித்துகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது. 

சாதிய பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இவை அனைத்தும் சுமூகமான தீர்க்கப்பட்டு குஜராத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
படங்கள்: இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி சேகரிக்க உதவியவை: NDTV, CNN IBN, TOI மற்றும் இந்தியா டுடே

Thursday, 11 June 2015

பிரதமர் காப்பீட்டு திட்டம் - அப்படின்னா என்ன? என்ன பயன்?


இரு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று உயிருக்கானது, மற்றொன்று விபத்திற்கானது. இதுக் குறித்த விழிப்புணர்வின் அவசியம் கருதி, இத்திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே தருகின்றேன். 

1. உயிர் காப்பீட்டு திட்டம்: 

 'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் நோக்கம், 55 வயதிற்குள்ளாக ஒருவர் இறந்து விட்டால் (எப்படியான மரணமாகவும் இருக்கலாம்), ரூபாய் இரண்டு லட்சம் அவர் நியமிக்கும் வாரிசுதாரருக்கு அளிக்கப்படும். 

இதற்காக, இந்த திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்தவரின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து, ஒவ்வொரு வருடமும், மே மாதம் இறுதி வாரத்தில், ரூ.330 தானியங்கி முறையில் (Auto Debit) எடுத்துக்கொள்ளப்படும்.  

இந்த 330 ரூபாயானது முதல் மூன்று வருடத்திற்கு மட்டுமே. பின்னர், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நான்காம் வருடத்தில் இருந்து இந்த தொகை அதிகரிக்கப்படலாம்.

யார் சேரலாம்? எப்பொழுது சேர வேண்டும்?

18 முதல் 50 வயதுடைய எவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஐம்பது வயது வரை தான் சேரலாம் என்றாலும், ஐம்பது வயதுக்குள் சேர்ந்தவர் 55 வயது வரை தொகையை கட்டி இத்திட்டத்தில் நீடித்திருக்கலாம்.

ஜூன் ஒன்றாம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி சேருவது?

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், இதற்கான பாரம் தருவார்கள். அதனை பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் போதுமானது. பாரத ஸ்டேட் வங்கி இதற்கென அளித்த பாரத்தில் பின்வரும் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. உங்கள் பெயர், வங்கி கணக்கு எண், முகவரி, உங்கள் ஆதார் எண், நீங்கள் வாரிசுதாரராக (Nominee) நியமிக்கவுள்ளவரின் பெயர், அவரின் முகவரி, அவரின் பிறந்தி தேதி/மாதம்/வருடம் (Date of birth), ஒருவேளை நீங்கள் நியமிக்கும் வாரிசுதாரர் மைனராக இருந்தால் காப்பாளரின் (Guardian) பெயர், முகவரி மற்றும் அவரின் பிறந்த தேதி விபரங்கள். 

கடைசியாக, உங்கள் கணக்கில் இருந்து ரூ.330 எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் அளிக்கும் அனுமதி (அதாவது உங்களின் கையெழுத்து). 

ஒருவர் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில், ஒரு கணக்கில் மட்டுமே சேர அனுமதி உண்டு. உங்கள் ஆதார் எண் மூலம் இது கண்டுபிடிக்கப்படும். 

எப்படி பயன்பெறுவது? 

உங்களின் 55 வயது வரை மட்டுமே இது செல்லுபடியாகும். அதாவது இந்த வருடத்திற்குள்ளாக மரணம் ஏற்பட்டால் உங்களின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும். 

உதாரணமாக, சங்கர் என்ற ஒருவர் 30 வயதில் இத்திட்டத்தில் சேருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். 25 வருடமாக அவர் பணம் செலுத்தி வருகின்றார். 60 வயதில் அவருக்கு மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட மாட்டாது. அது போக, அவர் இத்தனை வருடங்களாக செலுத்திய தொகையும் திரும்ப தரப் படாது. 

2. விபத்து காப்பீட்டு திட்டம்: 

'பிரதான மந்திரி சுரக்ஷா யோஜனா' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம், விபத்துகளில் உங்களுக்கு இழப்பு (கவனிக்க: இழப்பு ஏற்பட்டால் மட்டுமே) ஏற்பட்டால் ரூ.2 லட்சத்தை காப்பீடாக அளிப்பது. 

18-70 வயதிற்குள்ளான எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதற்காக வருடம் ரூபாய் பனிரெண்டு உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். 

எப்படி/எப்பொழுது சேருவது என்பதான தகவல்கள் மேலே உயிர் காப்பீட்டு திட்டத்திற்கு உள்ளது போன்றதே. 

எப்படி பயன்பெறுவது?

உங்களுக்கு உயிர் அல்லது உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இத்தொகையை நீங்கள் பெற முடியும். 

அதாவது, விபத்தினால்,  
  • உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சம். 
  • இரு கால்கள் அல்லது இரு கைகள் அல்லது இரு கண்கள் அல்லது ஒரு கை & ஒரு கண் அல்லது ஒரு கால் & ஒரு கண் போன்றவை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.2 லட்சம். 
  • ஒரு கால் அல்லது ஒரு கண் அல்லது ஒரு கை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.1 லட்சம். 

இதனை தாண்டிய மற்றவற்றிற்கு நீங்கள் காப்பீட்டு தொகையை கோர முடியாது. உதாரணத்திற்கு, அப்துல்லாஹ் என்ற ஒருவர் விபத்தில் சிக்கி கால் முறிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். கால் முறிவிற்கான சிகிச்சைக்கு எல்லாம் அவர் இத்தொகையை கோர முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் ஒன்று நடந்தால் மட்டுமே கோர முடியும். 

இந்த பனிரெண்டு ரூபாய் ப்ரீமியம் தொகையும் மூன்று வருடத்திற்கு பின்கு ஆய்வுக்குரியது. 

3. இரண்டு திட்டங்களிலும் சேரலாமா?

தாராளமாக சேரலாம். நான் பார்த்தவரையில், பாரத ஸ்டேட் வங்கியில் இந்த இரண்டு திட்டத்திற்கும் சேர்த்து ஒரே பாரம் தான் தருகின்றார்கள். நீங்கள் உயிர் காப்பிட்டு திட்டத்தில் சேர விரும்பினால், விபத்து காப்பீட்டு திட்டத்தையும் அதனுடன் இணைத்துக்கொள்வோம் என்று கூறுகின்றனர். 

மேலும், நீங்கள் இரண்டு திட்டங்களிலும் இணைந்திருந்தால், (55 வயதிற்குள்ளாக) விபத்து என்னும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேர்ந்தால் (இரண்டு திட்டதிற்குமான காப்பீட்டு சேர்த்து) ரூ.4 லட்சம் உங்கள் வாரிசுதாரரிடம் கொடுக்கப்படும். 

