Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 27 January 2013

விஸ்வரூபம் - தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்குறிப்பு : இது உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் தங்கசாமி அவர்களின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு, அப்படியே இங்கு பதியப்படுகிறது.


இது ரொம்ப நீண்ட பதிவு அதனால் பொறுமையாக படிக்கவும்..

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை (திரையரங்கில்!) பார்த்து முடித்து சில மணிநேரம் தான் ஆகிறது.. சூடு ஆறும் முன்பே எனது ஆய்வு இங்கே.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

பெரிய சினிமா ரசிகன் இல்லை என்றாலும் இவ்வளவு பிரச்னையை கிளப்பிய இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கவே சென்றேன்.. (இதே காரணத்திற்காகத்தான் இத்தனை சர்ச்சைகளை கமலும் கிளப்பினார் என்று கருதுகிறேன்.. இது கமலின் முதல் மற்றும் ஒரே வெற்றி!!)

முதலில் படத்தின் நல்ல விடயங்கள் சில.. ஆரம்ப காட்சிகளில் பெண்மை ததும்ப வரும் கமலின் அருமையான நடிப்பிற்கு நானும் என்னை மறந்து கூட்டத்துடன் கைதட்டி மகிழ்ந்தேன்.. முதல் பாடலில் கமலின் நடனம் கூட்டத்தை ஈர்க்கவே செய்தது.. கமலின் சுயரூபம் விளங்கியதும் அப்பாவி மனைவியின் அதிர்ச்சிகள் நிறைய சிரிப்பொலிகளை ஒரு பக்கம் எழுப்பினாலும் உள்ளாடை(Bra) பற்றிய காமெடி எல்லாம் சுமாரான ரசனை..

சண்டை முடிந்து வரும் கமல் முடியை சுத்தமாக வெட்டி கிராப் வைத்துக்கொண்டு இறங்கி வரும்போது மனைவி பிரமிக்கிறாள்.. தியேட்டரில் யாரும் பெருசா react பண்ணுன மாதிரி தெரியல. மற்றபடி பெரிதாய் ரசிக்கும்படியோ பிரமிக்கும்படியோ படத்தில் எதுவும் இல்லை..

இதில் ஹாலிவுட்டுக்கு இணையாக படம் எடுத்துவிட்டதாக கமல் நம்புவது அவர் மேல் பரிதாபத்தையே உண்டாக்குகிறது..

வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. ஹிந்தி மட்டும் இந்தியாவின் மொழியல்ல என்று கூச்சல் போடுகிறோம். (இத்தனைக்கும் நிறைய மக்கள் பேசுகிறார்கள்/புரிந்துகொள்கிறார்கள்) ஆனால் கடுகளவு சிறுபாண்மையான பிராமணர் மட்டும் தான் தமிழ்நாட்டில் வாழ்பவர் என்கிற பாணியில் தான் கமல் படங்கள் எப்போதும் இருக்கும். அது ஊர் அறிந்த ரகசியம் தானே.. அதை விட்டு விடலாம்.

தமிழகத்தின் ஒரு அறுதி சிறுபான்மையான பிராமணர்களை தவிர வேற யாரை கொண்டும் படம் எடுக்க தெரியாத கமல் என்னத்த உலக நாயகன்? தசாவதாரத்தில் தலித் என்று சொல்லிக்கொண்டு பார்க்க சகிக்காத ஒரு வேடம் பூண்டு வந்த கமலால் சராசரி தமிழனை அழகாகவோ, கேமரா முன்னாள் நிற்க தகுதி உள்ளவனாகவோ பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் தன் பிராமண பிரிவுக்குள்ளாவது ஒரு பரந்த சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதுக்குள்ளேயும் அய்யங்காருக்கு அவர்களுக்கு படம் முழுக்க பெருமாள் பஜனை தான்.

