Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday 10 September 2015

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி?


இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம். 

ஆன்லைன் மூலமாக தகவலை கேட்கலாம். 

1. முதலில் இங்கு செல்லுங்கள்: https://rtionline.gov.in/index.php

2. இதில் "Submit Request" என்பதை சுட்டுங்கள். 

3. வரும் பக்கத்தில் புள்ளிகளை படியுங்கள். அப்பக்கத்திற்கு அடியில் "I have read and understood the above guidelines" என்பதை டிக் செய்து "submit" என்பதை அழுத்துங்கள். 

4. நீங்கள் கேட்க வேண்டிய தகவல் குறித்த படிமம் தோன்றும். IIT குறித்து நீங்கள் கேட்க விரும்பினால், Select Ministry/Department/Apex body என்று கேட்கும் இடத்தில் "Department of Higher Education" என்பதையும், Select Public Authority என்று கேட்கும் இடத்தில், மீண்டும் "Department of Higher Education" என்பதையும் சுட்டுங்கள். 

5. உங்கள் இந்திய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள். நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவரா என்று கேட்கப்படும் இடத்தில் "இல்லை" என்பதை கொடுங்கள். பின்னர் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை "Text for RTI Request application" என்று இருக்கும் இடத்தில் கேளுங்கள். உங்கள் கேள்வி 3000 வார்த்தைகளுக்கு மேலே இருந்தால், கணிப்பொறியில் டைப் செய்து அங்கேயே கொடுக்கப்பட்டு ஆப்ஷனை கொண்டு பதிவேற்றுங்கள். 

6. அவ்வளவு தான். "Make payment" என்பதை சுட்டி ரூபாய் 10-ஐ debit அல்லது credit கார்ட்  மூலமாக செலுத்துங்கள். 

7. முடிந்தது. உங்கள் கேள்விக்காக கொடுக்கப்படும் தனித்துவமான தகவல்களை சேமித்துக்கொள்ளுங்கள். 

8. ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கப்பட  வேண்டும். பதில் வராவிட்டால் மீண்டும் "https://rtionline.gov.in/index.php" சென்று Submit First Appeal என்பதை சுட்டி தொடர வேண்டும். 

நான் கூறியுள்ள இவற்றில் ஏதேனும் புரியாவிட்டாலோ அல்லது மேற்கொண்டு எதையும் அறிந்துக் கொள்ள விரும்பினாலோ ஸ்க்ரீன் ஷாட்கள் கொண்ட பின்வரும் pdf உங்களுக்கு பயனளிக்கலாம். 

https://rtionline.gov.in/um_citizen.pdf

ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்து மூலமாகவும் தகவலை கேட்கலாம், அதற்கு சிற்சில மாற்றங்களுடன் நடைமுறை உள்ளது. எல்லாமே அந்த பத்து ரூபாயை எப்படி செலுத்த வேண்டும் என்பதில் தான் :-). 

.

Tuesday 8 September 2015

சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள அரபு நாடுகளின் பட்டியல்...


டந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

அகதி முகாம்களில் ஒன்று 

துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல மசூதிகள்/பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  

இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான். எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 


130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காஸா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. 

அல்ஜீரியா, சுமார் 55,000 அகதிகளுக்கு புகலிடம் தந்துள்ளது. "எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம். உணவு, மருந்து, வாழ்விடம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளோம். எங்களது பள்ளிகளில் சிரிய குழந்தைகள் படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம்" என்று அல்ஜீரிய செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


தங்களின் அகதிகள் கொள்கை காரணமாக, ஐக்கிய அமீரகம், சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன.  இதுவரை, சிரிய மக்களுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உதவி புரிந்துள்ள கத்தாரும் இதில் அடக்கம். இந்த நாடுகள், அறிவுக்கு அப்பாற்பட்ட தங்களின் வெளியுறவு கொள்கைகளை தளர்த்தி இம்மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். 

இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கூறிய காரணத்தை கூறி மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும், அந்த விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜெர்மனி (சுமார் 20,000). ஐரோப்பிய யூனியன் நாடுகளில், இதுவரை, 85% அகதிகளுக்கு அடைக்கலம் தந்த நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. 'இம்மாதிரியான சமயங்களில் உதவில்லை என்றால் ஒரு தோல்வியடைந்த சமூகமாகவே நாம் எதிர்காலத்தில் கருதப்படுவோம்' என்ற ஜெர்மனி அதிபரின் கருத்து கவனிக்கத்தக்கது. 