இந்த இரண்டு திட்டங்கள் தவிர்த்து பென்ஷன் தொடர்பான திட்டத்தையும் இவைகளுடன் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து சகோதரர். மு.சா.கொதமன் எழுதியுள்ள கட்டுரை உங்களுக்கு பயன்படலாம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
தகவல் சேகரிக்க உதவிய தளம்: இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம். பார்க்க இங்கே 

Tuesday, 27 January 2015

மோடியின் பேஷன் களேபரம் - இத மறந்திராதிங்க


"Ridiculous" - தான் அணிந்திருந்த சூட் முழுக்க தன் பெயரை பதிந்து பவனி வந்த மோடியின் செயலை இப்படியாக வர்ணிக்கின்றது வாஷிங்டன் போஸ்ட். வால்ஸ்ட்ரீட் ஜர்னலோ மேலும் பல படிகள் உயர்ந்து மோடியின் செயலை கடுமையாக பகடி செய்கின்றது. 


மோடியின் இந்த செயல் புதிதும் அல்ல, எகிப்து சர்வாதிகாரி முபாரக் இப்படியான ஆடையை அணிந்துள்ளார். 


ஒரு பிரதமரின் இத்தகைய செயல் இந்தியர்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஒரு முக்கிய விவகாரத்தை நாம் மறந்திரக்கூடாது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அணு ஆயுத ஒப்பந்தத்தை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாம் கொண்டு வந்து களேபரம் செய்த பாஜக, இன்று ஒபாமாவின் வருகையின் போது அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்றுக்கொண்டிருக்கின்றது. மோடியின் பேஷன் செயல்களில் இந்த முக்கிய விவகாரத்தை (மற்றுமொரு U-Turn) நாம் மறந்துவிடக்கூடாது.

மோடியின் அந்த சூட் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது யாருடைய பணம்? நம் வரிப்பணமா? அல்லது யாராவது உதவி செய்தார்களா? மோடி ஆட்சியில், அவர் கூறிய 'நல்ல நேரம்' என்பது பணக்காரர்களுக்கும், அவருடைய ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் மட்டும் தான் போல.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒபாமாவை கவர மோடி/பாஜக அரசாங்கம் இதுவரை இல்லாத அளவு முயற்சிகளை செய்து கொண்டிருக்க, அவரோ சில வார்த்தைகளை உதிர்த்து (மோடியை) அதிர்ச்சியடைய செய்துவிட்டார். 

ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புவாத அசாதாரண நிலையை சுட்டிக்காட்டியது. 

இரண்டு, சமீபத்திய ஆண்டுகளாக, இந்தியாவில் ஏழைகளின் நிலை ஏற்றம் பெற்று வருவதாக கூறியது. அப்படியானால் அப்போது யார் ஆட்சி?

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ 
படங்கள்: இந்தியா டுடே மற்றும் சமூக வலைத்தளங்கள் 


Wednesday, 24 December 2014

ஜார்கண்ட் & ஜம்மு காஷ்மீர் - சறுக்கிய பாஜக


று மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சுமார் 10% வாக்குகளை ஜார்கண்டில் இம்முறை பாஜக இழந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 70 தொகுதிகளில் (வாக்கு சதவித ஒப்பீடு) வென்ற பாஜகவிற்கு இம்முறை தனித்து ஆட்சியமைக்கும் அளவு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 

அது போல, நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீரில் 8% வாக்குகளை பாஜக இழந்துள்ளது. மேலும் காஷ்மீரில் போட்டியிட்ட 34 பாஜக வேட்பாளர்களில் 33 பேர் டெபாசிட் இழந்தனர். ஒருவர் கூட பாஜக சார்பாக காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்க படவில்லை. 

சறுக்கல்களுக்கு எல்லாம் கிரீடமாக mission 44  என்று அதிகப்படியான பிரச்சாரங்களை மேற்கொண்ட மோடிக்கு அவ்இலக்கின் பக்கத்தில் வரும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. வெள்ள நிவாரணம், இராணுவ வீரர்கள் சந்திப்பு, தேர்தல் பிரச்சாரம் என்று எதுவும் மோடிக்கு பயனளிக்கவில்லை. 

இந்த இரு மாநிலங்களில், சுமார் 30 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மோடி கலந்துக்கொண்டுள்ளார். நவம்பர் மாதம் அவர் தன் அலுவலகத்தில் (பிரதமர் அலுவலகம்) இருந்தது 1.5 நாட்கள் மட்டும் தான் என்றால் தேர்தல் பிரச்சார வீரியத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம். அப்படியும் இவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 

பாஜக பெரும் வெற்றியை பெறும் என்ற தேர்தல் கணிப்புகளும் பொய்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சில, ஜார்கண்ட்டில் 60 இடங்கள் வரை பாஜக பெறும் என்று கூறியதை இங்கு நினைவு கூறுவது ஏற்புடையதாக அமையும்.  
ஏனோ, இந்த முடிவுகளால், பாஜக மட்டுமல்ல சில ஊடகங்களும் துவண்டு தான் போயிள்ளன.  

ஆதாரம்: தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளம்: http://eciresults.nic.in/

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday, 2 December 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?


மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.


உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை. 

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், 

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?" 

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம். ஆதாரம் இங்கே 

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: படங்கள் பெறப்பட்ட இணைய தளங்கள். 

Thursday, 10 April 2014

புதிய சர்ச்சை: நான் திருமணமானவன் - ஒப்புக்கொண்ட மோடி..


தேர்தல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு நிகழ்வாக, தான் மணமானவன் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மோடி. 

இதுநாள்வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று (பொய்) கூறி வந்த அவர், நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில், ஜஷோதாபென் தன் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001, 2002, 2007, 2012 தேர்தல்களில் இந்த கேள்வியை வெறுமனே விட்டு வந்த மோடி, தேர்தல் துறையின் நடவடிக்கையால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போது உண்மை வெளிவந்துள்ளதற்கான காரணம். 

நேற்று காலையே வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துவிட்ட நிலையில், குஜராத் தேர்தல் துறையின் தளங்களில் இன்று அதிகாலை மட்டுமே இந்த படிமங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மர்மமாக உள்ளது. இன்று, 14 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பது இது தொடர்பில் குறிப்பிடத்தக்கது. 

Feb 17-ல், தான் ஒரு பிரம்மச்சாரி என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு மோடி அளித்த பேட்டி

மோடி ஆதரவாளர்கள் முதற்கொண்டு பலரும் இதுக்குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் தருணத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?

* ஒரு மனைவிக்கான இன்ப துன்பங்களை இழந்த ஜஷோதாபென் செய்த தவறு தான் என்ன?

* ஒரு பெண்ணிற்கான மரியாதை உங்கள் அகராதியில் இதுதானா?

* தனக்கு இருப்பது இந்த வேலை மட்டுமே, மோடி குறித்து எதையேனும் கூறி தன் வேலையை இழக்க விரும்பவில்லை என்று ஜஷோதாபென் கூறினாரே அதற்கு அர்த்தம் தான் என்ன?