முதலில் இது ஹாலிவுட் தர படமா என்ற கேள்வியே தேவையற்றது.. தமிழன் கலை படைப்புகளில் என்றைக்கும் பின் தங்கியவன் இல்லை.. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.. மேலும் ஹாலிவுட் படங்களின் உன்னதம், வெற்றி அவர்கள் பறக்கவிடும் விமானங்களிலும், வெடிக்கவிடும் கட்டிடங்களிலும் இல்லை.. கதை சொல்லும் நேர்த்தியில் உள்ளது..

உலக சினிமாவின் தலைசிறந்த படங்களாக பல தலைமுறைகளை தாண்டியும் நின்று நிலைக்கும் Shawshank Redemption, Godfather, Pulp Fiction, Fight club, 12 Angry Men, Psycho, The Pianist போன்ற படங்கள் கோடிகளை வாரி இறைத்து எடுக்கப்பட்டவை அல்ல.. அன்றியும் Inception, Dark Knight, Matrix போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதையின் சுவாரசியமே..

தமிழ் சினிமாவை உலகம் வியக்கும்படி செய்வது விஸ்வரூபம் போன்ற படங்கள் அல்ல. அந்த நாள், வீடு, மௌன ராகம், முந்தானை முடிச்சு, சிகப்பு ரோஜாக்கள், அழகி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தான்.. பிரம்மாண்டம் என்றாலும் சந்திரலேகாவின் உச்சகட்ட நடனக்காட்சியும், அவ்வையார் படத்தில் யானைகள் கோட்டையை இடிக்கும் காட்சியும் பெரிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் போனாலும் இன்றைக்கும் ரசிக்க வைப்பது அதில் வாரி இறைத்த காசு அல்ல.. அதற்கான தேவையை உண்டாக்கும் திரைக்கதை தான்.

இந்த படத்தை பார்க்கையில் பழையகால Manual vending Machine ஒன்றில் என் அறிவுஜீவி நண்பன் காபித்தூள், பால், சர்க்கரை ஆகிய பொத்தான்களை வேக வேகமாக அழுத்திவிட்டு குவளை(Cup) பொத்தானை அழுத்த மறந்தது தான் நினைவுக்கு வருகிறது..

சரி அப்படியும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளிலாவது சிறந்து விளங்குகிறதா என்றால் இல்லை. சராசரி தமிழ்ப்படங்களை விட நிறைய உலங்கு ஊர்திகளை (Helicopters) பறக்க விட்டுள்ளார்.. அவ்வளவே.. தமிழ் மொழியிலே மட்டுமே வெளியிடப்படும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமலின் படம் கொஞ்சம் high-tech ஆகத்தான் தோன்றும். விஜய், அஜீத் படங்களை விட சாதுர்யமாகதான் இருக்கும். ஆனால் Saving Private Ryan, Troy போன்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுக்கொல்வது ரொம்ப அதிகம்.

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..

ஆங்கிலப்படங்கள் பார்க்காத நம்மூர் மக்களை ஏமாற்றுவதில் கமலஹாசனுக்கு ஒரு கள்ளப்பெருமை இருக்கலாம், அதில் ஹாலிவுட் படங்களையும் ரசிப்பவர்கள் பாராட்ட எதுவும் இல்லை..

மற்றபடி மொத்தப் படமும் freezerல் வைத்து பல நூற்றாண்டுகளாக அறைக்கப்படும் அதே ஊசிப்போன மாவு தான். பின்னணி இசையிலும் பல இடங்கள் Dark Knight உட்பட எனக்கு பிடித்த பல படங்களில் இருந்து சுட்டவையே.. (தழுவல் என்று வேண்டுமானால் நாசூக்காக சொல்லாம்.)

ஆனால் பாடல்கள் காப்பி அடித்தது போல இல்லை.. தனித்தன்மையுடனே இருக்கின்றன அனைத்து பாடல்களும்.

இத்தகைய அமெரிக்க ராணுவ வீர சாகச மொக்கை படங்களை அந்த கதையுடன் நேரடி தொடர்பு உள்ள அமெரிக்கர்கள் கூட இப்போதெல்லாம் அவ்வளவாக ரசிப்பதில்லை.. அதையே தமிழ்மொழியில் எடுத்து கமல் பெருமைப்படுவது நகைப்புக்குரியது.