சிரிய விவகாரம் மிக நுட்பமாக அணுகப்பட வேண்டியது. இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல இது. ஐரோப்பிய நாடுகள் இதுநாள்வரை நிராகரித்து வந்த நிலையில், இலட்சகணக்கான சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தது யார் என்பதை சிந்திக்க வேண்டும். தூண்டிவிடும் அரசியலோ அல்லது இனவெறியோ பிரச்சையை அதிகப்படுத்துமே தவிர தீர்வளிக்காது. மனிதம் போற்றுவோம், மனிதர்களை காப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

மேலே காணும் தகவல்களுக்கான ஆதாரங்கள்: 
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இது தொடர்பில் நடத்திய ஆய்வு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் Syrian Refugees இணையதளம். 


Wednesday 26 August 2015

எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்??


கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம். 


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் மூலம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்தவர்கள், இன்று, தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்கள். 

1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கட்தொகையில் பதினைந்து சதவிதம் பட்டேல் சாதியினர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக வலுவானவர்களாக கருதப்படும் பட்டேல் பிரிவினர், 1970-கள் வரை காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்கள் எண்ணங்களுக்கு காங்கிரஸ் செவி சாய்க்க மறுத்ததால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இன்று வரை அது தொடர்கின்றது. 

இதற்கான பிரதிபலன்களை நாம் கண்கூடாக பார்க்க முடியும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல் பிரிவை சார்ந்தவர்களே. 

ஆக, செல்வ செழிப்பான வாழ்வை அனுபவித்து வருவதாக கருதப்படும் இவர்கள், இட ஒதுக்கீடு கேட்பதற்கான மர்மம் என்ன? 

வெளியே ஊதி பெருக்கப்படும் 'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற திட்டங்கள் எடுபடாததே இதற்கு காரணம். உதாரணத்திற்கு, இவர்கள் கோலோச்சி உள்ள தொழில்களில் ஒன்றான வைர வியாபாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சுமார் 150 நிறுவனங்கள் வரை சமீபத்தில் மூடுவிழா கண்டுள்ளன. ஆக, தங்களின் எதிர்கால சந்ததிகள், கல்வி மற்றும் அரசு பணிகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனை முன்னோக்கியே லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்ளும் சமீப கால போராட்டங்கள், அதன் வெளிப்பாடாக கலவரங்கள். 

இவர்களை வழிநடத்துவது ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் என்பது நம்புவதற்கு கடினமானதாக இருக்கின்றது. இவரை கைது செய்த போது தான் கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 


இவர்கள் கேட்பது 27 சதவித இடஒதுக்கீடு. எந்தவொரு மாநிலத்திலும், இட ஒதுக்கீடு என்பது ஐம்பது சதவிதத்தை தாண்டி இருக்க கூடாது என்பது உச்சமன்ற தீர்ப்பு. குஜராத்தை பொருத்தமட்டில், இந்த உச்சவரம்பை ஏற்கனவே எட்டி விட்டது. ஆக, பட்டேல்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சாத்தியமாக வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏற்கனவே இருக்கும் ஏனைய சமூகத்தினருக்கான சதவிதத்தை குறைத்து அல்லது பிடுங்கி தான் இவர்களுக்கு தர முடியும். அப்படி நடந்தால் குஜராத் ஸ்தம்பிக்கும் அளவு தங்களின் எதிர்ப்பு இருக்கும் என்று OBC பிரிவில் இருக்கும் சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவிட்டனர். 


இந்த பிரச்சனையானது மற்ற சமூகத்தினரை தூண்டும் அளவு சென்றது/செல்வது தான் பரிதாபமானது. சில தினங்களுக்கு முன்பு, பட்டேல் சமூகம் நடத்திய ஒரு பேரணியில் தலித்துகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது. 