* தன் மனைவியை தனிமையில் வாடச்செய்வதையும் பொருட்படுத்தாமல் செயல்படும் உங்கள் கொள்கை என்ன?

* பொய் பொய் இதுதான் மோடி என்பதற்கான மறு பெயரா?


ஆதார சுட்டிகள்: 




Saturday, 5 April 2014

மோடியை கிழித்த தி எக்கனாமிஸ்ட், கொதிக்கும் பாஜக...


லகின் பிரபல ஊடகங்களில் ஒன்றான தி எக்கனாமிஸ்ட், மோடி போன்ற ஒருவர் இந்தியாவை ஆள தகுதியில்லை என்று கூறி பாஜகவை கொதிக்க வைத்துள்ளது, கூடவே மோடி ஆதரவாளர்களையும் தான். 

இதற்கு காரணமாக குஜராத் படுகொலைகளை சுட்டிக்காட்டியுள்ள தி எக்கனாமிஸ்ட், "குஜராத் படுகொலைகளுக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, இதனாலேயே இவ்வழக்கு முடிவு பெறாமல் இருக்கின்றது. தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, குஜராத் படுகொலைக்களுக்கான விளக்கத்தை மோடி தந்திருக்க வேண்டும். மன்னிப்பும் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இதுக்குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க மறுக்கின்றார். முஸ்லிம்களின் அச்சத்தை போக்க முயற்சிக்காமல் அதனை ஊக்கப்படுத்திவதில் முனைப்பாக உள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வாக்கு வங்கியை குறிவைத்து அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்" என்று படுகாட்டமாக விமர்சிக்கின்றது.

தங்கள் பிரதம வேட்பாளரின் தகுதி ஆதிக்கமிக்க சர்வதேச ஊடகங்கள் வரை அசிங்கப்படுவதை அறிந்த பாஜக இதுக்குறித்து கொதித்துக்கொண்டிருக்கின்றது. இங்குள்ள நிலைமையை அறியாமல் எக்கனாமிஸ்ட் பேசுவதாக பதறுகின்றது பாஜக. ஒரு பிரதம வேட்பாளர் இவ்வளவு எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது நான் அறிந்து இதுவே முதல் முறை. 

"ராகுல் காந்தி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு குறைவு என்ற கருத்தோட்டத்தில் அதனையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கின்றோம்" என்றும் கூறியுள்ளது எக்கனாமிஸ்ட். 

ஏற்கனவே குஜராத் முன்னேற்றம் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எக்கானாமிஸ்ட்டின் இந்த கட்டுரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.. 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday, 2 April 2014

குஜராத் முன்னேற்றம்? - பாஜகவிற்கு மற்றுமொரு பலத்த பின்னடைவு...



ந்தியாவின் உற்பத்தி தொழிற்சாலைகள் & அவை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் (2011-2012 காலக்கட்டத்திற்கானது) வெளிவந்துள்ளன. இன்னும் பொதுவில் வெளியிடப்படாத இம்முடிவுகளை தி ஹிந்து ஆங்கில இதழ் சில மணி நேரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிமுக ஆளும் தமிழகம் முதல் இடத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா & ஆந்திரா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. பாஜக ஆளும் குஜராத்தோ நான்காம் இடத்தையே பிடித்துள்ளது. 

இதில் அதிமுகவை தவிர்த்து, காங்கிரஸ் ஆந்திராவில் கடந்த பத்து ஆண்டுகளாகவும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு சவாலாக திகழும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், குஜராத்தில் பாஜக கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும் ஆட்சியில் இருப்பது குறிப்பட்டத்தக்கது. உற்பத்தி தொழிற்சாலைகள் போல பணவீக்க கட்டுப்பாட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் பின்னடைவிலேயே இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக வந்த மற்றொரு ஆய்வு கூறியிருந்தது. 

ஆய்வு முடிவுகளை விளக்கும் படம். 

வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகளின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டிருக்கும் பாஜக, தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முகமூடி அணிந்து இம்முறை பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் தான் இந்த பிரச்சனைகள் அதிகமிருக்கின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் பிம்பம் ஏற்கனவே பலரால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முகமூடியும் அந்தோ பரிதாபம் என்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது. 

Gujarat Development Model??? 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday, 18 March 2014

மோடி - விக்கிலீக்ஸ் விவகாரம்: பூகம்பமாய் வெடிக்கின்றது...



விக்கிலீக்ஸ் பெயரை பயன்படுத்தி பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொண்ட விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கின்றது. 

"ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் மோடி என்பது அமெரிக்காவுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர்" - இப்படியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பரப்புரை செய்து வந்தனர். (அந்த படம் கீழே)


"ஊழலுக்கு இடங்கொடுக்காதவர் மோடி என்று விக்கிலீக்ஸ்சே சொல்லிவிட்டது" என்பதான பரப்புரைகளை தொடர்ந்து பாஜகவினர் கையாண்டு வந்ததால், இதுக்குறித்த விளக்கத்தை காட்டமான முறையில் ட்விட்டரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

"நரேந்திர மோடியின் பாஜக கட்சி, இம்மாதிரி போலியான விளம்பரங்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அசாஞ்சே அப்படியான எதையும் கூறவில்லை" என்பது தான் அந்த ட்வீட். (படம் கீழே)


விக்கிலீக்ஸ்சின் இந்த அதிரடி தாக்குதல் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் போலி என்று தான் முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். காங்கிரசோ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, "போலியான விளம்பரங்களை நாங்கள் என்றுமே விரும்பியதில்லை, எங்களின் பணியே பேசும்" என்று கூறி அவர்களின் சாதகனைகளாக நினைப்பவற்றை பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ்சை தேற்றிக்கொண்டுவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க, பாஜக இப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றும், விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்றும் லைன் கட்டி கூறிக்கொண்டுள்ளனர் பாஜக தலைவர்கள். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை கூறுவீர்கள் பாஜக தலைவர்களே? புலியைக் கூட மறைத்து வைக்க முடியும், புகையை முடியுமா? 

பாஜக தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி காந்தி தங்களின் பெயரை பயன்படுத்தி மோடிக்கு விளம்பரம் தேடியதை ட்விட்டரும் களவுமாக அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். 


இதுமாட்டுல்ல, தன்னைப் பற்றி ஊழலுக்கு இடங்கொடுக்காதவர்(??) என்று விக்கிலீக்ஸ் கூறியதாக செய்தி வந்த போது இதற்கென ஒரு தனிப்பதிவே மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. அதில், இதுக்குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி (பார்க்க ஆதாரம்



விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தேவையில்லை என்றால் எதற்காக தனி போஸ்ட் & விளம்பரம்? 