மேலைநாடுகள் பழசு (Outdated technologies) என்று தூக்கி எரியும் போர் தலவாடங்களை வாங்கி குவித்து அதை வருடம் இரண்டு முறை ஊர்வலம் விட்டு பெருமைப்படும் இந்திய ராணுவம் போல..

விஸ்வரூபம் ஒரு புஸ்வானம் என்பது ஒரு பக்கம் இருக்க. இந்த படத்திற்கு வந்த தடையும் அதன் தாக்கமும் பற்றி யோசிக்கிறேன்.

ஒரு பெண்ணின் தலையை அறுத்து கொல்லும் தீவிரவாதிகளை மௌனமாக ஏற்றுக்கொண்டுவிட்டு, இப்போது ஒரு சினிமாவுக்காக கொதித்தெழுந்து வீரவசனம் பேசும் எந்த இஸ்லாமிய அமைப்பின் கோரிக்கையையும் நாம் பெரிதுபடுத்தக்கூடாது. இத்தகைய அமைப்புகள் தாங்களே இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்று காட்டவே முயற்சி செய்கின்றன அன்றியும் அதில் நேர்மை இல்லை.

ஆனால் இவர்கள் படத்தை எதிர்ப்பதால் உடனே நாம் மாறாக ஆதரிக்கலாகாது. இந்த படத்தை எதிர்ப்பதற்கு நமக்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு. கமல்ஹாசன் என்ற கலைஞனுக்கு வக்காலத்து வாங்கிய பலரும் (நான் உட்பட) இது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே பார்த்தனர் வேறு எதுவும் காரணம் இல்லை. ஆனால் இந்த படம் கலை வடிவமும் அல்ல, கமல் நேர்மையான கலைஞனும் அல்ல. இதை படம் பார்த்த பின்பு அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

நல்ல கலைஞனுக்கும் அவனது படைப்புக்கும் மூன்று முக்கியமான குணங்கள் உண்டு. ஒன்று தன் கலை வடிவத்தில் உண்மையை மட்டுமே பரப்பே வேண்டும் என்ற பிடிவாதமான நேர்மை.. இரண்டாவது தன் கலை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக அக்கறை.. இன்னொன்று அந்த கலையை புதுமையாக மெருகூட்டும் ஆர்வம். Creative Instinct என்றும் சொல்லலாம். இதில் எதுவுமே கமலுக்கு இல்லை.

மூன்றாவது விடயத்தை முதலில் பார்ப்போம்.. முழுக்க முழுக்க பல படங்களில் இருந்து சுட்ட காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை.. இது எதேச்சையாக நடந்தது அல்ல.. Creativity is all about hiding your sources என்று Einstein சொன்ன தத்துவத்தையே இங்கு கமல் மெய்ப்பித்திருக்கிறார். பிறமொழி படங்களை பார்க்காத பெரும்பான்மை தமிழ் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கலாம்.. பிறமொழி படங்கள் குறிப்பாக ஆங்கில படங்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் மட்டுமே மிஞ்சும். எனவே இது creativity என்ற பட்டியலில் எக்காலத்திலும் சேராது.

கூச்சமே படாமல் காப்பியடித்து Xerox machine என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் தேவா ஏனோ நினைவுக்கு வருகிறார். இதுமாதிரி படங்களில் கோடிகளை போட்டு கோடிகளை அள்ள துடிக்கும் கமலின் செயல் ஒரு வியாபாரியின் சிந்தனையே அன்றி ஒரு நல்ல கலைஞனின் சிந்தனை அல்ல.

உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி உட்பட பல நல்ல திரைப்படங்கள் சிக்கலில் தவிக்கும் போது இமயமலை சாமியார்களுக்கு பேன் பார்க்க போய்விடும் ரசினிகாந்து இந்த படத்துக்கு வக்காலத்து வாங்குவது சக வியாபாரி என்ற பாசமே அன்றி இவர்கள் யாரும் கருத்து சுதந்திர போராளிகள் இல்லை.