சாதிய பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இவை அனைத்தும் சுமூகமான தீர்க்கப்பட்டு குஜராத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
படங்கள்: இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி சேகரிக்க உதவியவை: NDTV, CNN IBN, TOI மற்றும் இந்தியா டுடே

Thursday 11 June 2015

பிரதமர் காப்பீட்டு திட்டம் - அப்படின்னா என்ன? என்ன பயன்?


இரு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று உயிருக்கானது, மற்றொன்று விபத்திற்கானது. இதுக் குறித்த விழிப்புணர்வின் அவசியம் கருதி, இத்திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே தருகின்றேன். 

1. உயிர் காப்பீட்டு திட்டம்: 

 'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் நோக்கம், 55 வயதிற்குள்ளாக ஒருவர் இறந்து விட்டால் (எப்படியான மரணமாகவும் இருக்கலாம்), ரூபாய் இரண்டு லட்சம் அவர் நியமிக்கும் வாரிசுதாரருக்கு அளிக்கப்படும். 

இதற்காக, இந்த திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்தவரின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து, ஒவ்வொரு வருடமும், மே மாதம் இறுதி வாரத்தில், ரூ.330 தானியங்கி முறையில் (Auto Debit) எடுத்துக்கொள்ளப்படும்.  

இந்த 330 ரூபாயானது முதல் மூன்று வருடத்திற்கு மட்டுமே. பின்னர், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நான்காம் வருடத்தில் இருந்து இந்த தொகை அதிகரிக்கப்படலாம்.

யார் சேரலாம்? எப்பொழுது சேர வேண்டும்?

18 முதல் 50 வயதுடைய எவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஐம்பது வயது வரை தான் சேரலாம் என்றாலும், ஐம்பது வயதுக்குள் சேர்ந்தவர் 55 வயது வரை தொகையை கட்டி இத்திட்டத்தில் நீடித்திருக்கலாம்.

ஜூன் ஒன்றாம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி சேருவது?

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், இதற்கான பாரம் தருவார்கள். அதனை பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் போதுமானது. பாரத ஸ்டேட் வங்கி இதற்கென அளித்த பாரத்தில் பின்வரும் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. உங்கள் பெயர், வங்கி கணக்கு எண், முகவரி, உங்கள் ஆதார் எண், நீங்கள் வாரிசுதாரராக (Nominee) நியமிக்கவுள்ளவரின் பெயர், அவரின் முகவரி, அவரின் பிறந்தி தேதி/மாதம்/வருடம் (Date of birth), ஒருவேளை நீங்கள் நியமிக்கும் வாரிசுதாரர் மைனராக இருந்தால் காப்பாளரின் (Guardian) பெயர், முகவரி மற்றும் அவரின் பிறந்த தேதி விபரங்கள். 

கடைசியாக, உங்கள் கணக்கில் இருந்து ரூ.330 எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் அளிக்கும் அனுமதி (அதாவது உங்களின் கையெழுத்து). 

ஒருவர் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில், ஒரு கணக்கில் மட்டுமே சேர அனுமதி உண்டு. உங்கள் ஆதார் எண் மூலம் இது கண்டுபிடிக்கப்படும். 

எப்படி பயன்பெறுவது? 

உங்களின் 55 வயது வரை மட்டுமே இது செல்லுபடியாகும். அதாவது இந்த வருடத்திற்குள்ளாக மரணம் ஏற்பட்டால் உங்களின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும். 

உதாரணமாக, சங்கர் என்ற ஒருவர் 30 வயதில் இத்திட்டத்தில் சேருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். 25 வருடமாக அவர் பணம் செலுத்தி வருகின்றார். 60 வயதில் அவருக்கு மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட மாட்டாது. அது போக, அவர் இத்தனை வருடங்களாக செலுத்திய தொகையும் திரும்ப தரப் படாது. 

2. விபத்து காப்பீட்டு திட்டம்: 

'பிரதான மந்திரி சுரக்ஷா யோஜனா' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம், விபத்துகளில் உங்களுக்கு இழப்பு (கவனிக்க: இழப்பு ஏற்பட்டால் மட்டுமே) ஏற்பட்டால் ரூ.2 லட்சத்தை காப்பீடாக அளிப்பது. 

18-70 வயதிற்குள்ளான எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதற்காக வருடம் ரூபாய் பனிரெண்டு உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். 