பித்தலாட்டங்கள் பல வகை, அதில் பாஜகவினர் செய்வது ஒரு வகை. ஆனால் என்ன, ஒவ்வொருமுறையும் அந்த முகமூடி கிழித்து தொங்கவிடப்படுகின்றது என்பது தான் அவர்களுக்கான பிரச்சனை. 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: DNA India

Thursday, 27 February 2014

தமிழர் நலம் - புதைத்து விடுவோம் - பாஜக


மிழர் நலம் குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தி ஹிந்து இதழிற்கு அளித்துள்ள பேட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு, இன உணர்வு என்று சொல்லிக்கொண்டு பாஜகவிற்கு கொடி பிடிப்பவர்களின் கூடுதல் கவனத்திற்கு இந்த பதிவு. மற்றவர்கள் இந்த நகைச்சுவையாளரின் பேட்டியை படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம். 

The Hindu: இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

Rajnath Singh: நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

(ஆஹா என்னவொரு பதில்!!! ஒரேடியாக புதைத்துவிடுவது நல்லதாம். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தமிழின உணர்வாளர்களே சொல்லுங்க எல்லாத்தையும் புதைத்துவிட்டு போய் விடுவோமா?...இன்று இதை சொன்னவர்கள், ஒரு வேலை ஆட்சிக்கு வந்து இனப்படுகொலை எல்லாம் பழைய சம்பவம், மறந்துவிடுவோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?..Note this point... தங்களின் முந்தைய அரசு என்ன முடிவு எடுத்ததென்று கட்சியின் தலைவரான இவருக்கே தெரியாதாம்...அட்ரா சக்க...அட்ரா சக்க...)

The Hindu: தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

Rajnath Singh: நோ கமென்ட்ஸ்!

(சூப்பரப்பு...நீங்க நோ கமென்ட்ஸ்னு சொல்லிருக்கலாம். ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. ராஜபக்சே மேல அவ்ளோ பாசம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்)

The Hindu: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

(இது உலக மகா நடிப்பு சார்... ஒரு நிருபர் சொல்லி தான் உங்க மாநில கிளைல என்ன நடக்குதுன்னு தெரிந்துக்கொள்கின்ற நிலையில் இருக்கீங்க...இதுல நீங்க அந்த கட்சிக்கு தலைவர் வேற...சபாஷ். சரி விடுங்க, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதுல்ல, அப்ப சீக்கிரமே முடிவு பண்ணி யார் சொல்றது சரின்னு அறிக்கை விடுங்க)

The Hindu: உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும் கூட வரவேற்கிறார்களே?

Rajnath Singh: (லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம். 

(என்னத்த பேச போறீங்க...அடங்கப்பா ஆள விடுங்க)..

இப்படி ஒரு பொருந்தா கூட்டணி உங்களுக்கு தேவையா வை.கோ மற்றும் தமிழின உணர்வாளர்களே? சொன்னது சு.சாமி போன்ற ஆட்கள் அல்ல, பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். பாஜக ஆட்சி கட்டில் ஏறினால் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது over to Rajnath Singh and BPJ's policies என்பதை தவிர வேறு எதுவும் கூற தோன்றவில்லை. 

நன்றி: தி ஹிந்து 
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday, 26 February 2014

முஸ்லிம்களே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் - பாஜக தொபுக்கடீர்..


"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:

'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.

ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"

நன்றி: தி ஹிந்து. 

தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக. 

ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா? 

வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?

அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? 

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். 

உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"


Tuesday, 4 February 2014

மோடி - ஹிட்லர்: ஓர் உணர்வுப்பூர்வ ஒப்பீடு..


       டால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  


யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.

ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின் மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.


நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.

அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.

அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடி மீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’

நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவை விட்டுவிட்டு வளர்ச்சியை மட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும் கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?

இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. 

மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும்.

2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி: மருதன், தமிழ் பேப்பர்

Friday, 27 September 2013

குஜராத் வளர்ச்சியா? - தோலுரிக்கும் ரிசர்வ் வங்கி தலைவர்


(நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை. இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என் குழந்தை தமிழ் ஆழியை மீண்டும் நடக்கவைப்பதற்கான முயற்சியில் இருப்பதாலும் உடல் நலிவு காரணமாகவும் ஒதுங்கியிருந்தேன். என்ன ஆயிற்று என்று அன்போடும் அக்கறையோடும் விசாரித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.)

இந்தியாவை இருமுனைப்படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத்தொங்கவைத்துக்கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும் மிகவும் முக்கியமானதாகப்படவே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இதற்கு முன்பாக தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசுக்கு பணிபுரிந்துவந்தார். மே மாதம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தார். இந்திய மாநிலங்களின் பின்தங்கிய நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து பின்தங்கியநிலை சுட்டி (backwardness index) ஒன்றை உருவாக்குவதே ராஜன் தலைமையிலான குழுவின் இலக்கு. பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்பதால் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று அதன் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து கோரிவந்த நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தனிப்பட்ட முறையில் நிதியை அளிக்க இந்தக் குழு பரிந்துரைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சித்தேவை மற்றும் அந்த மாநில நிர்வாகத்தின் வளர்ச்சிப்பணி நிறைவேற்றத்திறன் ஆகிய இரண்டையும் ஒருசேர கணக்கில் எடு்த்துக்கொண்டே நிதியை ஒதுக்கவேண்டும் என்று சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ராஜன் குழு உருவாக்கியுள்ள பின்தங்கியநிலை சுட்டியின்படி, 

இந்தியாவின் மிகக்குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Least Developed States): ஓரியா (0.798), பிஹார்(0.765), மத்தியப் பிரதேசம் (0.759), சத்தீஸ்கர்(0.752), ஜார்கண்ட்(0.746), அருணாச்சல பிரதேசம்(0.729), அசாம்(0.707), மேகாலயா(0.693), உத்தரப் பிரதேசம்(0.693), ராஜஸ்தான்(0.626).

குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Less Developed States): மணிப்பூர் (0.571), மேற்கு வங்கம்(0.551), நாகாலாந்து(0.546), ஆந்திரப் பிரதேசம்(0.521). ஜம்மு காஷ்மீர்(0.504), மிஸோரம் (0.495), குஜராத்(0.491), சி்க்கிம் (0.430), இமாச்சல பிரதேசம்(0.404).

ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Relatively Developed States): ஹரியானா (0.395), உத்தராகண்ட் (0.383), மகாராஷ்ட்டிரா (0.352), பஞ்சாப் (0.341), தமிழ்நாடு (0.095), கேரளா (0.095), கோவா (0.045).

எந்தெந்தக் காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்தடையப்பட்டன? தேசிய தனிநபர் வருமானத்தில் ஒரு மாநிலத்தின் நடப்பு நிலையும் அதன் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளையும் கொண்டு இந்த அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுடன் மாநிலத்தின் புவி ஆதார நிலைகள், மக்கள்தொகை அடர்த்தி, சர்வதேச எல்லையை ஒட்டி அது அமைந்திருக்கிறதா, இருந்தால் எவ்வளவு நீளம் என்பதெல்லாம்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த பின்தங்கிய நிலைமைச் சுட்டியின் விவரங்களுக்குள் புதைந்திருக்கும், தற்போது விவாதிக்கப்படவேண்டிய, ஒரு முக்கிய அரசியலை நாம் இப்போது காண்போம்.