அடுத்து இரண்டாவது விடயம். சமூக அக்கறை. தீமை பயக்கும் மெய்யை விட, நன்மை பயக்கும் பொய்யே நல்லது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தீமையை மட்டுமே விளைக்கும் நிரூபிக்கப்படாத உண்மைகளை பரப்புவது எதற்காக?

தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.

மூன்று விடயங்களில்.. முதல் விடயமே நம்மை மிகவும் கவலை கொள்ள செய்யும். அது நேர்மையின்மை. கதை சொல்பவர்கள் கொஞ்சமேனும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு திரித்து சுய-நியாயம் ஏற்று கூறுவது இயல்புதான். ஆனால் அது அளவை மிஞ்சும்போது ஆபத்தாகி அந்த கலையின் ஜீவனையே கொன்றுவிடும்.

இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.

அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை (அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.

அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.

வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும், ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.

இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான். ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம். ஆனால் அவரின் ஆஸ்கார் கனவை எண்ணி சிறு வயது முதல் பெருமைபட்ட எனக்கு இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.

ஆஸ்கார் கனவு என்பது ஆகச்சிறிய செயல்திட்டம். ஆனால் வேறொரு விஷயம் உதைக்கிறது. திரைக்கு முன்னரே DTH ல் வெளியிடுவதால் ஒன்று லாபம் அதிகம் வரலாம். அல்லது தொலைகாட்சியில் பார்த்துவிட்டதால் திரையரங்கு வசூல் குறைந்து போகலாம். குறையும் என்பதே பரவலான நம்பிக்கை என்கிற ரீதியில் ஏற்றுக்கொண்டால், கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.

ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம். இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது. இதில் கமலுக்கு என்னதான் லாபம்?

ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார். இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது? தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது? மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான். ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”

மற்றபடி தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத, நேர்மை இல்லாத, ரசனை இல்லாத, Creativity இல்லாத படம் என்றாலும் வெளிவரும் முன்னரே தடை செய்வது நல்ல முன்னுதாரணமாக இருக்காது. பல நல்ல படைப்பாளிகளின் குரல்வளை நெரிக்கப்பட இதுவே ஒரு தொடக்கப் புள்ளியாகிவிடும். There seems to be no genuine artistic experimentations or social motivations behind this movie.

ஆனாலும் நல்ல படமா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு பொது மக்களுக்கே விடப்பட வேண்டும். அதனால் இந்த படம் வெளியாக வேண்டும். தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். ஒருவேளை இது வெளிவந்து சீந்துவார் இல்லாமல் போனால் அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும். உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும். இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும் அதுவே உருவாக்கியவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் வெளிவந்த உடனே இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா முடிவு கட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்து ஆட வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த படம் அத்தகைய ஒரு துயர வரலாற்றுக்கான அச்சாரமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கமல் என்கிற கலைஞனின் மீது நடந்ததாக கூறப்படும் ஒடுக்குமுறை பற்றிய எனது கருத்து இதுதான். கடுமையாக உழைத்தே தன்னை நிலைநிறுத்திக்கொண்ட போதும் கமலுக்கு அறிமுகம்தொட்டே மிக பலம் வாய்ந்த சினிமா பின்புலம் இருந்து உதவியது. அதனால் பல தோல்விகளுக்கு பிறகும் அவரால் தொடர முடிந்தது. இன்று பல கோடிகளை போட்டு பிரம்மாண்ட “உலக சினிமா” பண்ணும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. என்னை பொருத்தவரை இதில் பெருமை என்று பெரிதாய் எதுவும் இல்லை.

கோடி ரூபாய்க்கு வாங்கிய BMW காரில் போகிறவனை ஒரு நல்ல Driver சுமாரான இண்டிகா கொடுத்தாலும் தட்டி எரிஞ்சிட்டு போயிடுவான். விஸ்வரூபத்தை இந்த கோணத்தில் தான் "நான் யுத்தம்" செய் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.