எப்படி/எப்பொழுது சேருவது என்பதான தகவல்கள் மேலே உயிர் காப்பீட்டு திட்டத்திற்கு உள்ளது போன்றதே. 

எப்படி பயன்பெறுவது?

உங்களுக்கு உயிர் அல்லது உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இத்தொகையை நீங்கள் பெற முடியும். 

அதாவது, விபத்தினால்,  
  • உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சம். 
  • இரு கால்கள் அல்லது இரு கைகள் அல்லது இரு கண்கள் அல்லது ஒரு கை & ஒரு கண் அல்லது ஒரு கால் & ஒரு கண் போன்றவை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.2 லட்சம். 
  • ஒரு கால் அல்லது ஒரு கண் அல்லது ஒரு கை நிரந்தரமாக செயல் இழந்தால் ரூ.1 லட்சம். 

இதனை தாண்டிய மற்றவற்றிற்கு நீங்கள் காப்பீட்டு தொகையை கோர முடியாது. உதாரணத்திற்கு, அப்துல்லாஹ் என்ற ஒருவர் விபத்தில் சிக்கி கால் முறிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். கால் முறிவிற்கான சிகிச்சைக்கு எல்லாம் அவர் இத்தொகையை கோர முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் ஒன்று நடந்தால் மட்டுமே கோர முடியும். 

இந்த பனிரெண்டு ரூபாய் ப்ரீமியம் தொகையும் மூன்று வருடத்திற்கு பின்கு ஆய்வுக்குரியது. 

3. இரண்டு திட்டங்களிலும் சேரலாமா?

தாராளமாக சேரலாம். நான் பார்த்தவரையில், பாரத ஸ்டேட் வங்கியில் இந்த இரண்டு திட்டத்திற்கும் சேர்த்து ஒரே பாரம் தான் தருகின்றார்கள். நீங்கள் உயிர் காப்பிட்டு திட்டத்தில் சேர விரும்பினால், விபத்து காப்பீட்டு திட்டத்தையும் அதனுடன் இணைத்துக்கொள்வோம் என்று கூறுகின்றனர். 

மேலும், நீங்கள் இரண்டு திட்டங்களிலும் இணைந்திருந்தால், (55 வயதிற்குள்ளாக) விபத்து என்னும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேர்ந்தால் (இரண்டு திட்டதிற்குமான காப்பீட்டு சேர்த்து) ரூ.4 லட்சம் உங்கள் வாரிசுதாரரிடம் கொடுக்கப்படும். 

இந்த இரண்டு திட்டங்கள் தவிர்த்து பென்ஷன் தொடர்பான திட்டத்தையும் இவைகளுடன் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து சகோதரர். மு.சா.கொதமன் எழுதியுள்ள கட்டுரை உங்களுக்கு பயன்படலாம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
தகவல் சேகரிக்க உதவிய தளம்: இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம். பார்க்க இங்கே 

Monday 8 June 2015

பாண்டிச்சேரி அரசு பொது மருத்துவமனை - 'குடி'மகன்கள்


இடம்: இரத்த வங்கி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பாண்டிச்சேரி. 

"என்னமா?" - இரத்த வங்கி அதிகாரி. 

"புள்ள முடியாம கிடக்குதுங்க. ஆப்பரஷேன் பண்ணும்னு டாக்டர் சொல்றாங்க. இரத்தம் வேணுமாம். இத கொடுத்து அனுப்புனாங்க" - எந்த வகை இரத்தம், எத்தனை யூனிட் வேண்டுமென்று எழுதப்பட்டிருந்த துண்டு காகிதத்தை நீட்டுகின்றார் அந்த இளவயது பெண். 

"சரிமா.. உங்க புருஷன வர சொல்லுங்க. அவர டெஸ்ட் பண்ணி கொடுக்க செய்யலாம்"

"அவரு 'தண்ணி' சாப்பிடுரவருங்க"

"அப்ப சொந்தகாரங்களையாவது வர சொல்லுங்க"

"இல்லங்க அவங்களும் அப்படித்தான்" 

"என்னமா இப்படி சொல்றீங்க. போய் யாரைவது கூட்டிட்டு வாங்க" 

"எனக்கு வேற யாரையும் தெரியாதுங்க. என் புள்ளைய காப்பாத்துங்க" - அழத் தொடங்குகின்றார். 