குஜராத் முன்மாதிரி என்ற பெயரில் நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள் ஒரு பெரிய மாயையை நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஆனாலும் இந்தச் சுட்டி குஜராத்தை ஒரு குறைவான வளர்ச்சிகண்ட மாநிலமாகவே காட்டுகிறது. இது காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என்றுகூறுவதற்கில்லை. ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் என சுட்டி கூறும் மகாராஷ்ட்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப் ஆகியவை மாறி மாறி காங்கிரஸிடமோ அல்லது பாஜக கூட்டணிக்கட்சியினரிடமோ இருந்தவைதான். தொடர்ந்து காங்கிரஸிடமிருக்கும் ஆந்திரப் பிரதேசமும் குஜராத் உள்ள பிரிவில்தான் இருக்கிறது.

குஜராத் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சமூகங்களின் - வைசிய சாதிகளின் - கோட்டை என்பதை நாம் அறிவோம். அதைப்போலவே மோடியின் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மிகவும் முன்னணி மாநிலமாக அது இருந்துவருகிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவுக்குள்ளேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் குஜராத்தின் இடம் பொறாமைப்படக்கூடிய ஒன்றுதான். அதில் எப்போதுமே மோடி கவனமாக இருந்துவந்திருக்கிறார். இப்படி வைசியர்களின் கோட்டையாகவும் முதலீடுகளின் காந்தமாகவும் இருக்கின்ற, இந்திய முதலாளித்துவத்தின் டார்லிங் நரேந்திரா பாயின் மாநிலம் குறைவாக வளர்ச்சிகண்ட மாநிலமாக (அதுவும் ஹரியானா, உத்தராகண்ட் ஆகியவற்றையும்விட!) இருப்பது எப்படி?

ஒரே காரணம்தான். இயற்றலும் ஈட்டலும் மட்டுமே ஒரு பொருளாதாரத்தை காத்துவிடாது. வகுத்தலும் சரியாக இருக்கவேண்டும். ஆயிரம் ஏழைகள் நடுவில் ஒரு கோடீஸ்வரன் வாழ்வதால் அந்த ஆயிரம் ஏழைகள் வளர்ந்துவிடமாட்டார்கள். குஜராத் முதலீடுகளை ஈர்த்தது, பணம்பாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அது அந்த மாநிலத்துத்தின் தனிநபர் வருமானத்தையும் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியதா? இல்லை என்றே வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (படிக்க: http://www.epw.in/system/files/pdf/2013_48/39/Have_Gujarat_and_Bihar_Outperformed_the_Rest_of_India.pdf )

ஒரு மாநிலம் பணக்காரர்களின் மாநிலமாக இருப்பதற்கும் வளர்ந்த மாநிலமாக இருப்பதற்குமான வித்தியாசத்தை அறிந்தோ அறியாமலோ மோடியின் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பணம் பாய்ந்த பிறகும் குஜராத் பின்தங்கிய நிலையைவிட்டு போதுமான அளவுக்கு வெளிவராமல் இருப்பதற்கான காரணம் அரசியல்தான். அதாவது பாஜகவின் கலாச்சார தேசியத்தின் ஒரு பிரதான பகுதியான சாதிய பொருளாதார அரசியல்தான் அதற்கு காரணம். இந்தியாவின் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பலனளித்த ஐடி துறை வளர்ச்சியைக் கண்டு, "இந்தியா ஒளிர்கிறது" என்று வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் கூச்சலிட்டதற்கும் இப்போது மோடியின் வளர்ச்சியை குஜராத்தின் வளர்ச்சியாக முன்னிறுத்தி இந்தியாவை குஜராத்தாக்குவோம் என்று இப்போது காவிப்படை கூச்சலிடுவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வாக்குகளை நோக்கி வீசப்பட்ட இந்த இரு முழக்கங்களுமே ஆதாரமற்ற பொய்க்கூச்சல் என்பதைத்தவிர வேறில்லை.

குஜராத்தை "வளர்த்ததைப் போல" இந்தியாவையும் "வளர்ப்போம்" என்று கூறுவதைக் கேட்டால், நமக்கு நடுக்கமாகத்தான் இருக்கிறது. 

மீண்டும் சுட்டியைப் பாருங்கள். ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்களில் முதல் இரு இடங்களில் கோவாவும் கேரளாவும் வருகின்றன. கோவா ஒரு குட்டி மாநிலம். சிங்கப்பூரையும் இந்தோனேஷியாவையும் ஒப்பிடமுடியாதது போல, துபாயையும் ஈரானையும் ஒப்பிடமுடியாதது போல, கோவாவை அதன் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்டிராவுடனோ பிற பெரிய மாநிலங்களினுடோ ஒப்பிடமுடியாது. அதன் தனித்துவம் கருதி கோவாவை வி்ட்டுவிடலாம். இரண்டாவது இடத்தில் உள்ள கேரளத்தின் வளர்ச்சி சுவாரஸ்யமானது. ஆனால் கேரளத்தின் வளர்ச்சிகூட அடிப்படையில் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடமுடியாத ஒன்று. ஏனென்றால் அது பிரதானமாக வெளிநாட்டு செலாவணி சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை என்ஆர்ஐகள் கேரளாவுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூரில் உற்பத்திக்கான இடமில்லை, பணம் வெளியிலிருந்து வருகிறது. முதலீடாகக்கூட அல்ல, ஈட்டப்பட்ட பணமாக. அது உள்ளூரில் சேமிப்பையும் செலவையும் அதிகரிக்கிறது. ஆனால் அடிபப்டையில் கேரளம் ஒரு பொருளாதார உற்பத்தி தலம் அல்ல. 

இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆளும் கேரளத்தில், அதன் புவியியல் மற்றும் மக்களியல் காரணிகளின் காரணமாகவும், குறிப்பாக இடதுசாரிகளின் அதீத தொழிற்சங்கவாதத்தி்ன் காரணமாகவும் தொழிற்துறை வளர்ச்சி சாத்தியமில்லாமல் போனது. ஆனால், கேரளாவிலுள்ள சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டஸீலின் எஸ். இருதய ராஜன், நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியதுபோல "உலக முதலாளியத்திடமி்ருந்துவரும் அந்நியச்செலாவணிதான் ஒட்டுமொத்த கேரள பொருளாதாரத்தையும் தாங்கிநிற்கிறது. தொழிலாளர்களின் "புலப்பெயர்ச்சி நடக்காமல் போயிருந்தால் கேரளாவில் பட்டினிச்சாவுகளே நடந்திருக்கும். கேரள முன்மாதிரி என்றால் அதை படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உலகின் எந்தப் பகுதிக்கும், ஏன் கேரளாவுக்குமேகூட இந்த முறை ஏற்றதல்ல" என்று அவர் கூறியிருந்தார். (சுட்டி: http://www.nytimes.com/2007/09/07/world/asia/07migrate.html?_r=1&pagewanted=1). என்ஆர்ஐ எகானமி, மணி ஆர்டர் எகானமி என்றெல்லாம் கூறப்படும் கேரள வளர்ச்சி மாதிரியை பொருளாதாரவாதிகள் எப்போதோ ஏறக்கட்டிவிட்டார்கள். 