என்ன செய்ய வாய்ப்புகள் கிடைக்காமலேயே பல திறமைசாளிகளின் வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது. கமல் போன்றவர்களுக்கு காலமும் சூழ்நிலையும் பல நூறு வாய்ப்புகளை வழங்குகிறது.

80 கோடி அல்ல 8 கோடியிலேயே உலக சினிமா எடுக்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர் அவர்களை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்.

...முற்றும்...

அவரின் பேஸ்புக் முகவரி ... 

http://www.facebook.com/photo.php?fbid=4359933596810&set=a.1679865436781.2085416.1241881682&type=1&theater

Wednesday, 23 January 2013

News Flash: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைசட்டம் ஒழுங்கை கணக்கில் கொண்டு அடுத்த பதினைந்து நாட்களுக்கு விஸ்வரூபம் படம் திரையிடப்பட தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே தடையை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அறிவிப்பு.

விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை கண்டு கடும் எதிர்ப்பை தெரிவித்த முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, படத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது.

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக களம் இறங்க, சமூக வலைத்தளங்கள் பரபரத்தன. முதல் கட்டமாக நேற்று கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் சென்சார் போர்ட் நடவடிக்கைகள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது நடந்துக்கொண்டிருந்த வேலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக இன்று அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இன்று தலைமைச் செயலரை சந்தித்து இஸ்லாமிய கூட்டமைப்பு முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்தது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இன்று குதிக்க இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. கமலின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நீங்கள் மேலே காணும் செய்தி வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

மிகவும் சமயோஜிதமாக இந்த விசயத்தை முஸ்லிம் அமைப்புகள் கையாண்டிருக்கின்றன.துப்பாக்கி படம் கொடுத்த ஷாக்கில் சுதாரித்த முஸ்லிம் அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்ட பிறகே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வெற்றி கண்டிருக்கின்றன. எதிர்கால வியூகங்களுக்கு விஸ்வரூபம் விவகாரம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

இந்த படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தவுடன், படத்திற்கு முஸ்லிம்கள் விளம்பரம் அளிக்கின்றனர் என்று கூறிவந்தவர்களின் பார்வையும் இந்த தடை மூலம் மாறும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

கீழ்த்தரமான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம்.


மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ 

Monday, 21 January 2013

ஆனந்த விகடன் - நக்கீரன் - பகிரங்க விவாதத்திற்கு முஸ்லிம் அமைப்பு அழைப்பு


சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா குறித்து ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்  கட்டுக்கதைகளாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய இயக்கம், இது தொடர்பான அனைவரையும் மக்கள் முன்னிலையிலான பகிரங்க பொது விவாதத்திற்கு அழைத்துள்ளது. 

கீழ்க்காணும் நபர்களுக்கு முறைப்படி விவாத அழைப்பு அனுப்பட்டுள்ளது. 

ஆசிரியர் - நக்கீரன் வார இதழ் 
ஆசிரியர் - ஆனந்த விகடன் வார இதழ் 
மனுஷ்ய புத்திரன் - C/o நக்கீரன் வார இதழ். 
ஜே.பி ஜோசப்பின் - C/o நக்கீரன் வார இதழ் 
பாரதி தம்பி - C/o ஆனந்த விகடன் வார இதழ்

விவாத அழைப்புக்கடிதம் உங்கள் பார்வைக்கு..இதுக்குறித்து சம்பந்தப்பட்ட இதழ்களை நீங்களும் கீழ்காணும் முகவரியில் தொடர்புக்கொண்டு விவாதத்திற்கு வருமாறு ஊக்கப்படுத்தலாம்.

ஆனந்த விகடன்: av@vikatan.com, editor@vikatan.com

நக்கீரன்: news@nakkheeran.in, nakkheeran@in.com, editor@nakkheeran.in

இந்த விவாதத்திற்கான செலவுகள் அனைத்தையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. விவாதம் நல்ல முறையில் நடந்து மக்கள் பயன்பெற வாழ்த்துக்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