இது பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை என்றில்லை, நகரத்தின் மற்றுமொரு பிரதான மருத்துவமையமான ஜிப்மரிலும் இக்காட்சிகளை தொடர்ச்சியாக காண முடியும். 

இதனை விடுங்கள். பின்வரும் சம்பவத்தை நீங்கள் எப்படி ஜீரணிப்பீர்கள்? 

அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். அரிதான நெகடிவ் வகை இரத்தம் தேவை. பக்கத்திலேயே அந்த வகை இரத்தம் கொண்ட உறவினர் இருக்கின்றார். ஆனால், மதுவருந்தி சில மணி நேரங்கள் தான் ஆகியுள்ளதால் அவர் இரத்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர். எப்படி ஜீரணிப்பீர்கள் இச்சம்பவத்தை?? 

வேறதையும் விடுங்கள். தன் சொந்த பிள்ளைக்கு, பெற்றோருக்கு, சகோதர சகோதரிக்கு கூட பயன்படவில்லை என்றால் உயிர் இருந்தும் அந்த உடல் சவம் தானே? 

இரத்தம் தேவை என்று வரும் தகவலை பார்வர்ட் செய்யும் போது, தான் அந்த பகுதியில் இருந்தும், மதுவருந்தியதால் தன்னால் கொடுக்க முடியவில்லையே என்று மனசாட்சி அழுத்துமே, அதற்கு என்ன பதில் இருக்கும்? இரத்தம் எடுக்கும் போது ஏற்படும் அந்த சின்னஞ்சிறு வலியை நாம் அனுபவிக்கவில்லை என்று மனதை ஆறுதல் தான் படுத்திக்கொள்ள முடியுமா!!!

குடி குடியை கெடுக்கும். குடி குடியை அழிக்கும்..



Tuesday 27 January 2015

மோடியின் பேஷன் களேபரம் - இத மறந்திராதிங்க


"Ridiculous" - தான் அணிந்திருந்த சூட் முழுக்க தன் பெயரை பதிந்து பவனி வந்த மோடியின் செயலை இப்படியாக வர்ணிக்கின்றது வாஷிங்டன் போஸ்ட். வால்ஸ்ட்ரீட் ஜர்னலோ மேலும் பல படிகள் உயர்ந்து மோடியின் செயலை கடுமையாக பகடி செய்கின்றது. 


மோடியின் இந்த செயல் புதிதும் அல்ல, எகிப்து சர்வாதிகாரி முபாரக் இப்படியான ஆடையை அணிந்துள்ளார். 


ஒரு பிரதமரின் இத்தகைய செயல் இந்தியர்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஒரு முக்கிய விவகாரத்தை நாம் மறந்திரக்கூடாது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அணு ஆயுத ஒப்பந்தத்தை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாம் கொண்டு வந்து களேபரம் செய்த பாஜக, இன்று ஒபாமாவின் வருகையின் போது அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்றுக்கொண்டிருக்கின்றது. மோடியின் பேஷன் செயல்களில் இந்த முக்கிய விவகாரத்தை (மற்றுமொரு U-Turn) நாம் மறந்துவிடக்கூடாது.

மோடியின் அந்த சூட் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது யாருடைய பணம்? நம் வரிப்பணமா? அல்லது யாராவது உதவி செய்தார்களா? மோடி ஆட்சியில், அவர் கூறிய 'நல்ல நேரம்' என்பது பணக்காரர்களுக்கும், அவருடைய ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் மட்டும் தான் போல.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒபாமாவை கவர மோடி/பாஜக அரசாங்கம் இதுவரை இல்லாத அளவு முயற்சிகளை செய்து கொண்டிருக்க, அவரோ சில வார்த்தைகளை உதிர்த்து (மோடியை) அதிர்ச்சியடைய செய்துவிட்டார். 

ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புவாத அசாதாரண நிலையை சுட்டிக்காட்டியது. 

இரண்டு, சமீபத்திய ஆண்டுகளாக, இந்தியாவில் ஏழைகளின் நிலை ஏற்றம் பெற்று வருவதாக கூறியது. அப்படியானால் அப்போது யார் ஆட்சி?

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ 
படங்கள்: இந்தியா டுடே மற்றும் சமூக வலைத்தளங்கள்