ஆனால் அப்படி வந்த முதலாளித்துவப் பணத்தை சமூகத்துக்காக வகுத்தளித்தில் கேரள இடதுசாரிகளின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமுடியாது. அந்த விஷயத்தில் அவர்கள் முன்னாள் சீன அதிபர் டெங் ஷியாவ்ப்பிங்குக்கு நிகரானவர்கள்: "பூனை வெள்ளையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, எலியைப் பிடித்தால் சரி." ஆக அமெரிக்காவின் அடிப்படையாக இருக்கும் பெட்ரோலிய முதலாளித்துவத்தின்கீழ் வேகாத வெயிலில் வேலை செய்து கேரளியர் அனுப்பும் செல்வமே, நமது தோழர்களின் சாதனையாக, கேரள முன்மாதிரியாக இங்கே முன்வைக்கப்படுகிறது. உங்களில் யாருக்காவது கோபம் வந்தால், முதல் (வேளாண்மை), இரண்டாம் (தொழிலுற்பத்தி) மற்றும் மூன்றாம் (சேவை) துறைகளில் ஆகியவற்றில் கேரளாவின் உற்பத்தி என்ன, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அதன் பங்கு என்ன என யோசித்து்பபாருங்கள். உற்பத்தி சாராது, உலக நாடுகளிலிருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு ஒட்டுண்டுபோல வாழும் மாநிலமே கேரளம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதன் சமூக வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மிகச் செல்வாக்கான மாநிலமாக அது இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களை அவற்றின் "தனித்தன்மைகளைக்" கருதி விலக்கிவிட்டுப்பார்த்தால், இந்தியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட, இந்தியச் சூழ்நிலைகளுக்குட்பட்டு வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் முதலிடம் பெறுவது தமிழ்நாடுதான். பிறகு பஞ்சாப், மகாராஷ்ட்டிரா. கேரளா போலவே என்ஆர்ஐ நிதிவரத்து இரு்நதாலும், பஞ்சாப் அடிப்படையில் வேளாண்மைப் பொருளாதாரத்தால்தான் அந்த இடத்தை அடைந்தது. அதற்கு அது தந்த விலையும் அதிகம் என்பதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் அதன் வேளாண்மைப் பொருளாதாரமே உள்ளூர் அளவிலான சமூக முன்னேற்றத்தை அங்கே சாதித்தது. ஒரு பக்கம் மும்பை மறுபக்கம் விதர்ப்பா என இரு முனைகளில் தவிக்கும் மகாராஷ்ட்டிராவின் சமூக மேம்பாட்டுக்கு காரணம் வேளாண்மை, தொழி்ல்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே அங்கே முதலீடுகள் பரவியதும் அதற்கான உள்கட்டமைப்பு, சமூக முதலீடுகள் செய்யப்பட்டுவந்ததும் காரணம்.

சரி. தமிழ்நாடு எப்படி முதலிடத்தை வகிக்கிறது? மகாராஷ்ட்டிரா, குஜராத் போல பெரு வைசிய சமூகங்களின் மையமாக இல்லாத, கேரளா போல மணி ஆர்டர்களைச் சார்ந்திராத, பஞ்சாப் போல இயற்கையின் வரம் பெறாத, சுமார் நாற்பதாண்டுகாலம் எந்த அனைத்திந்திய கட்சியாலும் ஆளப்படாத, டிப்பிக்கலான இந்திய மாநிலமாக இல்லாத, இந்தி படிக்காத, பாலிவுட் படம் பார்க்காத தமிழ்நாடு எப்படி இந்த இடத்தை அடைந்தது? காரணங்கள் பலவாக இருந்தாலும் அதை மூன்றே விஷயங்களில் அடக்கலாம்:

1. மனிதவளத்தில் முதலீடு: மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் முறையே தமிழகத்தின் தனிசிறப்பு முறையாக இருந்தது. நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது அதன் மிகப்பெரிய மனித வளத்துக்காகவே. அதாவது திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய சாதனையான இடஒதுக்கீடு தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து உருவாக்கிய லட்சக்கணக்கான பட்டதாரிகளே தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் பிரதான எந்திரமாக இருக்கிறார்கள்.

2. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: சிலக் குறிப்பிட்ட இடங்களில் வளர்ச்சி பின்தங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக மாநிலம் தழுவியதாக இருந்தது. அதனால்தான் மும்பை-விதர்பா என்கிற எதிர் முரண்கள் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் படிப்பறிவு - வேலை சார்ந்த புலம்பெயர்தல் ஆகியவற்றால் நகர்மயமாதல் தவிர்க்க இயலாமல் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதலிடத்துக்கு தமிழகம் வந்தது. இது எல்லாவிதமான சமூக, பொருளாதார காரணிகளும் பரவுவதற்கு காரணமாக இருந்தது. இடப்பெயர்ச்சி என்பது ஒரு சமூக மேம்பாட்டுக்கான கருவி என்றால், இடஒதுக்கீடு அதை சாதித்துத்தந்தது. 

3. சமூக நல திட்டங்கள்: காமராசர் காலத்து மத்திய உணவில் தொடங்கி, எம்ஜிஆர் காலத்து சத்துணவில் போஷாக்கு பெற்று, பிறகு கருணாநிதி, ஜெயலலிதா இருவராலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஏகப்பட்ட சமூக நலன் மற்றும் "கைதூக்கிவிடும்" திட்டங்கள் காரணமாக, ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க, ஸ்திரமான சமூக நிலைகொண்ட மாநிலமாக தமிழகம் உருவானது. இது மக்களின் உபரியை கல்விக்காவும் தனிநபர் வளர்ச்சிக்காவும் செலவிடுவதற்கு உதவியது. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், தமிழகமெங்கும் மூன்று தலைமுறைகளாக நடந்துவடுகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற கேலிக்கூத்துகள் சில நடந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் - கொள்கை கருதியோ கொள்ளை கருதியோ - நடைமுறைப்படுத்திவந்த பல திட்டங்கள் தனிநபர் வருமானத்தின் உபரியின் அளவை அதிகரித்து அதை அபிலாஷைகளின் பக்கமாக மடைமாற்றிவிட்டது. எங்கே அடிப்படைத்தேவைகளைவிட அபிலாஷைக்கான தேவைகள் வளரத்தொடங்குகின்றனவோ அங்கே பின்தங்கிய நிலை உடைபட ஆரம்பிக்கிறது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான அஸ்திவாரம் விழுகிறது. (நாம் இப்போது இந்தக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இது ஒரு இடைமாறுதல் கட்டும்)

இந்த மூன்றுமே பல்வேறு ஓட்டை உடைசல்களைக் கொண்ட, விமர்சனத்துக்கு தப்பாத. பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்ட (சமூக அல்லது புவியியல் ரீதியில்) அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானதாகும். இடைநிலைச்சாதிகள் முன்னேறிவிட்டன, ஆனால் தலித்துகள் முன்னேறவில்லை என்று ஒரு முழக்கம் ஏற்படுகிறதென்றால், நாம் பாதித்தொலைவைக் கடந்திருக்கிறோம் என்று அர்த்தம். பாதி கடந்திருக்கிறோம், பாதி கடக்கவேண்டியுள்ளது. ஆனால் நாம் பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது.

