Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday 10 December 2014

உத்திரபிரதேச மத மாற்ற விவகாரம் - அம்பலமாகும் உண்மைகள்.


உத்திர பிரதேசத்தில், ஆக்ரா நகரின் புறநகர் பகுதியில், சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சங்பரிவாரங்களால் மாற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை தேசிய ஊடகங்கள் இன்று அம்பலப்படுத்தியுள்ளன. 


மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த 60 குடும்பங்களும் பங்களாதேஷ் அல்லது மேற்கு வங்கத்தில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடியேறியவர்கள். மதம் மாறியதாக சங்பரிவாரங்களால் கூறப்படும் இவர்களில் பெரும்பாலானோர் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள். 

கடந்த 17 வருடங்களாக இப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகள் என்று எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தியே சங்பரிவாரங்களால் அந்நிகழ்ச்சிக்கு தாங்கள் சிக்கவைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

முனிரா என்பவர் கூறும் போது, இந்த வைபவத்தில் கலந்துக்கொண்டால் நிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சங்பரிவாரங்களால் தாங்கள் ஆசைக்காட்டப்பட்டதாகவும் (இதனை பஜ்ரங்தல்லின் விழா ஏற்பாடடாளர் சவுஹான் உறுதிப்படுத்தியுள்ளார்), மேலும், "தீயை கொண்டு நிகழ்த்தப்படும் அந்நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து செல்லப்பட்டு, உட்கார வைக்கப்பட்டோம். அச்சத்தில் இருந்த நாங்கள் ஹிந்து கடவுள்களை வழிபட கூறப்பட்டோம். அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் மறுபடியும் குர்ஆனை தான் ஒதுகின்றோம். என் குடும்ப உறுப்பினர்கள் இன்று தொழுகையையும் நிறைவேற்றினார்கள்" என்று கூறுகின்றார்.

"இது மதமாற்ற நிகழ்வு என்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் முஸ்லிம்கள், இனியும் அப்படியே தொடர்வோம்" என்கின்றார் அவர்களில் ஒருவரான நூர் முஹம்மத். இதே போன்ற தகவலையே தெரிவிக்கின்றார் மற்றொருவரான இஸ்மாயில்,"நாங்கள் இஸ்லாமியர்கள். ஹிந்து மதத்திற்கு நாங்கள் மாறவே இல்லை". 

கடுமையான சூழ்நிலையில் வாழும் தங்களை நாற்பது-ஐம்பது பேர் சூழ்ந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு மிரட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வினவுகின்றனர் இம்மக்கள். 

தாங்கள் மதம் மாறவில்லை என்று இவர்கள் அறிவித்திருப்பது சங்பரிவாரங்களை கொதிப்படைய செய்துள்ளது. வெளி உலகின் அழுத்தத்தாலேயே இவர்கள் மறுபடியும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு திரும்பி விட்டதாக அவர்கள் புகார் செய்கின்றனர். 

அவரவர் விரும்பும் சமயத்தை பின்பற்ற/மாற அனைவரும் உரிமையுண்டு. ஆனால் கட்டாயப்படுத்தி/ஆசைக் காட்டி மதமாற்றுகின்றார்கள் என்று கிருத்துவ மிஷனரிகள் மீது குறை கூறும் சங்பரிவாரங்கள் அதே செயலை தாங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று கூற வேண்டும்.

அதே சமயம், இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. பகுஜன் சமாஜ் முன்மொழிந்த இப்பிரச்சனையை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தனர். இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மாநில விவகாரம் என்பதால் இதில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மோடி பதவியேற்றதில் இருந்து இன/மொழி/மதரீதியான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தி ஹிந்துவில் இதுக்குறித்த செய்திக்கு பின்னூட்டமிட்டவர்கள் கூறியுள்ளனர். அது தான் நிதர்சனமான உண்மையும் கூட...

நன்றி: 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

0 comments: