Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday 26 August 2015

எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்??


கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம். 


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் மூலம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்தவர்கள், இன்று, தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்கள். 

1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கட்தொகையில் பதினைந்து சதவிதம் பட்டேல் சாதியினர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக வலுவானவர்களாக கருதப்படும் பட்டேல் பிரிவினர், 1970-கள் வரை காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்கள் எண்ணங்களுக்கு காங்கிரஸ் செவி சாய்க்க மறுத்ததால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இன்று வரை அது தொடர்கின்றது. 

இதற்கான பிரதிபலன்களை நாம் கண்கூடாக பார்க்க முடியும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல் பிரிவை சார்ந்தவர்களே. 

ஆக, செல்வ செழிப்பான வாழ்வை அனுபவித்து வருவதாக கருதப்படும் இவர்கள், இட ஒதுக்கீடு கேட்பதற்கான மர்மம் என்ன? 

வெளியே ஊதி பெருக்கப்படும் 'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற திட்டங்கள் எடுபடாததே இதற்கு காரணம். உதாரணத்திற்கு, இவர்கள் கோலோச்சி உள்ள தொழில்களில் ஒன்றான வைர வியாபாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சுமார் 150 நிறுவனங்கள் வரை சமீபத்தில் மூடுவிழா கண்டுள்ளன. ஆக, தங்களின் எதிர்கால சந்ததிகள், கல்வி மற்றும் அரசு பணிகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனை முன்னோக்கியே லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்ளும் சமீப கால போராட்டங்கள், அதன் வெளிப்பாடாக கலவரங்கள். 

இவர்களை வழிநடத்துவது ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் என்பது நம்புவதற்கு கடினமானதாக இருக்கின்றது. இவரை கைது செய்த போது தான் கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 


இவர்கள் கேட்பது 27 சதவித இடஒதுக்கீடு. எந்தவொரு மாநிலத்திலும், இட ஒதுக்கீடு என்பது ஐம்பது சதவிதத்தை தாண்டி இருக்க கூடாது என்பது உச்சமன்ற தீர்ப்பு. குஜராத்தை பொருத்தமட்டில், இந்த உச்சவரம்பை ஏற்கனவே எட்டி விட்டது. ஆக, பட்டேல்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சாத்தியமாக வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏற்கனவே இருக்கும் ஏனைய சமூகத்தினருக்கான சதவிதத்தை குறைத்து அல்லது பிடுங்கி தான் இவர்களுக்கு தர முடியும். அப்படி நடந்தால் குஜராத் ஸ்தம்பிக்கும் அளவு தங்களின் எதிர்ப்பு இருக்கும் என்று OBC பிரிவில் இருக்கும் சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவிட்டனர். 


இந்த பிரச்சனையானது மற்ற சமூகத்தினரை தூண்டும் அளவு சென்றது/செல்வது தான் பரிதாபமானது. சில தினங்களுக்கு முன்பு, பட்டேல் சமூகம் நடத்திய ஒரு பேரணியில் தலித்துகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது. 

சாதிய பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இவை அனைத்தும் சுமூகமான தீர்க்கப்பட்டு குஜராத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
படங்கள்: இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி சேகரிக்க உதவியவை: NDTV, CNN IBN, TOI மற்றும் இந்தியா டுடே

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குஜராத் வளர்ச்சியில் முதலிடம்
முன்மாதிரி மாநிலம் என்றல்லவா நினைத்தேன்

Unknown said...

Where there is a will, there is a way.

Unknown said...

Where there is a will, there is a way.

Unknown said...

நல்ல தகவல்கள்.

Unknown said...

அருமையான தகவல்.