அதாவது மோடியின் குஜராத் "ஈட்டலுக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறது. கேரளா எங்கேயோ சம்பாதித்தை இங்கே "வகுத்துக்கொடுக்கிறது". ஆனால் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய எல்லாத்துறைகளுக்கும் முக்கியம்தரும் மாநிலங்களாக தமிழகமும் மகாராஷ்ட்டிரமும் பஞ்சாபும் இருக்கின்றன. இதில் இந்தியா மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகள்கூட கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் தமிழகத்தில் உண்டு. (அதைப்போல தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களும் நிறைய). கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் தனித்தன்மைகள் குறித்துபல நிபுணர்கள் (சமீபத்தில் அமர்த்தியாசென் உள்பட) கூறிவந்த கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும் பார்த்துவருகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கண்டது, ஒரு சாதனையேதான். (ஆனால் அது வேறுகட்டத்துக்கு மாறவேண்டிய காலமும் எப்போதோ வந்துவிட்டது. அதை மாற்று்மபணியில்தான் தமிழகம் இப்போது பின்தங்கியிருக்கிறது).

நேரு பாணி கலப்புப் பொருளாதாரம் அதிகாரவர்க்க நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை எதிர்ப்பார்த்தது. அது வேலைக்கு ஆகவில்லை. அதிகாரிகளின் பிள்ளைகள் ஐஐடியில் படித்து அமெரிக்க பொருளாதாரத்தை வளர்க்கச்சென்றுவிட்டார்கள். இந்துத்துவ அல்லது பிற்போக்கு பொருளாதாரவாதிகள் சாதிய பொருளாதாரத்தை கட்டிக்காப்பாற்றி இந்தியாவை சப்-சஹாரா ஆப்பிரிக்காவுக்கு கீழே கொண்டுசெல்வதில் எப்போதுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் காவி மற்றும் சிவப்பு பழமைவாதிகளின் பொருளாதாரக்கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள, நீங்கள் தந்தைப் பெரியாரின் கிராமச் சீர்திருத்தம் என்கிற சின்னஞ்சிறு நூலை படிக்கவேண்டும். 

சில நவீன இந்துத்துவவாதிகள் பில்லியன் டாலர் முதலீடுகளும் பளபளா சாலைகளும் வந்துவி்ட்டால் நாடு முன்னேறிவிடும் என்கிறார்கள். 

சமூகக் காரணிகளில் முதலீடு செய்தால் பில்லியன் டாலர் முதலீடுகளையும் ஈர்க்கலாம் சாப்ட்வேர் பார்க்ககளையும் கட்டலாம், அதே சமயம் விதர்பா, தெலுங்கானாக்களையும் தவிர்க்கலாம் என்பதற்கு தமிழகமே சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வளவோ குறைகள், குற்றங்கள், ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, இதுவே உண்மை. இன்னும் மாறவேண்டிய திசை, போகவேண்டிய தொலைவு, ஆகவேண்டிய காரியங்கள் என நிறைய இருந்தாலும், இதுவே உண்மை. எனவே இந்திய வரைபடத்தை தலைகீழாக மாற்றிவைத்துப்பாருங்கள், யார் மேலே இருக்கிறார்கள் என்பது தெரியும். 

இந்த அழகில் ஒப்பீட்டளவில் வளர்ந்த ஒரு மாநிலத்திடம் பின்தங்கிய ஒரு மாநிலத்தின்" சாதனையை" கொண்டுவந்து வைத்துக்கொண்டு அரற்றிக்கொண்டிருக்கும் மோடி ஆதரவாளர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அபாயத்தை பார்க்கையில் அந்த சிரிப்பு அடங்கி, சினம் எழுகிறது.

கடைசியில் ஒரு நிஜக்கதை: என் பள்ளிப்பருவத்தில் ஓர் ஆசிரியையிடம் நான் ட்யூஷன் போய்க்கொண்டிருந்தேன். அவர், பானுமதி டீச்சர், இன்றைய எனது வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களில் ஒருவர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், நெசவாளர் குடும்பம் ஒன்றைச்சேர்ந்த பையன் ஒருவன் ஆறாம் வகுப்பு டியூஷனுக்கு புதிதாகச் சேர்ந்திருந்தான். சில மாதங்கள் கழித்து, ஒருநாள், அந்த பையனின் அப்பா வேகவேகமாக ட்யூஷன் நடக்குமிடத்துக்கு வந்து, பானுமதி டீச்சரைப் பார்த்து சத்தம்போட ஆரம்பித்தார். ட்யூஷன் சேருவதற்கு முன்பு நல்ல மதிப்பெண் வாங்கிவந்த பையன், இப்போது குறைவாக வாங்குகிறான் என்று கத்தினார். அதிர்ந்து போன டீச்சர் அவரிடம் தீவிரமாக விசாரிக்க, அவர் தன் மகனின் புராகிரஸ் ரிப்போர்ட்டை எடுத்துக்காண்பித்தார். "முன்னாடி 45, 45 வாங்கிட்டு இருந்தான், இப்போ 15,16 வாங்கிறான்" என்று சுட்டிக்காட்டிப்பேச, ரிப்போர்ட்டைப் பார்த்த பானுமதி டீச்சருக்கு மயக்கம்வராத குறை. அந்த தகப்பனார் காட்டியது மாணவனின் ரேங்க் மதிப்பை!

Wednesday, 18 September 2013

முசாஃபர் நகர் கலவரத்துக்கு மூல காரணம்... ஈவ் டீசிங் அல்ல..!


வ் டீசிங் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்கிறார் அதில் சம்பந்தப்பட்ட பெண் ரீது. ஈவ் டீசிங் செய்ததாக பிறரால் சொல்லப்படும் அந்த பையன் ஷாநவாஸ்கானை தான் பார்த்ததோ அல்லது பேசியதோ இல்லை என்கிறார். மேலும், சர்ச்சைக்குள்ளான பகுதிக்கு தான் சென்றதில்லை என்கின்றார் அந்த சகோதரி. 'விஷயம் கேள்விப்பட்டு நாங்கள் போய் பார்க்கும் போது அந்த முஸ்லிம் குடும்ப ஆண்கள் எல்லாம் சேர்ந்து சச்சின் & கவ்ரவ் இருவரையும் வீதியில் மிகவும் மோசமான நிலையில் கொன்று போட்டு இருந்தனர்' என்கின்றனர் சச்சின்/கவ்ரவ் வீட்டு பெண்கள்.

அப்புறம், தன் பையன் ஈவ் டீசிங் செய்பவனில்லை என்றும் அப்படி சொல்வதெல்லாமே பொய் என்றும் திடமாக மறுக்கிறார் ஷாநவாஸ்கானின் தந்தை. மேலும், சச்சின்/கவ்ரவ் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரின் பைக்கும் மோதிக்கொண்டதில் தகராறு ஆகி, பின்னர் அவர்கள் வீடு சென்று, எட்டு பேருடன் 3 பைக்கில் சச்சினும் கவ்ரவும் திரும்பி வந்து ஷாநவாஸின் வீட்டுக்கருகில் வைத்து கத்தி மற்றும் சில ஆயுதம் கொண்டு கண்டபடி அவனை தாக்கி கழுத்து மார்பு வயிறு என உடம்பில் பல இடத்தில் வெட்டி வீதியிலேயே கொன்று விட்டனர் என்கிறார் தந்தை.

போலிஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்த போது, இரு தரப்பு கொலை பற்றிய இரு FIR களிலும் ஈவ் டீசிங் பற்றி ஒன்றுமே எழுதப்படவில்லையாம்..! ஏன்..? இரு தரப்பும் என்ன சொன்னார்களோ அதைத்தான் FIR இல் எழுதினோம் என்று சொல்லும் போலிஸ் ஈவ் டீசிங் பற்றி புகார் இல்லை என்கிறது. இவ்வளவுக்கும்... ஜாட் சாதியினரும் முஸ்லிம்களும் இதுவரை சண்டை போட்டுக்கொண்ட வரலாறே இதற்கு முன்னர் இல்லையாம்..!

--- கலவர ஸ்பாட்டில் இருந்து NDTV ரிப்போர்ட்..! ஆதார சுட்டி இங்கே 


அடுத்த சமூகத்தினர் மீது வெறுப்பை கொண்டு வர தன் வீட்டிற்கே குண்டு வைத்துக்கொள்ளுதல், யாத்திரை என்ற பேரில் குழப்பம் ஏற்படுத்த முயலுதல், இல்லாத காரணத்திற்காக கலவரத்தை தூண்டுதல், கலவரத்தை பெரிதுபடுத்த போலி வீடியோவை பரப்புதல் போன்ற சம்பவங்களுக்கும் தேர்தல் நெருங்குவதிற்கும் நிச்சயம் தொடர்புண்டு. 

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்றினாரே அந்த ஜாட் இன சகோதரர், அவருடைய செயலில் உள்ளது இவை அனைத்திற்குமான பதில். தங்களின் எண்ணங்கள் நிறைவேறாதா என்று பல்வேறு வகைகளில் குட்டிக்கரணம் அடிக்கும் சங்பரிவாரங்களின் சூழ்ச்சி பலிக்க போவதில்லை, பாடம் மட்டுமே புகட்டப்பட போகின்றனர். 


Saturday, 31 August 2013

தன் வீட்டிற்கே பெட்ரோல் குண்டு - இது பாஜகவினர் ஸ்டைல்


முதலில் நேற்று தினமணி வெளியிட்ட செய்தியை பார்ப்போம் 

"திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகியின் வீடு மீது புதன்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3ஆவது தெருவில் வசித்து வருபவர் பி. பிரவீண்குமார் (27). வேன் ஓட்டுநரான இவர், திண்டுக்கல் 10ஆவது வார்டு பாஜக கிளைக் கழகத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் பிரவீண்குமார் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை பிரவீண்குமார் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். பெட்ரோல் பாட்டில்கள் வெடித்ததில் வீட்டுக்கு அருகே சென்ற கேபிள் வயரில் தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமார் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். அகில உலக இஸ்லாமிய முன்னெற்ற கழகத்தை சேர்ந்த முபாரக் அபிபுலலா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர் அந்த பகுதியை சேர்ந் த பலரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்" 

இந்த செய்தியில் கடைசி பத்தியை இப்போது தினமணி தளத்தில் இருந்து காக்கா தூக்கிக்கொண்டு போய்விட்டது. சரி இது என்ன புதுசா, விடுவோம். இன்றைய தினமணி செய்தியை பார்ப்போம். 

"தனது வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக நிர்வாகி, நண்பர் கைது

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கமலக்கண்ணன் பிரவீன்குமார் 

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்."

முதலில் காவல்துறைக்கு நன்றிகள். குற்றவாளிகள் எதிர்ப்பார்த்தப்படியே விளம்பரமும் கிடைத்துவிட்டது, போலிஸ் பாதுகாப்பும் கிடைத்துவிட்டது :-) சில நாட்களுக்கு முன்னர் தான் அனுமன் சேனா என்ற அமைப்பினர் இது போன்ற வழக்கில் சிக்கினர். ஆனால் தன் வீட்டிற்கே குண்டு வைக்கும் அளவிற்கு செல்லவில்லை என்பது சற்றே ஆறுதல். 



இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். 

இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் டி.எஸ்.பி., சுருளிராஜா கூறிய போது "பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, காவல்துறைக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம். பாரதிபுரத்தில் நடந்த சம்பவமும் நாடகம் போலவே தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

ஆமாம் சார், பாரதிபுரம் மட்டுமல்ல, 'அவர் வரும் வழியில் குண்டு, இவர் வரும் வழியில் குண்டு, பாலத்திற்கு அடியில் குண்டு" போன்ற பல வழக்குகளின் தன்மையை இந்த கோணத்திலும் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும், பல அப்பாவிகளும் காப்பாற்றப்படுவார்கள். 

கட்டபஞ்சாயத்து, நிலத்தகராறு, பெண் தொடர்பு, மது போதையில் தகராறு போன்ற சங்கபரிவார பிரமுகர்களின் செய்கையில் இப்போது கடத்தல், தங்கள் குடும்பத்திற்கே பங்கம் விளைவிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். 

காங்கிரசின் குழப்படியான ஆட்சியால் தங்களுக்கு ஒட்டு விழும் என்று மனப்பால் குடித்தால், பிஜேபி அதனை இத்தோடு மறந்துவிடுவது நலம். முன்பும் கூட காங்கிரஸ் அபாரமான ஆட்சியை கொடுத்ததில்லை. சரியான மாற்று இல்லாததாலேயே அவர்கள் தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர். அந்த மாற்று தாங்கள் தான் என்று பிஜேபி நினைத்தால் மறுபடியும் மக்கள் பாடம் புகட்ட தயாராகவே உள்ளனர். 

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் அ 
நன்றி: இந்நேரம் மற்றும் தினமணி